இந்தியச் சுதந்திர தினமும் சிங்கப்பூர் பிணைப்பும்

இந்தியச் சுதந்திர தினமும் சிங்கப்பூர் பிணைப்பும்

2 mins read
dbb84331-3ad1-4cc6-bb41-54b9b3dfd4d6
இந்தியச் சுதந்திர தினம். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

இந்தியா ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய அந்த வரலாற்றுத் தருணம் சிங்கப்பூருக்கும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் விடுதலையைக் கொண்டாடுவதைத் தாண்டி இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாற்றையும் பிரிக்க முடியாத எதிர்காலத்தையும் நினைவூட்டும் பாலமாக இத்தினம் திகழ்கிறது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் சிங்கப்பூருக்குப் பிணைப்பு உண்டு. 1943ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ‘ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்’ (இந்திய தேசிய ராணுவம்) அதன் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான முதன்மை இடமாகச் சிங்கப்பூர் திகழ்ந்தது. 

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், 1965ல் சிங்கப்பூர் குடியரசான குறுகிய காலத்திலேயே இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரபூர்வ அரசுதந்திர உறவுகள் மலர்ந்தன. 

இன்று சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகம் நாட்டின் பன்முகக் கலாசாரத்தைச் செழுமைப்படுத்துவதோடு, இருதரப்பு நட்புறவின் பாலமாகவும் திகழ்கிறது.

பொருளாதாரச் சக்தி: முதலீடும் வர்த்தகமும்

வரலாற்றுப் பிணைப்பைத் தாண்டி, பிரம்மாண்டமான பொருளாதார ஒத்துழைப்பே இந்த உறவின் உந்துசக்தி. 

சிங்கப்பூர் வெறும் வர்த்தகப் பங்களிப்பாளர் மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாகவும் விளங்குகிறது. 

கடந்த சுமார் 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒட்டுமொத்த முதலீட்டு அளவு 170 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியா ஈர்க்கும் மொத்த அந்நிய முதலீட்டில் 20 முதல் 25 விழுக்காடாகும்.

இந்த முதலீடு வெறும் மூலதனத்தோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளிலும் பரந்து விரிந்துள்ளது.

உள்கட்டமைப்பு: தொழிற்பூங்காக்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள்.

தொழில்நுட்பம் & நிதித் தொழில்நுட்பம்: பேநவ்-யுபிஐ (PayNow-UPI) பணப்பரிவர்த்தனை போன்ற எல்லை தாண்டிய மின்னிலக்கப் பரிவர்த்தனைகளும் தொடக்க நிறுவன முதலீடுகளும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி உள்கட்டமைப்பு, தூய்மைத் தொழில்நுட்பம் போன்ற எரிசக்தித் தேர்வுகளை நோக்கிய இந்தியாவின் மாற்றத்திற்கு மூலதன முதலீடுகள் பெரும் உந்துசக்தியாக அமைகின்றன.

மறுபுறம் திறமையாளர்களை ஈர்ப்பதில் சிங்கப்பூருக்கு இந்தியா மிக முக்கியமான வளர்ந்துவரும் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த இருவழிச் சார்ந்திருத்தல் இரு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான அரசதந்திர உறவை, தென்கிழக்காசியாவிற்கும் தென்னாசியாவிற்கும் உண்மையான பொருளாதார உந்துசக்தியாக மாற்றுகிறது.

ஆறு முக்கிய ஒத்துழைப்புத் துறைகள்

இந்தக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ‘இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மாநாடு’ (ISMR) வழியே ஆறு முக்கியத் தூண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

மின்னிலக்கமயமாக்குதல்: எல்லை தாண்டிய நிதித் தொழில்நுட்ப இணைப்பு.

திறன் மேம்பாடு: எதிர்காலத் தேவைகளுக்கான தொழிலாளர் பயிற்சி.

நிலைத்தன்மை: பசுமைத் தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம்.

சுகாதாரம் & மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, மருந்தியல் ஒத்துழைப்பு.

மேம்பட்ட உற்பத்தி: பகுதி மின்கடத்திகள், மின்னணு விநியோகம்.

இணைப்புத் திறன்: கடல்சார் பாதுகாப்பு, வான்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் தளவாடங்கள்.

இந்தியா அதன் எதிர்கால இலக்குகளை நோக்கி நடைபோடும் வேளையில், சிங்கப்பூருடனான இந்த வலுவான பந்தமும் மரியாதையும் வட்டார அளவில் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும்.

குறிப்புச் சொற்கள்