இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு 2026, நான்காவது முறையாக ஆகஸ்ட் 20ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.
இம்மாநாடு இந்தியா - சிங்கப்பூர் இடையே வளர்ந்துவரும் பொருளியல் ஒத்துழைப்பு வாய்ப்புகளை அடையாளம் காண உருவாக்கப்பட்ட உயர்மட்டத் தளமாகும். இரு நாடுகளுக்கும் இடையே இயங்கிவரும் கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாகவும் அது செயல்படுகிறது.
இரு நாடுகளைச் சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். சிங்கப்பூரிலிருந்து துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலும் இந்தியாவிலிருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலும் மாநாடு வழிநடத்தப்பட்டது.
பல்வேறு முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. உணவுப் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, ஊடக ஒத்துழைப்பிற்கான மேம்பாடு போன்ற இருசாராருக்கும் பயனளிக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
உலகளாவிய விநியோகத் தொடர் பிளவுபடுதல், உலக அரசியல் சூழல் மாற்றங்கள், பொருளியல் மையங்கள் இடமாற்றம் என்பன இக்காலத்தில் வழக்கமாகிவிட்டன. இந்த மாற்றங்களுக்கு இடையே இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இணைப்பு, வரலாற்றுத் தொடர்ச்சியின் முன்மாதிரியாக மட்டுமல்லாமல், இருநாடுகளுக்கும் இடையே நிலவும் கூட்டுறவிற்கான அறிக்கையாகவும் தனித்து நிற்கிறது.
ஆசியாவின் பொருளியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்தியா திட்டங்களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில், ஒரு முதன்மை நிதி மையமாக, ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடமாக சிங்கப்பூர் தனது திறனைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வருகிறது. இவ்வேளையில், ஆழமான பங்காளித்துவம் இருநாடுகளுக்கும் வெற்றியைத் தரும் என்று இருதரப்பினரும் கணித்துள்ளனர்.
இந்தக் கூட்டணியின் வேர்கள் ஆழமானவை. நம் பண்பாட்டு இணைப்புகள் பல நூற்றாண்டுகால வரலாற்றின்மீது கட்டமைக்கப்பட்டுள்ளன. நவீன அரசுமுறை உறவிற்கு முன்பே, வணிகக் கப்பல்கள் வங்காள விரிகுடாவைக் கடந்து, இந்தியத் துணைக்கண்டத்தையும் மலேசியத் தீபகற்பத்தையும் இணைத்தன.
இவ்வரலாற்றுப் பிணைப்பு சிங்கப்பூரில் துடிப்புமிக்க இந்திய வம்சாவளியினரை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலும் ஆழமான உறவு தொடர்வதால் எல்லை தாண்டிய ஒத்துழைப்பிற்கான சிக்கல்களைக் குறைத்து, தனித்துவமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
2025–26ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு வணிகம் $36.1 பில்லியனை எட்டியது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த $6.7 பில்லியனிலிருந்து இது கணிசமான வளர்ச்சி.
இன்று, ஆசியான் அமைப்பிற்குள் இந்தியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக சிங்கப்பூர் திகழ்வதோடு, இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் முதன்மை மூலமாகவும் விளங்குகிறது. 2025–26 நிதியாண்டில் மட்டும் சிங்கப்பூர் $19.8 பில்லியனை இந்தியாவில் நேரடி முதலீடு செய்துள்ளது. இது, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்கு மூலதனத்தில் கிட்டத்தட்ட 25 விழுக்காடாகும்.
இந்த மூலதன ஒதுக்கீடு, முக்கியமாக உள்கட்டமைப்பு, சொத்துச் சந்தை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தரவு மையங்கள், தளவாடப் பூங்காக்கள், நிதித் தொழில்நுட்பம் ஆகிய உத்திபூர்வ வளர்ச்சிப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இருநாட்டு உறவின் வலிமை தொடர்வது தேர்ந்தெடுக்கப்படும் எதிர்காலத் தொழில்துறைகளில் உள்ளது. பசுமை எரிசக்தி, பகுதி மின்கடத்தி, விநியோகத் தொடர், உயர்நிலை உற்பத்தி, ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாய் இருக்குமென வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் திறன்மிக்க மனிதவளமும் சிங்கப்பூரின் நிறுவன நிர்வாகமும் உலகமயமாவதற்கான ஆற்றலை உருவாக்குகின்றன.
இந்தியாவின், ‘கிழக்கு நோக்கிய’ கொள்கையை உறுதியாக நிலைநிறுத்த, ஆசியானுக்கான முக்கிய, நம்பகமான நுழைவாயிலாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. வரும் ஆண்டில் சிங்கப்பூர் ஆசியானின் தலைமைத்துவத்தை எடுத்து நடத்தும் தறுவாயில், இந்தியா மற்ற ஆசியான் நாடுகளுடன் வணிக உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை வலுப்படுத்தலாம். அதற்கு சிங்கப்பூர் உறுதுணையாய் இருக்கும்.
தென்கிழக்காசியாவில் பொருளியல் வலிமையை வெளிப்படுத்தவும் புத்தாக்கங்களை உருவாக்கவும் ஒரு முதிர்ச்சியடைந்த பங்காளியை சிங்கப்பூர்மூலம் இந்தியா பெறுகிறது. அதே வேளையில், ஆசிய வணிகத்தின் இன்றியமையாத நடுவமாகத் தனது தகுதியைச் சிங்கப்பூர் வலுப்படுத்துவதற்கு இந்தியாவை நாடுகிறது.
இருநாட்டு அமைச்சுகளுக்கிடையே தொடர்ந்து இயங்கிவரும் பன்முகக் கலந்துரையாடல் இந்தியாவும் சிங்கப்பூரும் மீள்திறன் கொண்ட, துடிப்பான எதிர்காலத்தை உருவாக்க அடித்தளமாய் அமையும் என்பதில் ஐயமில்லை.


