சிட்னியின் போண்டாய் கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. குறிப்பாக, யூதர்களின் ஹனுக்கா பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட இந்த யூத எதிர்ப்புத் தாக்குதல், மனிதநேயத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். ஆஸ்திரேலியாவில் பரவிய வெறுப்புணர்வின் அதிர்வுகள் சிங்கப்பூரர்களாகிய நமக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் நடந்த உடனேயே, சிங்கப்பூரின் பல்வேறு சமய அமைப்புகள் காட்டிய ஒருமைப்பாடு, நமது சமூகத்தின் உண்மையான வலிமையைப் பறைசாற்றியது. வெறும் கண்டனத்தோடு நின்றுவிடாமல், நமது சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து நின்ற விதம் குறிப்பிடத்தக்கது.
“உலகம் ஓர் ஆபத்தான இடமாக மாறிவருகிறது, அங்கு வெறுப்பும் பயமும் சமூகங்களைப் பிரிக்க ஆயுதமாக்கப்படுகின்றன,” என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் கவலை தெரிவித்துள்ளது. நாம் ஒரு நெருக்கமான சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக போண்டாய் சம்பவம் விளங்கியுள்ளது என்று அது குறிப்பிட்டது.
எந்த வகையான சமய வெறுப்பும், மனிதகுலத்திற்கும், பண்பட்ட சமூகத்தின் கொள்கைகளுக்கும் எதிரானவை என்று இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறின.
சிங்கப்பூர் பெளத்த சம்மேளனம், “இந்த நாகரிக உலகில், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,” என்று கூறியதோடு, இது சிங்கப்பூரர்களிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் என்றும் வலியுறுத்தியது.
சிங்கப்பூர் தேவாலயங்களின் தேசிய மன்றம், யூத எதிர்ப்பு மற்றும் அனைத்து வகையான பயங்கரவாதச் செயல்களையும் மிகக் கடுமையாகக் கண்டித்து, யூத சமூகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது.
“வன்முறைக்கும் வெறுப்பிற்கும் நமது எதிர்காலத்தில் இடமில்லை,” என்று கூறி, அனைத்துச் சமயங்களுடனும் இணைந்து அமைதியைப் பேணப் போவதாக அனைத்துச் சமய மன்றம் உறுதி பூண்டது.
சிங்கப்பூரில் நாம் அனுபவிக்கும் இன, சமய நல்லிணக்கம் என்பது தானாக அமைந்தது அல்ல; அது பல தசாப்தங்களாகக் கட்டிக்காக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். போண்டாய் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அமைதியை நாம் ஒருபோதும் அலட்சியமாகக் கருதக்கூடாது. அனைத்துலக அளவில் நடக்கும் மோதல்கள் நமது உள்நாட்டு ஒற்றுமையைக் குலைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு பல்லின சமூகமாக, நமது அண்டை வீட்டாருடன் நாம் கொண்டுள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்புப் பேச்சு என்பது முழு சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
இன, சமய நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதிலும் வெறுப்பு வாதங்களைத் தவிர்ப்பதிலும் தனி மனித பங்கு அளப்பரியது. நம் நாட்டில் இயங்கிவரும் நல்லிணக்கக் குழுக்களின் நடவடிக்கைகளில் ஈடுபாட்டோடு பங்கெடுப்பது அவற்றில் ஒன்று. இன, சமய வெறுப்பினை எதிர்கொள்ளும்போது, முடிந்தவரை அதனைத் தவறெனச் சுட்டிக்காட்டுவது முக்கியம். சமூக ஊடகங்களின் வழி அனுப்பப்படும் இன, சமய வெறுப்புத் தகவல்களை மேலும் பரப்பாமல் இருப்பது ஒவ்வொருவரும் ஆற்றக்கூடிய முக்கிய பங்கு. இதுவே நாம் செய்யும் நற்பணி.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வு மிக முக்கியமானது. பிரிவினையைத் தூண்டும் பேச்சுகளையும், தவறான தகவல்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். ஒருசிலரின் கசப்பான அனுபவங்கள் உண்மையாக இருக்கலாம். அவை பரவவும் செய்யலாம். ஆனால், அத்தீயில் நாம் எண்ணெய் ஊற்றாமல் இருக்க வேண்டும். நாம் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்து ஓர் இனத்தைச் சார்ந்தவர்களையோ, சமயத்தைப் பின்பற்றுபவர்களையோ ஒட்டுமொத்தமாக எடை போடக் கூடாது.
அனைவரும் சக மனிதர்களே. வரலாறு, வாழும் வழிமுறைகள், பழக்க வழக்கங்கள் பல நூறு ஆண்டுகளில் மாறுபட்டு வளர்ந்திருக்கலாம். நாம் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் எதிர்காலத்தை நோக்கியே பயணிக்கிறார்கள். நன்முறையாய் வாழத்தான் எதிர்பார்க்கிறார்கள். அனைவருக்கும் சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள், சோதனைகள், வேதனைகள் எனப் பல்வேறு சவால்கள் இருக்கத்தான் செய்யும். கால ஓட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இக்கடினமான உலகச்சூழலில் நம் பங்கு என்னவென்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அது மற்றவர்களுக்கு ஆதரவாய் இருப்பின் நல்லது.
சிங்கப்பூர் சமய அமைப்புகளின் உடனடி எதிர்வினை நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நமது சமயத் தலைவர்கள் காட்டிய ஒருமைப்பாடு, இந்தியச் சமூகமாகிய நமக்கும் ஒரு வழிகாட்டியாகும். நமது பன்முகத்தன்மை நமது சொத்து என்றால், நமது ஒற்றுமையே நமது கேடயம். இத்தனை ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்துவந்த சமூகக் கட்டிறுக்கத்தை மேலும் வலுப்படுத்தி, மீள்திறன்மிக்க சமூகமாக விளங்குவோம். அமைதியைப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

