சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவுற்ற சூழலில் வரலாற்றுப் பரிசாக கைகளில் தவழ்கிறது, அண்மையில் வெளியிடப்பட்ட ‘ தி ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ (The Albatross File: Inside Separation) புத்தகம்.
அதனைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ள ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ நிரந்தரக் கண்காட்சியும் தேசத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற வரலாற்றுப் பரிசாகும்.
இது வெறும் காகித ஆவணங்களின் தொகுப்பல்ல; நமது தேசத்தின் தொடக்கக் காலப் போராட்டங்கள், சவால்கள், தீர்க்கமான முடிவுகள் ஆகியவற்றின் நேரடிச் சான்றாக அமைகிறது.
இந்த ஆவணங்களின் வெளியீடு, நம் நாடு கடந்த சில மாதங்களாக அரவணைத்துவரும் தலைமைத்துவ மாற்றத்துடன் ஒன்றிணைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின் பிறந்த முதல் தலைமுறைத் தலைவர்களின் கரங்களில் நம் தேசத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், நமது வேர்களை, நமது ஆரம்பப் பாடங்களை அறிந்து கொள்வது என்பது வெறும் விருப்பமல்ல, அது காலத்தின் கட்டாயம்.
அன்றைய தலைவர்கள் எதிர்கொண்ட சவால்களின் ஆழத்தை, இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. நெருக்கடியான காலகட்டங்களில், நாட்டு நலனுக்காக அவர்கள் மேற்கொண்ட தியாகங்களையும் கடுமையான முடிவுகளையும் இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள இந்த ஆவணங்கள் ஓர் உண்மையான கண்ணாடியாகப் பயன்படும்.
இந்தக் கோப்புகளில் மறைந்திருந்த உண்மைகள் இப்போது வெளிவருவது, நம் தேசியக் கதையை மேலும் முழுமையாக்குகிறது. இதுவரை நாம் அறிந்துவந்துள்ள கதைக்கு இந்தப் புதிய ஆவணங்கள் மறுவடிவமும் வேறொரு கண்ணோட்டத்தையும் தருகின்றன. முதல் பிரதமர் லீ குவான் யூவுடன் இணைந்து செயல்பட்ட முதல் தலைமுறைத் தலைவர்கள், குறிப்பாக திரு கோ கெங் சுவீயின் அரசியல் தந்திரம் போன்றவற்றை வெளிக்கொணர்கிறது இந்தத் தகவல் பெட்டகம்.
ஒரு தேசமாக நாம் எப்படி ஒன்றுபட்டோம், எப்படிக் கட்டமைக்கப்பட்டோம் என்ற தெளிவான பார்வையை இது வழங்குகிறது. நமது குடிமக்களிடையே தேசியப் பிணைப்பையும் ஒருங்கிணைந்த உணர்வையும் வலுப்படுத்த இது ஒரு மாபெரும் ஊட்டச்சத்தாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
வரலாறு என்பது வெறும் பழைய நிகழ்வுகளின் தொகுப்பல்ல; அது எதிர்காலத்திற்கான வழிகாட்டி. அத்தகைய எண்ணத்திலேதான் நிறுவியோர் நினைவகம் கட்டப்பட்டுவருகிறது; நீண்ட விவாதங்களும் அரசாங்கத் தரப்பில் ஆழமாக ஆய்வு செய்தபின்னரும் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூவின் எண் 38 ஆக்ஸ்லி சாலை இல்லம் இரண்டு நாள்களுக்கு முன், 77வது தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய வரலாற்று இடங்களும் ஆவணங்களும் காட்டும் உண்மைகள், நமது தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், பண்புநலன்களை உருவாக்கவும் மேலும் வலிமையான, ஒற்றுமையான சிங்கப்பூரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் ஊக்கமளிக்கட்டும்.
வாசகர்கள் அனைவரும் புதிய கண்காட்சியைப் பார்வையிட்டும், புத்தகத்தை வாசித்தும் நமது வேர்களை ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது தமிழ் முரசின் விருப்பம்.

