வண்ண விளக்குகளாலும் அலங்காரப் பொருள்களாலும் இல்லங்களுக்கு அழகுசேர்த்து, புத்தாடை வாங்கி, தின்பண்டங்கள் செய்து, மத்தாப்பு கொளுத்தி உற்றார் உறவினரோடு தீபாவளியை வரவேற்க இருக்கிறோம்.
சிராங்கூன் சாலை வண்ண விளக்குகளால் ஒளிர, கேம்பல் லேன், பர்ச் சாலைகளில் துடிப்புடன் திருவிழா களைகட்டும் கடைகள் அமைக்கப்பட்டு கொண்டாட்டத்துக்கு மெருகூட்டி வருகின்றன.
அவற்றுக்கு இடையில், சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் கூடமும் இடம்பெற்றுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்ற சிங்கப்பூரின், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் கடப்பாட்டை அது வெளிப்படுத்துகிறது.
பல சமூக அமைப்புகளும் தனிமனிதர்களும் முன்வந்து தேவை உள்ளவர்களுக்குப் போய்ச் சேரும் உதவிகளுக்குத் தங்களால் இயன்றதை வழங்கி வருகின்றனர்.
தீவு முழுதும் பல்வேறு திட்டங்கள், அடித்தள அமைப்புகளாலும் சமூக அமைப்புகளாலும் நிறுவனங்களாலும் தனிமனிதர்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன.
குடியிருப்புப் பேட்டை ஒன்றில் புல்வெளியில் இருந்தபடி காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியரிடம் உணவுப் பொட்டலத்தையும் ரொக்கத்தையும் வழங்கி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு வாழ்த்திய சிங்கப்பூர் சீன சமூகத்தைச் சேர்ந்த ஆடவரின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
பல்லின சமூகமான சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதைத் தாண்டி, ஒவ்வொருவரும் இனம், மொழி, சமய பேதமின்றி பரிவுடனும் பாசத்துடனும் செய்யும் செயல்கள், விழாக்களுக்குச் சிறப்பு சேர்ப்பதுடன், சமூகமாக, தனிமனிதராக நமது விழுமியங்களுக்கும் உரம் சேர்க்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வளர வளர, தொண்டு நிறுவனங்களும் வளர்ந்து வந்துள்ளன. சமூகம், கல்வி, கலை, பண்பாடு, ஆய்வு, விளையாட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, பல்வேறு துறைகளைச் சார்ந்த 2,000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட துறைகளில் நாட்டம் இருப்போருக்கு அந்தந்த துறைசார் மேம்பாட்டுக்காக நன்கொடை அளிப்பதற்கு அவை ஏதுவாக உள்ளன.
மூப்படைந்துவரும் சமூகத்தில் உதவி தேவைப்படும் மூத்தோர், குறைந்த வருமானமுடைய குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர், சிறப்புத் தேவையுடையவர்கள், பிறப்பாலோ, நோய்வாய்ப்பட்டோ, விபத்தாலோ உடற்குறை ஏற்பட்டோர், குடும்பங்களை விட்டுவிட்டு வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூரை வாழ்விடமாகக் கொண்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், கல்வி கற்க வந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் என சிங்கப்பூர் சமூகத்தில் மற்றவர் உதவியை நாடியுள்ளோர் இருக்கவே செய்கின்றனர்.
ஆளாக்கிய சிங்கப்பூர் சமூகத்துக்கு ஒவ்வொருவரும் செய்யும் நன்றிக்கடனாகத் தொண்டூழியத்தைப் பார்க்க வேண்டும்.
புதிதாகக் குடியுரிமை பெற்று சிங்கப்பூரைப் புகுந்த வீடாகக் கொண்டுள்ளவர்கள், தங்களின் புதிய குடும்பத்துக்குச் செய்யும் நன்றியும் கொடை வடிவில் இருக்கலாம்.
நிபுணத்துவத் துறைகளில் மேம்பட்ட வேலைவாய்ப்புக்காக சிங்கப்பூரில் வசித்து, வேலை பார்ப்பவர்கள், தங்கள் வாழ்வில் ஒளிசேர்த்துவரும் சிங்கப்பூருக்குத் திருப்பிக் கொடுக்கும் நன்றிக்கடனும் இத்தகைய மேன்மைச் செயல்மூலம் இருக்கலாம்.
அனைவருக்கும் சம வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், எவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய அழகிய நகரமாக, மனத்திற்கினிய இல்லமாக இருக்கும் சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் கைகோத்துச் செயல்பட்டால் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி மகிழ்ச்சி பொங்கும் ஒரே மக்களாக சிங்கப்பூரை மெருகூட்டலாம்.
தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இருள் போக்கி ஒளி பரப்பும் இத்திருவிழா, நம்முடைய அக இருளை நீக்கி மகிழொளியைக் கொண்டு வருவதற்கான தருணம்.
இந்த விழாக்காலத்தில், சவால்களைச் சந்திக்கும் சமூகத்தில் உள்ளவர்களை நினைத்துப் பார்த்து அவர்களது வாழ்வில் ஒளியூட்ட முனைவோம். கொடை அளிப்பது அன்பின் வெளிப்பாடு என்பதைத் தாண்டி, ஒற்றுமையையும் பரிவையும் பறைசாற்றும் செயல்.
வாழ்வில் நமக்குக் கிடைத்த பல வரங்களையும் செல்வங்களையும் இல்லாதோருடன் பகிர்ந்து அவர்களது மனங்களில் நம்பிக்கையை அளிக்கும் ஆதரவுக்கரமாக அது நிலைக்கும்.
குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் ஒன்றுசேர்ந்து இல்லத்திலும் உள்ளத்திலும் புத்தொளியும் நற்சிந்தனையும் பரவ, குதூகலத்துடன் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

