சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.
ஆண்டுக்காண்டு தைப்பூசத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏறத்தாழ 16,000 பக்தர்கள் காவடி, பால்குடம் என நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். சென்ற ஆண்டில் 14,000ஆக இருந்த அந்த எண்ணிக்கை இவ்வாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 30,000 பேர் பங்கேற்கும் இவ்விழாவை வழிநடத்துவது எளிதான செயலன்று. அதற்குத் தேவைப்படும் பல மாத காலத் திட்டமிடலும் பலரது பங்களிப்பும் அனைவரும் அறிந்தது.
அவ்விழா சீராக நடந்தேற சிங்கப்பூர் காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம் போன்ற பல அரசாங்க அமைப்புகள் பங்களிக்கின்றன. தண்ணீர்ப் பந்தல், அன்னதானம், ஊர்வலப் பாதையில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பது எனப் பல வழிகளில் தொண்டூழியர்களும் கைகொடுக்கின்றனர்.
இவ்வாண்டின் தைப்பூசம் வெற்றிகரமாக நிறைவடைந்தாலும் வரும் ஆண்டுகளில் இந்தத் திருவிழாவை மேலும் சீராக்க முயற்சிகள் தேவை.
இம்முறை காவடியும் பால்குடமும் சுமந்த பக்தர்கள், சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் கூட்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது என்று தமிழ் முரசிடம் பேசியவர்களும் சமூக ஊடகப் பதிவுகளிலும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். முதியோர், குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு காத்திருப்பு கூடுதல் சவாலாக இருந்தது.
கூட்டத்தில் வேகமாக முன்னுக்குச் செல்ல சில பக்தர்கள் தவறான முறையில் காவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்தினர். அலகு குத்தும் பெருமாள் கோயில் வளாகத்தில் ஆண்களுக்குக் குளியல் வசதிகள் இருப்பதுபோல பெண்களுக்கு முறையான வசதிகள் இல்லை என்பது மற்றொரு கவலை.
காவடி எடுப்போர் தைப்பூசத்தன்று (பிப்ரவரி 11) அதிகாலை 2 மணிக்கு பெருமாள் கோயிலுக்குள் வரலாம் என்று நிர்வாகம் முதலில் தெரிவித்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் காவடிகள் அந்நேரத்தில் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தைப்பூசத்திற்கான ஈர்ப்பையும் அதிகரித்துவரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் கருத்தில்கொண்டு, அதற்கான நடைமுறைகள் மேம்படுத்தப்படலாம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் முதல் பக்தர்கள், பார்வையாளர்கள் வரை பலரும் கருத்துரைத்துள்ளனர்.
இந்து அறக்கட்டளை வாரியமும் விழாவை ஏற்று நடத்தும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலும் தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும் என்று உறுதிகூறியுள்ளன. இதில் விழாப் பங்குதாரர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரது கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
நேர்த்திக்கடன் செலுத்தும் வசதிகளையும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வழிமுறைகளையும் விழாக்குழு மறுஆய்வு செய்யலாம். காவடி, பால்குடம், பொதுவான பக்தர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் வெவ்வேறு வரிசைகளை ஏற்படுத்தி, மற்ற பாதைகளில் அத்துமீறி நுழைபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
முக்கியமாக, அதிகாரபூர்வ ஊடகங்கள், சமூக ஊடகங்கள்வழி உடனுக்குடன் தகவல்களைப் பகிரலாம். இது போன்ற பெரிய நிகழ்வுகளில் பல அம்சங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம். மாற்றங்களையும் நிலவரத்தையும் பக்தர்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பது நல்லது.
பத்துமலை போல முதல் நாளே பால்குடம் செலுத்த அனுமதிப்பது குறித்து யோசிக்கலாம். அதேபோல சிங்கப்பூரின் மற்ற பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தைக் கொண்டாடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கலாம்.
தைப்பூசப் பாதையில் தண்ணீர்ப் பந்தல்களை அதிகரிக்கலாம். வரிசையில் காத்திருக்கும் அலுப்பும் அயர்வும் தெரியாமல் இருக்க தாகத்தைத் தீர்க்க உதவுவது பெரிதும் கைகொடுக்கும்.
மறுஆய்வைத் தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதும் பலரது கவலை. விழா என்பது கொண்டாட்டத்திற்கானது; களிப்பும் குதூகலமும் நிறைந்திருப்பது; இசைத்து முழங்கி, ஆடிப் பாடி, பேசிச் சிரித்து மகிழ்ந்திருப்பது.
இந்துக்கள் மட்டுமின்றி, பிற இனத்தவரும் சமயத்தவரும் பங்கேற்கும் திருவிழா தைப்பூசம். சுற்றுப்பயணிகளுக்கு சிங்கப்பூரின் தனித்துவமான பண்பாட்டையும் மரபையும் பறைசாற்றும் கொண்டாட்டம். அக்காலகட்டத்தில் வணிகர்களுக்கும் சேவைத்துறையினருக்கும் வருமானம் ஈட்டித் தரும் நிகழ்வாகவும் அது அமைகிறது.
பாரம்பரியத்தைப் பேணுவதுடன் மக்கள் ஒன்றுபட்டுக் கொண்டாட வாய்ப்பாக அமையும் தைப்பூசம் போன்ற விழாக்கள் நமக்குக் கட்டாயம் தேவை. விழாக்களை மனநிறைவு தரும் கொண்டாட்டமாக நிலைத்திருக்கச் செய்வதில் அரசாங்கம், நிர்வாகத்துடன் பொதுமக்களுக்கும் பெரும் பங்குண்டு.
வரிசை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது, இயலாதோருக்கு விட்டுக்கொடுப்பது, பெருங்கூட்டத்தைக் கருத்தில்கொண்டு செயல்படுவது என்று பக்தர்களும் புரிந்துணர்வோடு நடந்துகொள்வது முக்கியம். புனிதமான விழாவில் கூத்தாடுவது, மதுபானம் அருந்துவது போன்ற முறைகேடான செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
எதிர்கால தைப்பூச விழாக்களை மேம்படுத்த தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்களின் கருத்துகளை மறுஆய்வில் திரட்டுவது உதவியாக இருக்கும். அடுத்த ஆண்டு தைப்பூசம் இன்னும் சிறப்பாக, அனைவருக்கும் முழு மனநிறைவு தருவதாக அமையும் என்று நம்புவோம்.

