நன்றி காட்டுவோம்! நலமே வாழ்வோம்!

3 mins read
b19a8c57-acfa-4fcf-a703-06dbdaddf7d5
இவ்வாண்டுப் பொங்கல் ஒளியூட்டை சுகாதார, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) மாலை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். -  படம்: பே. கார்த்திகேயன்

பொங்கல் திருநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் அதற்கான கொண்டாட்ட உணர்வு வழக்கம்போலவே குறைவின்றிக் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை அடாது மழை பெய்தபோதும் உற்சாகம் குன்றாமல் இடம்பெற்ற இந்த ஆண்டின் பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சி அதற்குச் சான்று.

விழா, அதன் பொருட்டான கொண்டாட்டம் என்பது ஒரு சமூகத்தின் கலாசாரத்தைக் காட்டும் கண்ணாடி போன்றது.

வாழ்வின் போக்கில் ஏற்படக்கூடிய சோர்வைப் போக்கி, உற்சாகமூட்டி, உயிர்ப்புடன் விளங்க வைக்கும் இத்தகைய விழாக்கள், கொண்டாட்டங்களில் மரபுசார் அம்சங்கள் நிறைந்திருக்கும்.

மாற்றாரும் அவற்றைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் பண்பாட்டுக் கூறுகளைப் பசுமரத்தாணிபோல் பதியவைக்கும் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு உண்டு.

திருவிழாக் கொண்டாட்டங்கள் மக்களிடையே ஒற்றுமை, பகிர்ந்துண்ணல், விருந்தோம்பல் போன்ற பண்புகளை வலியுறுத்துகின்றன. கூடிக் கொண்டாடி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து பெருக்க வகைசெய்கின்றன. அந்த வகையில், உழைப்பை முன்னிறுத்தி, அதற்குத் துணைநின்ற இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் நன்றி நவில்வதே பொங்கல் திருவிழா. பெறுவது மட்டுமே இன்பமன்று; பெற்றதற்கு உளமார, உணர்ந்து, நன்றியுரைப்பதும் இன்பமே என்ற சீரிய சிந்தனையின் தெளிவு இது.

உடலையும் அதன் மூலம் உயிரையும் பேண உதவும் உணவை உற்பத்தி செய்யும் உழவர்களின் மேன்மையை, “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்,” என்றும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்,” என்றும் வள்ளுவர் உணர்த்துகிறார். அத்தகைய உழவர்களின் திருநாளான பொங்கல் விழாவை அவர்களின் உழைப்பால் விளைந்த பயிர்களை உண்டு, பலனடையும் அனைவரும் கொண்டாடி வருகிறோம்.

தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த பொங்கல் விழா, சிங்கப்பூரில் பலகாலமாகவே கொண்டாடப்படுகிறது.

தீபாவளியைப்போல் பொது விடுமுறை நாள் இல்லாவிட்டாலும் இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் விழாவாகவும் அதேநேரம் இன, சமய, மொழிப் பாகுபாடுகளைக் கடந்து பலரையும் ஈர்க்கும் கொண்டாட்டமாகவும் இது அமைகிறது.

அல்லன போக்கி, நல்லன பெருக்கும் நான்கு நாள் கொண்டாட்டமான பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும், அரசாங்கத் தரப்பிலிருந்து இந்திய மரபுடைமை நிலையம் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), பொங்கல் ஒளியூட்டு முதற்கொண்டு மாடுகளை லிட்டில் இந்தியா பகுதிக்குக் கொண்டுவருதல், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள் எனப் பலவற்றுக்கும் ஏற்பாடு செய்து வருகிறது.

ஏற்பாடுகள் சிறப்பு என்றபோதும் அதற்கான நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் இவற்றுக்கெல்லாம் ஒரு சமூகமாக மக்கள் பேராதரவு தரவேண்டியது முக்கியம். 

எடுத்துக்காட்டாக, பால் பண்ணையிலிருந்து மாடுகளை லிட்டில் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்குப் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பல. அப்படியிருக்க, மாணவர்களும் சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரும் ஆர்வத்துடன் கலந்துகொள்வது மட்டும் போதாது.

கொண்டாட்டம் என்றாலே அனைவரும் கூடி, ஈடுபாட்டோடு பங்கேற்பது. அவரவர் வீடுகளில் சமைத்தோம், வழிபட்டோம், அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்துவிட்டோம் என்றிருப்பது கொண்டாட்டமன்று.

அதிலும் பொங்கல் மனிதர்களுக்கு மட்டும் என்ற வரையறைக்கு அப்பால் உழைப்புக்கு உதவிய கால்நடைகளுக்கும் நாள் ஒதுக்கி, ஓய்வு அளித்து, அலங்கரித்துக் கொண்டாடும் விழா அல்லவா?

சிங்கப்பூர்ச் சூழலில் அனைவரும் கால்நடைகளைப் பேண முடியாது என்றாலும் இத்தகைய வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் கண்டு, நம் முன்னோர் வாழ்க்கைமுறையை நினைவுகூர்வது நன்று. கொண்டாட்டக் கூறுகள் ஏட்டுத் தகவல்களாய் நின்றுவிடாமல் கண்முன்னே காணக் கிடைப்பது பேறு.

நம் பாரம்பரியத்தைத் தொடர உதவும் வகையில் நம் நலனுக்காகச் செயல்பட முன்வருவோர்க்கு ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பதும்கூட ஒருவிதமான நன்றி நவிலல்தான்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரும் மூத்த அமைச்சருமான திரு லீ சியன் லூங்கிற்கு சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினர் நேற்று ஒன்றுகூடி, விருந்தளித்து, நன்றி தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில், நன்றி சொல்லும் நல்ல பண்பை நாம் தலையாய பண்பாகக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. 20 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய தலைவருக்கு, ஒரு சமூகமாக இந்தியர்கள் காட்டிய நன்றி இது.

இதேபோல் எல்லாவற்றுக்கும் தோள்கொடுப்போம். பாரம்பரியக் கொண்டாட்டங்களில் பங்கேற்போம்.

வழக்கில் உள்ளதே வாழும் மொழியாக நிலைக்கும் என்பதைப்போல் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டோடு பங்கேற்பதே பாரம்பரியம் தொடரவும் தழைக்கவும் வழிவகுக்கும்.

தொன்றுதொட்டுத் தொடரும் மரபுச் சங்கிலியின் கண்ணிகளைச் சரியாக அமைக்கவேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. இதை உணர்ந்து செயல்பட்டால் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்து, அதில் அமிழ்தும் சேர்ந்தாற்போல் நாளைய வாழ்வு நலமே பயக்கும்.

குறிப்புச் சொற்கள்