‘நாம் யார்’ என்ற கேள்விக்கு விடை தேடினால் அது வெறும் பெயரோ அல்லது முகவரியோ அல்ல என்பதை உணரலாம். பிறந்ததுமுதல் இன்றுவரை நாம் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகளின் ஒரு நீண்ட சங்கிலித் தொடர்தான் நம் அடையாளம்.
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, விளையாட்டுத் திடல்கள், நண்பர்களுடன் பழகிய தருணங்கள் என நம் வாழ்வின் ஒவ்வோர் அங்கமும் ஒரு நினைவாக நம் மனத்தின் ஆழத்தில் பதிந்திருக்கும். நாம் சுமந்து நிற்கும் இந்த நினைவுகளே நம் அடையாளம். இதில் இனிய நினைவுகளே மன அழுத்தத்தைக் குறைத்து, நமக்கு ஒருவித மன நிம்மதியைத் தருகின்றன.
நவீனமயமாகி வரும் சிங்கப்பூரில், நம் நினைவுகளில் நிற்கும் பல கட்டடங்கள் விரைவாய் மறைந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில், ஒரு சில வட்டாரங்களைத் தவிர நாம் எத்தனையோ இழந்துவிட்டோம். தேவை காரணமாக உறைவிடங்களும், சாலைகளும், பள்ளிகளும் கட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், காலம் செல்ல செல்ல வரலாறு தேய்ந்துவருகிறது.
நாம் படித்த பள்ளிகள் இன்று இல்லை. நம் நாவிற்குச் சுவையூட்டிய உணவகங்கள் உருமாறிவிட்டன. ஒரு பழைய கட்டடம் இடிக்கப்பட்டு அங்கே ஒரு பளபளக்கும் அடுக்குமாடி கட்டடமோ அல்லது புதிய சாலையோ வரும்போது, நம் மனத்தின் ஒரு பகுதி மறைந்துபோவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில், கடந்த காலத்தை எண்ணி ஒன்றும்புரியாமல் நின்ற தருணங்கள் அதிகம்.
இந்த வாரம், சிங்கப்பூரின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோமள விலாஸ் உணவகம் மூடப்படலாம் என்ற செய்தி நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு பாரம்பரிய வணிகம் மறைவது பலருக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தந்துள்ளதோடு, பல கேள்விகளையும் முன்வைக்கிறது. சமூக ஊடகங்களில் பல ஊகங்கள் எழுந்துள்ளன. ஒரு தனியார் நிறுவனம் சந்திக்கும் சவால்களை நாம் புரிந்துகொள்ள முயன்றாலும், நம் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது.
பல தலைமுறைகளாக நாம் அமர்ந்து உண்ட உணவுகள், நண்பர்களுடன் பேசிப் பழகியவை மறந்து போயிருக்கலாம். ஆனால், அந்தத் தோழமையும் உணர்வும் இன்றும் பசுமையாக இருக்கின்றன. இன, சமயங்களைக் கடந்து அனைவரையும் ஈர்த்த ஓர் இடம் அது. விரைவுணவுக் கலாசாரத்திற்கு மாறாத முதிய தலைமுறைக்குக் கோமள விலாஸ் ஒரு புகலிடமாக இருந்தது.
உலகப்போருக்குப் பின் சிங்கப்பூருக்குப் பிழைக்க வந்த பல இந்திய ஆடவர்களுக்கு கோமள விலாஸ் உணவகம் தங்களது தாயின் அடுப்பங்கரையாகவே திகழ்ந்தது.
லிட்டில் இந்தியா என்பது வெறும் வணிகப் பகுதியன்று. உலக வரைபடத்தில் சிங்கப்பூரைத் தனித்துக் காட்டிய பெருமை அதற்கு உண்டு. ஆனால், இன்று சிராங்கூன் சாலையின் முகம் மாறி வருவதை பலரும் உணர்ந்துள்ளனர். அங்கே தனியார் சொத்துகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. உயர்ந்த வாடகை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறது. இதே வேகம் தொடர்ந்தால், நாமறிந்த ‘லிட்டில் இந்தியா’ காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நமது பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பாதுகாக்க லிட்டில் இந்தியாவின் ஒரு பகுதியை வணிக ரீதியான பரிமாற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். அரசாங்கம் உரிய சட்டங்களைக் கொண்டுவந்து, குறிப்பிட்ட கட்டடங்கள் கைமாறும்போது, புதிய உரிமையாளர்கள் பாரம்பரிய வணிகத்தையே தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கொண்டுவரலாம்.
இந்திய மரபுடைமை நிலையத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சுற்றளவைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்கே இந்தியக் கலை, கலாசாரம், உணவு, கைவினைப் பொருள்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும். பலரும் வந்து, தங்களது ஓய்வு நேரத்தைக் கழிக்க வசதிகளை உருவாக்க வேண்டும்.
இளையோர், முதியோர், குடும்பங்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதே சமயத்தில், நமது வேர்களையும் நாம் காக்க வேண்டும்.
இன்னும் 50 ஆண்டுகள் கடந்தும் வரும் தலைமுறைக்கு, லிட்டில் இந்தியா நம் முன்னோர்களின் உழைப்பையும், நம் அடையாளத்தையும் பறைசாற்றும் இடமாகத் திகழ வேண்டும். அதற்கு அரசாங்கம், வணிகர்கள், சமூகம் என அனைவரும் முயற்சிசெய்ய வேண்டும்.

