சிந்தனையில் மாற்றத்துடன் சிறப்பாகப் பங்களிக்கும் தந்தையரை வாழ்த்துவோம்

3 mins read
946e2ed6-a38b-46a3-8782-3f0b8fee4afb
பிள்ளைவளர்ப்பில் தந்தையும் முழுமனத்துடன் ஈடுபடும் குடும்பத்தில் பிள்ளைகள் மேம்பட்ட வளர்ச்சி காண்கின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.  - சித்திரிப்பு: பிக்சாபே

உறவுகளும் அவை தரும் உணர்வுகளும்தான் மனித வாழ்வின் அடித்தளம் என்றால் அது மிகையாகாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரான தாய், தந்தை இருவரின் பங்களிப்பும் அடிநாதமாகக் கருதப்படுகிறது.

பிள்ளை வளர்ப்பு என்பது அன்னையின் கடமை என்று ஒதுங்கிக்கொள்ளாமல் தந்தையும் முழுமனத்துடன் அதில் ஈடுபடும் குடும்பத்தில், பிள்ளைகள் மேம்பட்ட வளர்ச்சி காண்பதாகப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

அறிவியல் ஆய்வுகள் இன்று அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டாலும் பன்னெடுங்காலமாகவே தமிழரின் வாழ்வியல் அதை உணர்த்தியதைத்தான், “தந்தை ஒப்பர் மக்கள்,” என்ற தொல்காப்பியக் கூற்று நமக்குப் புலப்படுத்துகிறது.

பிள்ளைகள் அப்பாவின் மறு அச்சுபோல இருப்பர் என்பதன்று இதன் பொருள். அவரின் நடத்தை, குணங்கள், பழக்கவழக்கங்கள் இவையெல்லாம் குழந்தைகளிடம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர் முதல் ஆசான்.

அவர் தன்னையும் குடும்பத்தின் இதர உறுப்பினர்களையும் நடத்தும் விதத்தைக் கவனித்து, தான் நடந்துகொள்ள வேண்டிய விதத்தைப் பிள்ளை தீர்மானிக்கிறது.

பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாணும் பண்பை அப்பாவிடமிருந்து அது கற்றுக்கொள்கிறது.

தந்தையிடம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வை அடித்தளமாகக் கொண்டு சமூகத் திறன்களையும் ஆரோக்கியமான எல்லைகளையும் வடிவமைக்கப் பழகுகிறது.

ஒரு குழந்தை தன் தந்தையுடன் கொண்டுள்ள உறவின் ஆழத்துக்கு ஏற்பவே அது தனது உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் போன்றோருடன் ஆக்ககரமான உறவை வளர்த்துக்கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கெடுபிடியுடன் பிள்ளைகள் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதைவிட அன்றாடம் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி, அன்பை வெளிப்படுத்தி, மனம்விட்டுப் பேசக்கூடிய, நம்பிக்கைக்குரிய உறவாய்த் தந்தை விளங்கும்போது பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்குகிறார்கள்.

மக்கள் இவற்றைப் புரிந்துகொண்டிருப்பதால், இன்றைய காலகட்டத்தில் ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு’ என்ற சமூக வரையறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. பிள்ளைப் பராமரிப்பை முழுக்க முழுக்கத் தன் மனைவியின் தலையில் கட்டிவிட்டுக் கைகட்டி நிற்பதில்லை இன்றைய அப்பா.

இதற்கேற்றாற்போல், குடும்பம் என்ற அம்சம் சிங்கப்பூர்ச் சமூகத்தின் முக்கியக் கூறு என்றும் அடிப்படைக் கொள்கை என்றும் சென்ற ஆண்டின் தேசியக் குடும்ப விழாவில் பேசியபோது பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் குடும்பங்களின் பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் அரசாங்கக் கொள்கைகள் அமைந்திருக்கும் என்று அவர் உறுதிகூறினார்.

ஆண்கள் வேலைக்குச் செல்லவேண்டும்; பெண்கள் வீட்டைப் பேண வேண்டும் என்பன போன்ற குடும்பப் பங்களிப்பு குறித்த பழங்காலச் சிந்தனைகள் மாறவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்த் தந்தையர், பிள்ளை வளர்ப்பில் அப்பாவின் பங்கு குறித்த பழங்கால வரையறைகளைவிட்டு வெளியேறிவிட்டனர் என்றே கூறலாம்.

பிள்ளைப் பராமரிப்பில் அவர்கள் சமமாகப் பங்களிக்கத் தயங்குவதில்லை. குடும்பத்திற்குப் பொருளியல் ரீதியான ஆதரவு என்பதற்கு அப்பால், கூடுதலாகச் செயல்பட அவர்கள் முன்வந்துள்ளனர்.

இவையெல்லாம் திடீரென்று நிகழ்ந்த தலைகீழ் மாற்றங்கள் அல்ல. அரசாங்கக் கொள்கைகளும் இந்த முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியுள்ளன.

புதிதாகப் பிறந்த குழந்தையின் தந்தை அதிகபட்சம் நான்கு வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள, ‘அரசாங்கம் பணம் தரும் பகிர்ந்து கொள்கிற பெற்றோர் விடுப்புத் திட்டம்’ கைகொடுக்கிறது. இதன் தொடர்பில், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு குறித்த முத்தரப்பு வழிகாட்டிக் குறிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலாளிகளும் சக ஊழியர்களும் ஆதரவுடன் நடந்துகொண்டால் இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் உந்துதல் தந்தையர்க்கு ஏற்படக்கூடும்.

குடும்பத்தின் புதிய வரவுடன் சிறிது நாள் செலவிடுவதற்கான இந்த ஏற்பாடு, தந்தையர் மேற்கொள்ளவிருக்கும் நெடும்பயணத்தில் ஆக்ககரமாகப் பங்களிக்கும்.

தந்தையின் கடமையாக வள்ளுவர் குறிப்பிடும் ‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என்பது பொருளியல் சார்ந்த வெற்றிக்கு இட்டுச்செல்வது மட்டுமன்று. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தோள்கொடுக்க உனக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை ஊட்டுவதுதான் முக்கியக் கடமை.

சமூகத்தின் பழைய கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி, பிள்ளை வளர்ப்பில் பல்வேறு பொறுப்புகளைத் தயங்காமல் தோளில் சுமக்கும் இக்காலத் தந்தையர்க்கு இந்தத் தந்தையர் தினத்தில் உளமார நன்றி கூறுவோம்.

இத்தகைய சிந்தனைச் செறிவு சிங்கப்பூர்ச் சமூகத்தின் தனித்துவம் என்ற அடையாளத்தைக் கால ஏட்டில் பொறிப்போம்!

குறிப்புச் சொற்கள்