சுதந்திர சிங்கப்பூரைச் செதுக்கிய முன்னோடிகளின் தியாகங்களையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கில் ‘நிறுவியோர் நினைவகம்’ (Founders’ Memorial) அமைக்கப்பட்டிருக்கிறது. நினைவகம் இப்போது, சுதந்திரச் சிங்கப்பூரின் கதைகளைச் சேகரிப்பதில் கவனம் செலுத்திவருகிறது.
வேகமாக மாறிவரும் சூழலில், வரலாற்றுத் தடங்கள் மறைந்துபோவதற்கான சாத்தியம் உள்ளது. அதனை மனத்திற்கொண்டு, சுதந்திரக் காலகட்டத்தில் வாழ்ந்த 60 வயதுக்கும் மேற்பட்ட தமிழ் முன்னோடிகளை அழைத்து, அவர்களின் அரிய நினைவுகளைப் பதிவுசெய்த பணி மிகவும் போற்றத்தக்கது. அதன்வழி திரட்டப்பட்ட நினைவுப்பெட்டகங்கள் வரும் தலைமுறையினர்க்கு ஒரு வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணம்.
அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோடிகள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள், அவர்களின் எளிய அன்றாட வாழ்க்கைமுறை, சந்தித்த பொருளியல் நெருக்கடிகள், சமூகச் சவால்கள் என அனைத்தையும் அவர்கள் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர். படங்கள் மூலமும் குரல்பதிவின் மூலமும் வாழ்க்கைச் சிரமங்களின் இடையிலும் அவர்கள் கண்ட சிறு சிறு மகிழ்ச்சிகளும், அவர்களின் மனவுறுதியும் அன்றைய சிங்கப்பூரின் உண்மையான முகத்தை நமக்கு எடுத்துக் காட்டின.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் குழந்தைப்பருவ, இளமைக்கால நினைவுகளை மீட்டெடுத்த இந்தத் தருணம், பங்கேற்ற பல மூத்தோருக்கு உணர்ச்சிபூர்வமான ஒன்றாக அமைந்தது. அவர்களின் நினைவுகளைப் பகிர்வதற்குமுன் நடந்த சிறு கலந்துரையாடலில் தாங்கள் அன்று வாழ்ந்த இருப்பிடங்கள் பற்றிய குறிப்புகள், படித்த பள்ளிகள், சென்ற வழிபாட்டுத் தலங்கள் பற்றி அவர்கள் கேட்கையில் பேருவகை அடைந்தனர். அதன்பின் இடம்பெற்ற பயிலரங்கில், தங்களின் அனுபவங்களைக் கேட்டுப் பெற நிறுவியோர் நினைவகம் காட்டிய அக்கறையை எண்ணி, அவர்கள் அனைவரும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நினைவுகளைப் பதிவுசெய்வதன் முக்கிய நோக்கம் வெறும் கடந்த காலத்தைச் சிந்திப்பதோடு நின்றுவிடுவதில்லை. சுதந்திர தொடக்கக்காலச் சிங்கப்பூரின் உண்மையான வேர்களையும், நமது முன்னோடிகள் சிந்திய வியர்வையையும் ரத்தத்தையும் வருங்கால, இளைய தலைமுறையினர்க்கு உணர்த்துவதே அதன் முதன்மை இலக்கு.
சிங்கப்பூரை உலகின் முன்னணி நாடாக உருவாக்குவதில் இந்தியச் சமூகம், அதிலும் தமிழ்ச் சமூகம் பெரும்பணியாற்றியுள்ளது. தமிழர்கள் இங்குப் பேரளவில் பணிசெய்ய வந்திராவிட்டால், வருமானம் ஈட்டிய பிறகு திரும்பிச் செல்லும் திட்டங்களைக் கைவிட்டு, சிங்கப்பூரைத் தங்கள் நாடாய் ஏற்றுக் கொண்டு தங்கியிருக்காவிட்டால், இந்தியச் சமூகம் இங்கே நிலைபெற்றிருக்காது. தமிழ் அதிகாரத்துவ மொழியாய் இடம்பெற்றிருக்காது.
சிங்கப்பூரை நம் நாடாய் உருவாக்கியதற்கும் தமிழ் மற்றும் இந்தியப் பண்பாட்டை இங்கே வேரூன்றச் செய்ததற்கும் தமிழவேள் கோ.சாரங்கபாணி முதற்கொண்டு பலருக்கு நாம் நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறோம். இந்தியர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளை ஒப்பிடுகையில், மொழியையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் முதன்மை வகிப்பது நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. வரும் தலைமுறையினரும் அடையாளம் தொலைந்த இனமாய் வளரமாட்டார்கள்.
சமூகமாக இங்கு வாழ முடிவு செய்ததும் சங்கங்களும் மன்றங்களும் முளைக்கத் தொடங்கின. கடந்த நூறு ஆண்டுகளில் பல குழுக்கள் ஒன்றுகூடியிருக்கின்றன. கடந்த ஆண்டு தமிழ் முரசின் 90ஆவது ஆண்டு நிறைவைத் தொடர்ந்து பல ஆண்டு நிறைவுகள். அண்மையில், தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவிற்கும், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் 85ஆம் ஆண்டு நிறைவிற்கும், நேற்றைய தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு நிறைவிற்கும் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார்.
தமிழ்மொழி சிங்கப்பூரில் பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். நம் இன, சமய கூறுகளைக் காக்க வேண்டிய அதே நேரத்தில் அது எந்தவிதப் பிளவிற்கும் இட்டுச் செல்லக்கூடாதென்பதை வலியுறுத்தினார். எம்மொழி பேசினாலும், எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் ஒரு சிங்கப்பூரராய் நாம் உறுதியாக நிற்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார். சிறிய சிங்கப்பூரின் எதிர்காலம் நம் ஒற்றுமையில் இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றுரைத்தார். இனப் பிளவுகளை ஏற்படுத்த எண்ணும் ஒரு சிலரை நிராகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இன்றைய தலைமுறையினர் அனுபவிக்கும் வளமும் அமைதியும் தானாக வந்துவிடவில்லை. அவை எண்ணற்ற முன்னோடிகளின் அர்ப்பணிப்பால் உருவானவை. நமது பண்பாட்டு வேர்களையும் வரலாற்றுச் சுவடுகளையும் பாதுகாத்து, எதிர்காலச் சிங்கப்பூரை மேலும் வலுவாகக் கட்டியெழுப்ப முன்னோடிகளின் நினைவுகளும் மன்றங்களும் சமூக அமைப்புகளும் என்றும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
