தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலன்களைப் பரவலாகப் பகிர்ந்தளிக்கும் திட்டம்

3 mins read
2fa3e394-1acf-4b37-b0e6-8d9f07a8917f
படம்: - தமிழ் முரசு

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க இவ்வாண்டு சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கூடுதல் உதவிகள் காத்திருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் நடைமுறை மேலும் தொடரவிருக்கிறது. அத்துடன், சிங்கப்பூரின் வைரவிழா ஆண்டை முன்னிட்டு, $600 முதல் $800 வரையிலான எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளும் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும்.

கூடுதல் யு-சேவ் கழிவுகள், பருவநிலைப் பற்றுச்சீட்டுகள், மெடிசேவ் நிரப்புத்தொகைகள், வழங்குதொகைகள், வருமான வரிக்கழிவு என, தனிமனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் பல்வேறு வழிகளில் ஆதரவு கிடைக்கவுள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளபோதும் புவிசார் அரசியல் பதற்ற நிலைகளால் விலைவாசி மீண்டும் உயரக்கூடும் என்பதைக் கவனத்தில்கொண்டு, பிப்ரவரி 18ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது இந்த ஆதரவுத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்.

தனிமனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் நிதியாதரவு கிட்டும்போது, அது பணப்புழக்கத்தைக் கூட்டி, சில்லறை விற்பனைத் துறையையும் இயங்கச் செய்து, பொருளியல் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே.

பொருளியலுக்கு மனிதவளத்தையும் வணிகத்தையுமே சிங்கப்பூர் பெரிதும் சார்ந்துள்ள நிலையில், மக்கள்நலம், தொழில்நலம் சார்ந்த முன்னெடுப்புகள் இடம்பெறவுள்ளன.

குறிப்பாக, சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வருவதைக் கருத்தில்கொண்டு, மூத்த ஊழியர்களைப் பணியில் வைத்திருக்க நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது. மூத்த ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்கு உதவும் வகையில் மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதமும் உயர்த்தப்படவுள்ளது.

மறுபுறம், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் நாட்டின் கருவள விகிதம் முன்னில்லாத வகையில் 0.97ஆகக் குறைந்தது.

தொடர்புடைய செய்திகள்

இந்நிலையில், இரு குழந்தைகளுக்குமேல் உள்ள பெரிய குடும்பங்களுக்கு ‘லைஃப் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் பல்வேறு ஆதரவுகள் கிடைக்கவுள்ளன.

இத்தகைய ஆதரவுகளால் சிங்கப்பூரர்கள் தாமதமின்றித் திருமணம் செய்துகொள்வர் என்றும் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஊழியர்கள், குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டுவோர் தொடர்ந்து தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளவும் அதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவும் அரசாங்கம் தனது ஆதரவை அதிகரித்துள்ளது.

அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு நிதியாதரவு வழங்க $1 பில்லியன் தனியார் கடன் வளர்ச்சி நிதி, தேசிய உற்பத்தித்திறன் நிதிக்கு $3 பில்லியன், செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளைக் கைக்கொள்ள $150 மில்லியன் நிதியாதரவு, சாங்கி விமான நிலைய வளர்ச்சி நிதிக்கு $5 பில்லியன், கரிம வெளியீட்டைக் குறைக்கும் நோக்கில் எதிர்கால எரிசக்தி நிதிக்கு $5 பில்லியன், கடலோர, வெள்ளப் பாதுகாப்பு நிதிக்கு $5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு பொருளியல் 4.4% வளர்ச்சி கண்டதாலும் பெருநிறுவன வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாலும் அரசாங்கம் அப்பலன்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறது என்று பிரதமர் வோங் தமது உரையின்போது குறிப்பிட்டார்.

அவ்வகையில், குடும்பங்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகள் என அனைவருக்கும் ஆதரவு வழங்கக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நிறுவனங்களுக்கும் 50% வரிக்கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

வீடுகளின் மறுவிற்பனை விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சொத்துச் சந்தைத் தணிப்பு குறித்த நடவடிக்கைகள் எதுவும் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை. வெளிநாட்டு ஊழியர் தீர்வை உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், அது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்.

சலுகைகள் தாராளமாக இடம்பெற்றுள்ள நிலையில், புதிய வரிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருவாயைப் பெருக்குவது குறித்த அறிவிப்புகள் இல்லை.

கூடுதல் வருவாய் கிட்டும் காலங்களில் அரசாங்கத்தின் சேமிப்பும் உயரவேண்டும். கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது, தன்னிடமிருந்த காப்புநிதி மூலம் அரசாங்கம் நம் மக்களுக்குப் பலவகையிலும் கைகொடுத்தது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றதிலிருந்து புதிய புதிய கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்து வருகிறார் டோனல்ட் டிரம்ப். அவை உலக வணிகச் சூழலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அதனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

எப்படி இருப்பினும், உபரி பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டாலும் அரசாங்கத்தால் அதனைச் சமாளிக்க முடியும் என்பது பொருளியல் வல்லுநர்களின் கருத்து.

மொத்தத்தில், முன்னரே அறிவித்ததுபோல, இது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஆதரவு வழங்கும், அனைவருக்குமான வரவுசெலவுத் திட்டம்.

குறிப்புச் சொற்கள்