அ. முகமது அலி, நிர்வாக இயக்குநர், தி மீடியா நிறுவனம்
'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா' என்று ஆரம்பிப்பவை மட்டும் கதைகள் அல்ல.
தான் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், ஏற்ற பொறுப்புகள், சவால் கள், சாதனைகள், இவை அனைத்தும் உண்மையான உணர்வோடு சொல்லப் படும்போது, அவற்றுக்குக் கதை என்ற தகுதி வந்துவிடுகிறது.
இன்னும் சொல்லப்போனால், புனை யப்பட்ட கதைகளை விட வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் மகத்தானவை. சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் க.து.மு. இக்பாலைச் சந்தித்தேன் - ஒரு வாய்வழி வரலாற்று ஒலிப்பதிவுக் காக.
அவர் தன்னுடைய ஞாபக ஏடுகளை ஒவ்வொன்றாகப் புரட்டினார். தான் குழந்தையாய் இருந்த காலம், தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தது, படிக்க வேண்டிய வயதிலேயே வேலைக் குப் போனது, இலக்கியப் பத்திரிகை நடத்தியது, காதல், திருமணம், இப்படி எத்தனையோ செய்திகளை ஓர் இயல் பான தாள கதியோடு சொல்லிக்கொண்டிருந்தார். அந்தக் கதைகளில்தான் எத்தனை ஈரம். அப்போது தோன்றியது, பாடப் புத்தகத்தில் படிக்கும் வரலாறு, எல் லாவற்றையும் பேசாது என்று.
அதனூடே நிலவும் வெற்றிடங்களை நிரப்பக் கதைகள் தேவை. தனி மனிதர் களின் அனுபவங்கள் தேவை. உணர்ச்சி களில் தோய்ந்த சம்பவங்கள் தேவை. தேசிய மரபுடைமைக் கழகத்தின் முயற்சியில் இன்று இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டி ருப்பது பாராட்டுக்குரியது. இணையத்தில் அனைவரும் பல தலைமுறைகள் கேட்கத் தோதாகத் தந்திருக்கிறார்கள்.
கவிஞர் க.து.மு. இக்பால் சொன்ன அவரது வாழ்க்கைக் கதையில் இன்னும் ஒன்றை உணர முடிந்தது.
இது அவருடைய கதை மட்டும் அல்ல. அதனோடு சேர்ந்து இதமான பின்னணி இசையாய், ஒரு நாட்டின் கதை, சமூகத் தின் அடிச்சுவடு, கால ஓட்டத்தில் மாறி வரும் சூழல் என்று எத்தனையோ அம் சங்கள்.
ஒரு மூன்று மணி நேர உரையாடலில், வரலாற்றில் ஆங்காங்கே விடப்பட்ட இடை வெளிகளும் என் மனமும் நிறைந்திருந் தன.
நாம் ஒவ்வொருவரும் கதை சொல்லக் கூடியவர்கள்தான். நான் படித்த என்னுடைய தொடக்க நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, இவை இரண்டுமே இப்போது அவை நின்ற இடத்தில் இல்லை. அங்கு இப்போது வேறு கட்டடங்கள்.
நாம் வாழும் இந்தக் காலகட்டம் மாற் றங்கள் நிறைந்தவை. பல இடங்கள் சுவ டில்லாமல் மறைந்து போகின்றன. மறக்கப் படுகின்றன.
ஆனால் என் மகளோடு அந்த இடங் களைக் கடந்து செல்லும்போதெல்லாம் என் பள்ளி நாட்களை ஒரு திரைப்படம் போல் அவளது மனக்கண் முன்னால் ஓட்டிக் காட்ட நான் தவறுவதில்லை. நான் வாழ்ந்த அந்த நாட்களை, என் னுடைய பிள்ளைப் பருவத்தை, அன்றைய எனது சிங்கப்பூரை என் பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டும் என்ற துடிப்புதான் இதற் குக் காரணம். இதனால் என்ன பயன் என்று சில சமயங்களில் நான் யோசிப்ப துண்டு.
ஒரு முப்பதாண்டு கால இடைவெளியில், நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு; என் பிள் ளைகள் அறிந்த வாழ்க்கை வேறு. ஞாபகப் பதிவுகள் சரித்திர ஏடுகளை மட்டும் உருவாக்குபவை அல்ல. அவை ஓர் இனத்தின், ஒரு நாட்டின், ஒரு கூட் டத்தின் அடையாளத்தை உருவாக்குபவை. பல சந்தர்ப்பங்களில் அவை எழுத்தாக வடிவம் பெறுவதில்லை. வாய்வழிக் கதை களாகவே வடிவம் பெறுகின்றன.
