புகைமூட்டத்தையும் சுகாதார அச்சுறுத்தலையும் வலுவாக எதிர்கொள்வோம்

புகைமூட்டத்தையும் சுகாதார அச்சுறுத்தலையும் வலுவாக எதிர்கொள்வோம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Oct 2026 - 6:00 am

3 mins read

வழக்கமான பருவகால சளிக்காய்ச்சல் (Influenza A) தாக்கத்துடன் புகைமூட்டமும் இணைந்து பரவிவரும் தற்போதைய சூழலில், நாட்டின் சுவாசப் பிரச்சினைச் சம்பவங்கள் வாரந்தோறும் அதிகரித்துவருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இவ்வேளையில், அரசாங்கம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்புத் திட்டங்களும் நாட்டு மக்களுக்குப் பெரிதும் நிம்மதியை அளிக்கின்றன.

புகைமூட்டம் காரணமாக ஒட்டுமொத்த நாட்டின் அன்றாட இயக்கங்களையும் முழுமையாக முடக்காமல், நடைமுறையில் சாத்தியமான அணுகுமுறைகளைச் சிங்கப்பூர் முன்னெடுத்துள்ளது. நிலைமையை நிதானமாகக் கையாளுவதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பு வாழ்க்கையையும் ஒரேநேரத்தில் நிலைநிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் (பிஎஸ்ஐ) முன்னறிவிப்பைப் பயன்படுத்தி அடுத்தநாள் பணிகளைத் திட்டமிடுவதும் உடனுக்குடன் மாறுபடும் ஒரு மணி நேரப் பரவலான நுண்துகள்களின் அளவின் (பிஎம்2.5) அடிப்படையில் உடனுக்குடன் வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்துகொள்வதும் நல்ல செயல்திட்டமாகும். இத்தகைய அணுகுமுறை, நாட்டின் அன்றாட வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்காமல், தேவையான பாதுகாப்பை உறுதிசெய்கிறது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்றும் புகைமூட்டமும் ஒருசேரத் தாக்கும் இந்நேரத்தில், நமது சமூகத்தில் உள்ள குறைந்த வருமானக் குடும்பங்களை நிதிச்சுமையிலிருந்து பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்கள் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

பலதுறை மருந்தகங்களிலும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் புகைமூட்ட நிதியுதவித் திட்டத்தின்கீழ் சலுகைக் கட்டணத்தில் மருத்துவப் பராமரிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். 

இதன்மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்தோர், 18 வயது நிரம்பாதோர், முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையினர், ‘சாஸ்’ நீலம் மற்றும் ஆரஞ்சு அட்டை வைத்துள்ள குறைந்த வருவாய்க் குடும்பங்கள், $0, $5 அல்லது அதிகபட்சமாக $10 மட்டுமே செலுத்தி, புகைமூட்டம் தொடர்பான சுவாசப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெறமுடியும் எனச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார். இத்தகைய இலக்குசார்ந்த சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள், நெருக்கடிக் காலத்தில் அரசாங்கம் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. 

வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தாலும் ஊழியர்களின் பாதுகாப்பைப் பேணுவதும் அவர்களின் பணிச்சுமையைக் காற்றின் தரத்திற்கேற்ப மாற்றி அமைப்பதும் முதலாளிகளின் தலையாய கடமையாகும். புகைமூட்டச் சூழலைக் கண்காணித்து, ஊழியர்களுக்கான இடரை மதிப்பிட்டு, மனிதவள அமைச்சின் புகைமூட்ட வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தேசியநிலைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார். தேர்வு எழுத முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், மருத்துவச் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு மறுதேதியில் தேர்வு நடத்தப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வனப்பகுதிகளிலும் நிலங்களிலும் தீ மூட்டி, வட்டாரச் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பொறுப்பற்ற வணிக நிறுவனங்கள்மீது எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். 

இயற்கைச் சீற்றங்களோ அண்டை நாடுகளின் நிலப் பயன்பாட்டுப் பிரச்சினைகளோ எதுவாக இருப்பினும், எல்லை தாண்டிய மாசுபாட்டை ஆண்டுதோறும் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத வழக்கமாகச் சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளாது என்பதை நம் நாட்டின் இந்த உறுதியான சட்ட நிலைப்பாடு தெளிவுபடுத்துகிறது.

அரசாங்கம், என்95 முகக்கவச விநியோகம், மருத்துவமனை உட்சூழல் கட்டுப்பாடுகள், அவசர சிகிச்சைக் கையிருப்புகள் என அனைத்துத் தளங்களிலும் தயார்நிலையில் உள்ளது. வரவிருக்கும் வாரங்களில் காற்றின் தரம் மாறுபடக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒரு மணி நேர நுண்துகள் அளவீடுகளைப் பின்பற்றி, விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.

அரசாங்கத்தின் சீரிய திட்டமிடலும் மக்களின் கூட்டுப் பொறுப்பும் இணையும்போது, எந்தவொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையும் சுகாதாரத்தைப் பாதிக்கும் சவால்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பது உறுதி.

குறிப்புச் சொற்கள்
ஓங் யி காங்தனியார்பலதுறை மருந்தகம்