நாம் பல்பொருள் அங்காடிகளுக்கும் பல்வேறு கடைகளுக்கும் செல்லும்போது, அங்கே பொருள்கள் நிரம்பி வழிகின்றன. உணவகங்கள் மேன்மேலும் பல உணவு வகைகளை வழங்குகின்றன. கடைத் தொகுதிகளில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிகின்றனர். வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் விலைகள் அதிகரித்த போதிலும், இன்னும் பலர் வாகனங்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வீடுகளுக்கான சந்தை இன்னும் ஆரோக்கியமாகவே உள்ளது. நம்மிடையே வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்து வருகின்றன. உலகப் பொருளியல் சூழல் நிச்சயமற்றதாக இருந்தபோதிலும் அதைப்பற்றிய உணர்வு அதிகமில்லாமல் நாம் வாழ்க்கையைத் தொடர்கிறோமோ எனத் தோன்றுகிறது.
மாறிவரும் உலகைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டும். வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். எதிர்கால இக்கட்டான சூழ்நிலைக்காக நாம் சேமிக்க வேண்டும். அனைத்துப் பொருளியல் பிரச்சினைகளையும் அரசாங்கம் கவனித்து, வரவிருக்கும் சிக்கல்களிலிருந்து நம்மைக் காக்கும் என்றும், நமது வேலை, வருமானம் ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்படும் என மெத்தனமாக இருப்பது தவறு.
நமது வாழ்க்கை வெகுவாக மாறப்போகிறது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கைமுறை மூலம் நாம் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கம் பல கொள்கை மாற்றங்களைச் செய்யவிருக்கிறது. ஆனால், நம்மை நாமே ஆக்கபூர்வமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இக்கொள்கை மாற்றங்கள் நமக்குப் பலனளிக்கும்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு (Commitee of Supply) குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக அமைச்சர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு அவை ஆதரவாக இருக்கும். 2026 பிப்ரவரி 24 முதல் மார்ச் 6 வரை, அமைச்சுகளின் திட்டங்களைக் கேட்கவும் வாசிக்கவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
மாறிவரும் உலகப் பொருளியல் சூழலில், சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய தீவு நாடு எப்போதும் விழிப்புடனும் துடிப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மற்ற நாடுகளை விடவும் உலகப் பொருளியலை அதிகம் சார்ந்துள்ள நாம், உலகளவில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தச் சூழலில், அரசு அறிவிப்பது வெறும் கொள்கை மாற்றங்கள் மட்டுமல்ல. அவை நாம் அனைவரும் பழகிக்கொள்ள வேண்டிய ஒரு புதிய வாழ்க்கை முறைக்கான வழிகாட்டி ஆகும்.
இன்றைய நவீன உலகில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயதோடு நின்றுவிடுவது அல்ல. மாணவர்கள் பட்டம்பெறுவதை ஒரு முடிவாகக் கருதாமல், தாங்கள் சேரும் ஒவ்வொரு வேலையையும் ஒரு புதிய கற்றல் அனுபவமாக நோக்க வேண்டும். தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், இன்று நாம் கற்கும் திறன்கள் நாளைப் பயன்படுத்தமுடியாமல் போகலாம்.
அடிப்படைகள் மாறாதிருந்தாலும் செயலாக்கங்கள் மாறியிருக்கும். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் எதிர்கால வாழ்க்கையை நிச்சயம் திசைதிருப்பும். கல்வி அறிவையும் தாண்டி, எப்படிக் கற்பது எனும் திறனை வளர்ப்பதற்காக என்றே கருதவேண்டும். மீண்டும் மீண்டும் கற்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் எதையும் எளிதில் உள்வாங்கிக்கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதே சமயம், பணியில் இருப்போரும் நாம் பலகாலம் செய்யும் தொழில் நமக்குத் தெரிந்ததுதானே என்ற எண்ணத்தைக் கைவிட்டு, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தங்களை மெருகேற்றிக்கொள்ள மறுபயிற்சித் திட்டங்களில் முனைப்பாய் ஈடுபட வேண்டும். வேலையில் நிலைத்து நிற்க வாழ்நாள் கற்றல் என்பது விருப்பமாய் மட்டும் இல்லாமல், தேவையாக மாறியுள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் வேளையில், நமது அன்றாடப் பழக்கவழக்கங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆடம்பரத் தேவையைக் குறைக்க வேண்டும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, நமது பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டின் பலம் அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் உள்ளது. பெருகி வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க, நோய் வரும்முன் காப்பதே சிறந்தது. முறையான தூக்கம், சரிவிகித ஆரோக்கிய உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றை வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது தனிநபரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்தத் தேசத்தின் மருத்துவச் சுமையையும் குறைக்கும்.
சிங்கப்பூர் என்பது உலகப் பொருளியல் கடலில் பயணிக்கும் ஒரு சிறிய படகு. அலைகள் உயரும்போது நாம் அஞ்சக்கூடாது. மாறாக, படகின் திசையை விரைவாக மாற்றி, அலைகளின் வேகத்தையும் வளைவு நெளிவுகளையும் பயன்படுத்தி, முன்னேறப் பழக வேண்டும். புதிய திறன்களைக் கற்போம், பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வோம், ஆரோக்கியமான சிங்கப்பூரர்களாக இந்த உலகளாவிய மாற்றங்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். ஒன்றிணைந்து செயல்படுவோம்.

