மாறிவரும் உலகமயச் சூழலில், பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பை மொழி எவ்விதம் செப்பனிடுகிறது என்பதைக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைய ‘இனம், சமயம், மொழி’ குறித்த ஆய்வறிக்கை மிகத் துல்லியமாகக் காட்டியுள்ளது.
தற்காலச் சிங்கப்பூரர்களிடம், குறிப்பாக இந்தியச் சமூகத்தினரிடையே நிலவும் மொழிப் பயன்பாடு, இன அடையாளக் கேள்விகள், எதிர்கால மொழி மேலாண்மை குறித்த பல ஆழமான உண்மைகளை இந்த ஆய்வுத் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
தேசிய அளவில் ஆங்கில மொழி, இல்லங்களிலும் சமூகத் தொடர்புகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவு முதன்மை பெற்றுவருவதை மறுப்பதற்கில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இல்லங்களில் முதன்மை மொழியாக ஆங்கிலம் பேசுவோரின் விகிதம் 23 விழுக்காட்டிலிருந்து 48.3 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.
இந்த ஆங்கில ஆதிக்கச் சூழலிலும் சிங்கப்பூர் இந்தியச் சமூகம், குறிப்பாகத் தமிழர்கள், தங்களின் தாய்மொழிப் புலமையைப் பேரளவில் நிலைநிறுத்தி வருவது பாராட்டுக்குரியது. ஆய்வில் பங்கேற்ற தமிழர்களில் 92.9 விழுக்காட்டினர், தமிழை ‘நன்றாக’ அல்லது ‘மிக நன்றாக’ பேசும் திறனைக் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கின்றனர். இது நமது இருமொழிக் கொள்கையின் பலத்தையும் தமிழ்ச் சமூக அமைப்புகளின் தொடர் பங்களிப்பையும் பறைசாற்றுகிறது.
எனினும், மொழிப்புலமை என்பது நேரடி மொழிப் பயன்பாடாக மாறுவதில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியர்களில் 64.4 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் நண்பர்களுடன் பேசும்போது தமிழைப் பயன்படுத்துகிறார்கள். எஞ்சியோர் அன்றாடத் தொடர்புகளுக்கு ஆங்கிலத்தையே நாடுகின்றனர்.
இளைய தலைமுறையினரும் உயர்கல்வி கற்றோரும் நண்பர்களுடனும் பணியிடங்களிலும் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. தாய்மொழி என்பது வெறும் ‘அடையாளச் சின்னம்’ என்று சுருங்கிவிடாமல், அது புழங்குமொழியாக வாழும் நிலையை உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்குண்டு.
இதனை எதிர்கொள்ள, அரசாங்கமும் ஏனைய அமைப்புகளும் மொழி, கலாசாரம், இளையர் மேம்பாடு ஆகிய தூண்களின் வழி புதிய ஊக்கத்தை அளித்து வருகின்றன. தமிழ்மொழி அறிவு என்பது தன் அடையாளத்தையும் பண்பாட்டுப் பேணலையும் தாண்டி, வாழ்வாதாரத்திற்கும் தமிழ்ப் பணிவழி அமையும் வளமான எதிர்காலத்திற்கும் வித்திடும் என்பதை நாம் நம்பவேண்டும். உலக அளவில் பரவியிருக்கும் தமிழர்கள் வணிகக் கட்டமைப்பை அமைக்கும் சூழல்களும் வளர்ந்து வருகின்றன. தாய்மொழி ஒரு மூலதனமாகவும் திகழ முடியும் என்ற பரந்த பார்வையை நம் இளையர்களிடம் விதைக்க வேண்டும்.
மறுபுறம், சிங்கப்பூரர் எனும் அடையாளத்தின் குறியீடான ‘சிங்கிலிஷ்’ பயன்பாட்டில் சீன, மலாய்ச் சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள் சற்றுத் தள்ளியே நிற்கிறார்கள். இந்தியர்களில் 52.6 விழுக்காட்டினர் மட்டுமே ‘சிங்கிலிஷ்’ புலமையைக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் முறையான ஆங்கிலத் தரத்தைப் பேண வேண்டும் என்பதில் இந்தியச் சமூகம் சற்று முனைப்புடன் இருப்பதாய்க் கருதலாம்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்திலிருந்து இங்குக் குடியேறிய தமிழ்க் குடும்பங்களில் ‘சிங்கிலிஷ்’ புழக்கம் பரவாததால் நம்மிடையே இவ்விகிதம் குறைவாய் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் மொழி என்பது சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் பாலமாகத் திகழ வேண்டும்; பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக மாறிவிடக்கூடாது.
வெகுவாக மாறிவரும் தொழில்நுட்பக் காலத்திற்கேற்ப, செயற்கை நுண்ணறிவு போன்ற உத்திகளைத் தாய்மொழிக் கற்றலுக்கு ஆக்கமுறையில் பயன்படுத்தி, நமது அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே நம் முன்னுள்ள சவால். இந்தியச் சமூகம் தன் பன்முகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், அவரவர் தாய்மொழியின் தொன்மையான கூறுகளை மற்றவரோடு பகிர்ந்து, ஒன்றுபட்ட சிங்கப்பூர்ச் சமூகமாகத் தொடர்ந்து செயல்படுவோம்.

