சிங்கப்பூரில் தாய்மொழி தொடர்ந்து தழைக்க வேண்டும் எனப் பேரார்வம் கொண்டிருக்கும் இளையர்களின் உன்னத முயற்சியால் களம்கண்டது ‘யுத்தம்’ விளையாட்டுப் போட்டி.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த வருடாந்தர போட்டியின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறியது.
சிங்கப்பூர் இளம் தலைமுறையினர் இடையே தமிழ் மொழி ஆர்வத்தை மேலும் வளமையாக்கும் இலக்குடன் நடந்தேறியது இந்நிகழ்ச்சி. இளையர்களால் நிரம்பி வழிந்தது அரங்கு.
வந்திருந்தோரின் தமிழார்வத்தைத் துடிப்புடன் வெளிப்படுத்த ஏதுவாக மொழிவளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக ‘இங்க என்ன சொல்லுது’, ‘சிங் இன் த ரெயின்’ எனச் சுவாரசியமாகப் பெயரிடப்பட்ட சுற்றுகள் போட்டியாளர்களை மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தன.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவு மாணவர்களுக்கான இப்போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.
அப்பள்ளிக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுத் தந்தனர் மாணவியர் சரவணன் வைஷ்ணவி, 14, விக்னேஸ்வரி தனபாலன், 14, ஸ்ரீவள்ளி, 15.
அதுகுறித்துத் தமிழ் முரசிடம் பேசிய அவர்கள், தமிழ் மொழிமீது தாங்கள் கொண்டுள்ள பற்றே இந்த வெற்றிக்குக் காரணம் என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘‘ஒவ்வொரு விளையாட்டும் மொழிவழியாகவே வடிவமைக்கப்பட்டு சுவாரசியமாக அமைந்தது. இதனால் ஆட்டத்தை முழுமையாக ரசித்து விளையாடினோம்,’’ என்றும் மாணவியர் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருந்தது. போட்டிச் சுற்றுகளுக்கு இடையே இடம்பெற்ற வீணையின் இன்னிசை, அழகிய கவிதைச் சாரல், நடனம் ஆகியவை முத்தமிழால் அரங்கை அலங்கரித்தன.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் கிரசெண்ட் பெண்கள் பள்ளி, சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராஃபிள்ஸ் கல்விநிலையம் ஆகியவை இப்போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறின.
விழா குறித்துத் தமிழ் முரசிடம் பேசினார் பேரவையின் உறுப்பினர் கௌசிகன் யோகநாதன், 22.
‘‘தமிழ்மொழி விழாவின் கருப்பொருளான ‘ஈடுபாடு’ என்பதை மனத்தில்கொண்டு, ஏற்பாடுகளைச் செய்தோம்.
‘‘குறிப்பாக, இதுவரை இப்போட்டியில் கலந்துகொள்ளாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை ஈர்க்கவும், அவர்களையும் விழாவில் இணையச்செய்யவும் சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டன,’’ என்றார் திரு கெளசிகன்.
மேல்நிலைப் பிரிவினருக்கான ‘சிங் இன் த ரெயின்’, ‘திருடா திருடி’ ஆகிய சுற்றுகளில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களான அரிசங்கர் கதிரவன், 23, மகாதேவன் ஆகாஷ், 25, மணிகண்டன் யுவனா, 22, ஆகியோர் வாகை சூடினர்.
அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்கள், தாங்கள் கற்றதைப் பயன்படுத்துவதற்குச் சிறந்த தளமாக இப்போட்டி விளங்கியதாகவும் கூறினர்.
இறுதிச்சுற்றில் பங்கேற்ற தமது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார் குமாரி கேகே, 20.
‘யுத்தம்’ 2026 மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்தேறியதைக் காணமுடிந்ததாகக் கூறிய அவர், ‘‘போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை ஊகிக்க முடிந்தது. பல புதிய தகவல்களை அறியவும் வாய்ப்பு கிட்டியது,’’ என்றார்.
நேரடிப் போட்டிகள் ஒருபுறமிருக்க, சமூக ஊடகத் தளமான இன்ஸ்டகிராமிலும் கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழுக்கும் அறிவிற்கும் விருந்தளிக்கும் வகையில் பேரவை மாணவர்கள் ‘விடுகதை வேட்டை’ எனும் அறிவுத்திறன் சவால் ஒன்றையும் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சவாலில் வென்றவர்களுக்கான பரிசும் விழா மேடையிலேயே வழங்கப்பட்டது.

