ஆசியானின் 60 ஆண்டுப் பயணமும் சிங்கப்பூரின் தலைமையும்

ஆசியானின் 60 ஆண்டுப் பயணமும் சிங்கப்பூரின் தலைமையும்

படம்: சாவ்பாவ்

22 Nov 2026 - 3:17 pm

2 mins read

உலக அளவில் புவிசார் அரசியல் பதற்றமும் பொருளியல் நிச்சயமற்றதன்மையும் தீவிரமடைந்துவரும் இக்கட்டான சூழலில் 2027ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்கவுள்ளது. 

மணிலாவில் நடைபெற்ற 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் நிறைவில் தனியாகச் செயல்படுவதைவிட ஒன்றிணைந்து பயணம் செய்வதே வட்டாரத்தின் உண்மையான பலம் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஆசியான் அமைப்பு தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் சிங்கப்பூர் இப்பொறுப்பை ஏற்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தகைய சவாலான காலகட்டத்தில் ஆசியானை வழிநடத்துவதற்குத் தேவைப்படும் அனுபவமும் ஆளுமையும் பிரதமர் வோங்கிடம் உள்ளது.

2007ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் முதன்மைத் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியபோது, சிங்கப்பூரின் ஆசியான் தலைமைத்துவப் பணிகளை நேரில் கையாண்ட அனுபவம் அவருக்கு உண்டு. 

மாநாடுகளை நடத்துவதோடு நின்றுவிடாமல் கொள்கைத் தொடர்ச்சியையும் நிலையான தலைமைத்துவத்தையும் சிங்கப்பூரும் பிரதமர் வோங்கும் நிச்சயம் வழங்க முடியும்.

‘ஆழமான ஒருங்கிணைப்பு, விரிவான பங்காளித்துவம்’ எனும் கருப்பொருளை ஒட்டிச் சிங்கப்பூரின் செயல்திட்டம் எதிர்கால வளர்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் புதிதாகக் கையெழுத்தாகியுள்ள மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது இதில் முதன்மையானது.

இது எல்லை தாண்டிய வர்த்தக விதிமுறைகளை எளிதாக்கி 2030க்குள் வட்டாரத்தின் மின்னிலக்கப் பொருளியலை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த அதிகம் துணைபுரியும்.

அதேவேளை விரிவான பங்காளித்துவத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. மணிலாவில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் பிரதமர் வோங். 

வர்த்தகம், மின்னிலக்க இணைப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் ஆசியான்-இந்தியா குழுமங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடினர். 

பிளவுபட்டுவரும் உலகில் இந்தியா போன்ற நம்பகமான நட்பு நாடுகளுடனான பிணைப்பு வட்டார அமைதிக்கும் வளத்திற்கும் வித்திடும்.

இருப்பினும் ஆசியான் ஒற்றுமை என்பது அரசதந்திர அறைகளோடு சுருங்கிவிடக் கூடாது. 

பிரதமர் வோங் சுட்டிக்காட்டியபடி சாதாரண மக்களுக்கும் ஆசியானின் பயன்கள் சென்றடைய வேண்டும். 

அடுத்த 60 ஆண்டுகளுக்கும் ஆசியான் சுடரை அணையாமல் பாதுகாக்க நமது வர்த்தக நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், இளையர் ஆகியோர் ஒன்றிணைந்து எல்லை தாண்டிய உறவுகளை வலுப்படுத்த முன்வர வேண்டும்.

குறிப்புச் சொற்கள்