மின்சிகரெட்டுக்கு எதிராக சிங்கப்பூர் கொண்டுள்ள நிலைப்பாடு புதிதன்று. ஆனால், கேபோட்ஸ் (KPods) எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாடு, இந்த விவகாரத்தை மேலும் கூரிய கவனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நிக்கோட்டின் எனப்படும் புகைநஞ்சு தோய்ந்த இக்கருவிகள், தோற்றமயக்கம், சுயநினைவிழப்பு, நீண்டகால மூளை பாதிப்பு ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய இட்டோமிடேட் (etomidate) என்ற ஆற்றல் வாய்ந்த மயக்க மருந்தையும் கொண்டுள்ளன.
கவலையான போக்கு என்னவெனில், இந்த மின்சிகரெட்டுகள் பரவலாகப் பள்ளிகளிலும் குடியிருப்புகளிலும் ஏன், பொதுப்போக்குவரத்திலும் கூடக் காணத்தொடங்கியிருக்கின்றன. பதின்ம வயது இளையர்களும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இருபதுக்கும் அதிகமான ‘கேபோட்ஸ்’ தொடர்பான சம்பவங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது.
இந்த ஏற்றம், சட்ட ஒழுங்கைக் கடந்த, சமூக அளவிலான பதில் நடவடிக்கைக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தைப் பற்றி மேலும் வெளிப்படையாகப் பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் பேச வேண்டும். பேசுவதோடு நின்றுவிடாமல் இப்போக்கைத் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
மின்சிகரெட்டுகள் தீயவை என்பதை பிள்ளைகளுக்குச் சொன்னால் மட்டும் போதாது.
பழம்சார்ந்த தித்திப்புச் சுவைகளும் போலியான பாதுகாப்பு உத்தரவாதங்களும் கொண்டுள்ள இந்தக் கருவிகள் இளையர்களைக் கவரும் விதமாக வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது என்பதை அவர்களுக்குத் தெளிவுற விளக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான வேதிப்பொருள் சோதனைகளில்கூட தென்படாத நச்சுப்பொருள்கள் சில நேரங்களில் மின்சிகரெட்டுகளில் சேர்க்கப்படுகின்றன.
நச்சுப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளுடன் தொடர்புடைய சம்பவங்களை அடையாளம் கண்டு பதிவு செய்வதற்காக சுகாதாரத் துறை ஊழியர்களை சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் ஈடுபடுத்தியுள்ளன.
ஆனால் சட்ட ஒழுங்கு தனித்தே இயங்க இயலாது. முன்தடுப்பு நடவடிக்கை வீடு முதல், பள்ளிகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும், இளையர்கள் தங்கள் நேரத்தை அதிகம் செலவிடும் மின்னிலக்க வெளிகளில் செயல்படுத்தப்படவேண்டும். இது சட்ட விவகாரமோ சுகாதார விவகாரமோ மட்டுமன்று. இது சமூக விவகாரம் என்பதை சமூகம் உணர்வது முக்கியம்.
சுற்றியிருப்பவர்களின் நெருக்குதல், இணையப் போக்குகள், மயக்கப் பொருள்கள் ஆகியவற்றைத் தனித்து ஆராய இளையர்களை விட்டுவிடக்கூடாது.
கேபோட்ஸ் புழங்குவதால் ஏற்படும் கடும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வு வலுவாக இல்லை. இந்தப் புழக்கத்தால் சிலர் உடனடியாக இறப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதைப் பலரும் அறியவில்லை.
போதைப் பொருள்களை மருந்து எனச் சிலர் விபரீதமாக எண்ணவும் செய்கின்றனர். சிறிதளவு உட்கொண்டால் ஆபத்தில்லை என்ற கருத்தை அவர்கள் வெளிப்படுத்தலாம். இது, உண்மைக்கு மிகவும் புறம்பானது.
பெற்றோர்களும் பெரியவர்களும், மின்சிகரெட்டுகளுக்கு எதிரான போராட்டக் களத்திற்கு இந்தப் பண்புகளைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.
இளையர்கள் உணரும் பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட மனக்காயங்கள் அவர்களைப் பல நேரங்களில் கொடிய பழக்கங்களுக்குத் தள்ளிவிடுகின்றன.
தென்கிழக்காசிய வட்டார அளவில் நடைபெறும் நிகழ்வுகளும் மற்றொரு காரணம். தாய்லாந்தில் போதைப்பொருள் உட்கொள்ளுதல் தொடர்பான தளர்வான அணுகுமுறை, மியன்மாரிலுள்ள அரசியல் பதற்றத்தால் அங்கு அதிகரித்துவரும் போதைப்பொருள் தயாரிப்பு ஆகியவையும் வட்டார அளவில் போதைப்பொருள் புழக்கத்தை அதிகரித்துள்ளன.
இளையர்களுக்கான மனநல உதவிக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவேண்டும். கல்வித்துறை, சுய சமூக உதவிக்குழுக்கள், கல்வி அறக்கட்டளைகள், ஆர்வலர் குழுக்கள் ஆகியவை இதற்குப் பங்களிக்கலாம்.
வெள்ளம் வருமுன் அணைபோடுவோமாக. இளையர்களுக்குத் தரப்படும் சிறு அன்பு வார்த்தைகளும், தடுமாறுகிற அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்த வல்லவை.
புலனடக்கம், சுய கட்டுப்பாடு என்பவை தங்களுக்குத் தாங்களே புரியும் அன்புச்செயல் என உணரும் இளையர்கள், வருங்கால வெற்றியாளர்கள். உணர்ச்சிவழி நடப்பவர்கள், ஏமாளிகளே.
இளையர்களின் எதிர்காலத்தை பகடையாடும் இந்தக் கொடிய பழக்கத்துக்கு எதிரான போர் முழக்கம் செய்ய வேண்டிய தருணம் இது. மின்சிகரெட் தொடர்பான நெருக்கடிக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது கட்டாயம்.