ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வசிக்கும் சிங்கப்பூரில் பள்ளிக்கும் வேலைக்கும், விரைவாகவும் கட்டுப்படியாகும் கட்டணத்திலும் செல்வதற்குப் பெரும்பாலான மக்களின் தெரிவு ரயில்களே என்றால் அது மிகையில்லை.
பொதுப் போக்குவரத்து, குறிப்பாக ரயில் சேவை மீது மக்கள் பெரிதும் நம்பிக்கையும் திருப்தியும் கொண்டுள்ளதைத் தரவுகள் காட்டுகின்றன.
ஆனால் கடந்த சில நாள்களாக அதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள இடையூறு அதற்குக் காரணம்.
விரிவான சேதத்தால் தடை சில நாள்கள் தொடரும் என்ற அறிவிப்பு விமர்சனங்களுக்கு வித்திட்டது.
பழுதான ரயில் பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியில் அச்சுப்பெட்டி தண்டவாளத்தில் விழுந்து சேதம் ஏற்படுத்தியது குறித்த தகவல் கவலை ஏற்படுத்தியது.
ஏமாற்றம், எரிச்சலால் உண்டான முணுமுணுப்புகள் ஒருபுறமும் பாதுகாப்பு நடைமுறை, பராமரிப்புத் தரநிலை போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் குறைகூறல்கள் இன்னொரு புறமும் கேட்ட வேளையில் ‘ஒருவேளை பயணிகள் இருக்கும்போது ரயில்பெட்டி தடம் புரண்டிருந்தால்?’ என்ற கண்டனக் குரல்களும் ஒலித்தன.
வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள சிலரோ, சிறிய சேவைத் தடைக்கு மிகப் பெரிய பதில்வினை இது என்பதாகக் கருதுகின்றனர். இதைவிட மோசமான சம்பவங்களை அனுபவத்தில் கண்ட அவர்களுக்கு இது பெரிதாகத் தோன்றாமலிருக்கலாம்.
ஒழுங்குமுறையும் சீரான செயல்பாடும் சிங்கப்பூரின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. சிங்கப்பூரர்களுக்கு இதில் ஓர் உள்ளார்ந்த பெருமை என்றுகூடச் சொல்லலாம். அதனால்தான் அதில் சிறிய சறுக்கல் நேர்ந்தாலும் பலராலும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
தொடர்புடைய செய்திகள்
சிலர், ஏற்கெனவே போட்ட திட்டங்களில் மாற்றம் செய்யவேண்டியுள்ளதே என்று அங்கலாய்க்கின்றனர். வேறு சிலர், அடுத்து என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். அவரவர் மனநிலையில் இது அவர்களுக்குச் சரியாகவே தோன்றக்கூடும்.
பாதிக்கப்பட்டோரில், தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்குப் (பிஎஸ்எல்இ) பிள்ளையை அழைத்துச் செல்லும் பெற்றோர் இருக்கக்கூடும். உரிய நேரத்தில் பள்ளியைச் சென்றடைய வேண்டுமே என்ற மனஉளைச்சலுக்குப் பெற்றோரும் பிள்ளைகளும் ஆளாகியிருக்கக்கூடும்.
வேலை நேர்காணலுக்கோ மருத்துவரிடமோ நேர முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கோ செல்லவேண்டிய பலர் தவித்திருக்கக்கூடும்.
ஒரு நாளோடு முடிந்தது என்றிராமல் அடுத்தடுத்த நாள்களிலும் அதே நிலை தொடர்வது கூடுதல் சிரமம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
மறுபக்கம், எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் நிலைமையைச் சீராக்க முனைப்புடன் செயல்படுகின்றன. நூற்றுக்கணக்கானோர் இரவுபகலாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் எஸ்எம்ஆர்டி தவறவில்லை. பிஎஸ்எல்இ மாணவர்களுக்கு இலவச டாக்சி சேவையையும் அது அறிவித்தது.
பொதுமக்களிலும் நல்லுள்ளம் கொண்ட சிலர் அத்தகைய மாணவர்களை காரில் இலவசமாகப் பள்ளிக்குக் கொண்டுவிட முன்வந்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டது நெகிழ்ச்சிக்குரியது. பள்ளிகளும் பணியிடங்களும் புரிதலுடன் நடந்துகொண்டன.
ஒரு வகையில், கொவிட்-19 பெருந்தொற்றின்போது மக்களின் நற்பண்புகள் பீறிட்டு வெளிவந்தது போலவே, உதவி தேவைப்படுவோர்க்கு உடனடியாகக் கைகொடுக்கும் சிங்கப்பூரர்களின் பண்புநலன் இப்போதும் வெளிப்பட்டுள்ளது.
இதில் எதுவும் நடந்ததை ஒன்றுமில்லாமல் ஆக்கும் சப்பைக்கட்டு அன்று.
இதற்கு முன்னும் இங்கே ரயில் சேவை தடைபட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. விசாரணை, மறுஆய்வுக்குப் பிறகு தவறுகளுக்குக் காரணமானோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுமுண்டு.
எனவே, அரசாங்கமும் அதிகாரிகளும் அவர்கள் கடமையை ஆற்றட்டும். காரணங்களைக் கண்டறியும் விசாரணை தொடரும் வேளையில், எதிர்பாராமல் நேர்ந்துவிட்டது என்ற புரிதலோடு நீக்குப்போக்கான மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பல விதங்களின் நன்மை பயக்கும்.
வளர்ச்சியடைந்த வேறு சில நாடுகளில்கூட நாமே சுற்றுப்பயணிகளாகச் செல்கையில் இத்தகைய சூழலை எதிர்கொண்டால் பொறுமையோடுதான் கடந்துவர வேண்டும். அதே பொறுமையை இங்கேயும் கடைப்பிடித்தால் நன்மை நமக்குத்தான்.
ஆங்காங்கே இயற்கைப் பேரிடர்களால் மனிதர்களின் வாழ்வாதாரமும் இயல்பு வாழ்க்கையும் சீர்குலைந்து போவதை நாம் தெரிந்துகொள்கிறோம். அவ்வாறான பாதிப்புகள் இல்லை என்பதை வரமாகக் கருதும் அதேவேளையில் செயற்கையான இயந்திரங்களும் கருவிகளும், செயலிழப்பதும் பழுதாவதும் இயல்பே என்ற புரிதல் நல்லது.
எல்லாமும் எப்போதும் சீராகவே அமைந்திருக்கும் சிறப்பான இடம் என்ற நிலை பெருமைக்குரியதே என்றாலும் எதிர்பாராததை எதிர்பார்த்திருந்தால் எந்தச் சூழலையும் ஆக்ககரமாக எதிர்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து கற்ற பாடமாக எடுத்துக்கொள்வோம்.
ஆக்ககரமான அணுகுமுறையோடு அனைத்தையும் எதிர்கொள்வோம். அதுவே அனைவருக்கும் நன்மையளிக்கும் நல்ல பாதை என்ற தெளிவோடு நடைபோடுவோம்.