இன்றுகூட நம்மிடையே இருக்கும் பெரியவர்கள் "ஜப்பான்காரன் காலத்தில" என்று ஆரம்பித்தால், அவை நம்முள்ளே எழுப்பும் அதிர்வுகள் ஆழமானவை. உணவில்லாமல் பல நாட்கள் இருந்தது, பயந்து பயந்து வாழ்ந்தது, வாழை மரம் சின்னம் பொறித்த நாணய நோட்டுகளைப் பயன்படுத்தியது என்று எத்தனையோ கதைகள் மூலம் அந்தக் காட்சிகள் நிழ லாடும். ஏனெனில் இவை அந்த நாட்களை வாழ்ந்து பார்த்தவர்களால் சொல்லப்படும் செய்திகள்.
சிங்கப்பூரில் மாற்றங்கள் அதிகம். இடித்துத் தரைமட்டமாக்கி தேவை கருதி நாம் மறுநிர்மாணம் செய்த இடங்கள் அதி கம். வேறு வழியில்லை என்று தோன்று கிறது.
இடிக்கப்படும் கட்டடங்களோடு காணா மல் போவது கல்லும் கம்பிகளும் மட்டு மல்ல. அங்கே வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைமுறையும் கலாசாரமும்தான். பழைய தேக்கா என்றால் சிலருக்கு ஏதோ ஒரு சிலிர்ப்பு தோன்றும். பழைய தேசிய நூலகத்தில் ஆரம்பித்த உண்மை யான காதல் கதைகள் உண்டு. அன்றைய ஃபேரர் பார்க் திடல் என் றால் மறுபடியும் நடந்து பார்க்கும் ஆசை யோடு எழும்பும் ஏக்கப் பெருமூச்சுகள் உண்டு.
இவற்றின் கருப்பு வெள்ளைப் புகைப் படங்களும் இந்த இடங்களைப் பற்றிய சின்னச் சின்னக் குறிப்புகளும், இன்றைய தலைமுறையினரை இவற்றின் அருகே கொண்டு போகலாம்.
ஆனால் அங்கு நடந்து, விளையாடி, நாணப்பட்டு, புன்னகைத்துச் சென்றவர்கள் சொல்லும் அவர்களது சொந்தக் கதை களில்தான் இந்த இடங்கள் இன்னும் வாழ்கின்றன. அடுத்த தலைமுறைக்கு நாம் தர விரும்புபவை என்று ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் இத்தகைய கதை களும் இருக்க வேண்டும்.
இவையும் சொத்துகள்தான். பயிர் கள், மரங்கள், இவற்றைப் போன்றே உறுதியோடு நிற்க மனிதர்களுக்கும் வேர்கள் தேவை.
சவால்மிக்க கட்டங்களில் எல்லாம் நம்மை ஒன்றாக, ஒரு சமூகமாக, ஒரே மக்களாக நிற்கச் செய்யும் வேர்கள் இவை. கதைகள் இந்த வேர்களின் ஆதாரம்.
இதற்குக் காரணம், இவர்கள் இந்தக் கூட்டத்தினர் என்று நாம் அடையாளப்படுத்தும்போது அவர்கள் ஒருமித்த ஞாபகப் பதிவுகளைக் கொண்டவர்கள்தான் என்பதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறோம்.
கலாசாரம், சமயம், மொழி, பாரம் பரியக் கோட்பாடுகள், இவற்றில் எந்த ஒன்றை ஆய்வு செய்தாலும், இந்த உண்மை புலப்படும். ஆகவேதான், நம் வாழ்க்கையில் கதைகளுக்கு எப்போ துமே ஒரு முக்கிய இடம் உண்டு. பிள்ளைகளோடு நாம் செலவிடும் நேரம் குறைவு. அப்போதெல்லாம் பாடங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் பற்றிப் பேசுவதுதான் அதிகம். இறுக்கம் நிறைந்த தருணங்களாக அவை அடிக்கடி மாறி விடுகின்றன. கொஞ்சம் இளைப்பாறலாமே, இத மான நம் கதைகளோடு. 2018-09-23 06:00:00 +0800

