தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவால்களோடு இயங்கிவரும் நாம் விரும்பிச் செல்லும் லிட்டில் இந்தியா

4 mins read
04e21d30-d42c-46a0-8b4f-6b25564bb76c
முதியோரையும் குழந்தைகளையும் அழைத்துவர ஏதுவாகத் தற்போதைய லிட்டில் இந்தியா இல்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிட்டில் இந்தியாவில் கழிவறைகள் பற்றாக்குறை பற்றித் தமிழ் முரசில் கடந்த ஞாயிறு வெளியான கட்டுரை அதிகமானோர் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாம் அனைவரும் இந்த உண்மையை ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். அனைவரையும்விட வெளிநாட்டு ஊழியர்கள் பட்ட வேதனைகளை அக்கட்டுரை விரிவாக விவரித்தது. இதற்குமேல் அப்பிரச்சினையை ஆராயத் தேவையில்லை. ஆனால், நமக்கெல்லாம் பிரியமான லிட்டில் இந்தியாவில் வேறுபல பிரச்சினைகளும் வெகுநாளாகக் களையப்படாமல் இருந்துவந்தாலும் அவற்றை நாம் ஏன் பொறுத்து வருகிறோம் என்பதே இத்தலையங்கம்  எழுப்பும் கேள்வி. 

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் பார்வையில் லிட்டில் இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். கழகத்தின் துண்டுப் பிரசுரங்களிலும் சமூக ஊடகங்களிலும் சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகள் கண்டிப்பாகப் பார்க்கக்கூடிய இடமாக லிட்டில் இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, உள்நாட்டு மக்களும், அதிலும் குடும்பங்களும் இளையர்களும் லிட்டில் இந்தியாவிற்கு வருவதை ஊக்குவிப்பது எப்படி என்பதை கழகம் ஆராய்ந்து வருகிறது. ஆய்வு, அதன் முடிவுகளை எட்டுவதற்கு முன்பாகவே, பல காலமாக லிட்டில் இந்தியாவிற்கு அடிக்கடி சென்றுவரும் நாம் இப்பிரச்சினைகளை அறிந்திருக்கிறோம். 

சைனாடவுன் போலவோ அல்லது கேலாங் சிராய் போலவோ லிட்டில் இந்தியாவில் வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லை. பெரிய, புதிய கட்டடங்கள் மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில், அடுக்குமாடி அல்லது கீழ்த்தள வாகனம் நிறுத்துமிடங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்குள், தேக்கா பிளேஸ், தேக்கா உணவங்காடி நிலையம், கிள்ளான் லேன் பலமாடி வாகன நிறுத்துமிடம், முஸ்தஃபா கடைத்தொகுதி, சென்டிரியம் ஸ்குவேர், சிட்டி  ஸ்குவேர் ஆகிய இடங்களைத்தவிர மற்ற அனைத்தும் சாலையோர வாகன நிறுத்துமிடங்களே. சாலையோர வாகன நிறுத்துமிடங்களைப் பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளை வாகனமோட்டுவோரே அறிந்திருப்பார்கள். சரமாரியாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கையில் அவ்விடங்களில் நிதானமாய் வாகனத்தை நிறுத்துவதென்பது மிக நுட்பமான காரியம்.

இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குவது, லிட்டில் இந்தியாவில் இயங்கும் கடைகளுக்குப் பொருள்களை விநியோகம் செய்யும் சரக்கு வாகனங்களும், அவை ஆக்கிரமித்துக் கொள்ளும் இடங்களுமே. அவர்களையும் குறைகூற முடியாது. வாகனத்தை நிறுத்திச் சரக்குகளை இறக்குவதற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இதனையும் தாண்டி, வார இறுதி நாள்களில், வெளிநாட்டு ஊழியர்கள் பலர், சரக்கு அல்லது ஆட்கள் ஏற்றிச் செல்லும் அவரவரின் நிறுவன வாகனங்களைச் சாலையோரம்  நாள்முழுவதும் நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாகன நிறுத்துமிடங்களில் இலவசமாக வாகனத்தை நிறுத்தலாம். சிங்கப்பூர்வாசிகள் தனியாக அல்லது குடும்பத்தினருடன் வாகனத்தில் வந்து நிறுத்துமிடம் தேடியலைந்து நிறுத்தி, கடைகளுக்கோ, உணவகங்களுக்கோ செல்வதென்பது மலையேறி கொடிநடுவதற்குச் சமம்.

இந்தச் சவால்களைத் தாண்டி சிராங்கூன் சாலையில் நடந்து செல்வதைத் தடைகள் தாண்டும் போட்டியுடன் ஒப்பிடலாம். மேலும் கீழும் ஏறி இறங்கும் நடைபாதை, நடைபாதைகளுக்கு இடையே கடைகள் என பல்வேறு சவால்களைத் தாண்டி, நமக்குப் பிடித்த இடங்களைச் சென்றடைவதை நாம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் சகித்துக் கொண்டிருக்கிறோம். 

அடர்த்தியான கட்டடங்களுக்கு மத்தியில் நிழலுக்கு ஒதுங்க இடமில்லை. இளைப்பாற, சற்று அமர்ந்து தொடர இடங்கள் இல்லை. உணவகங்களைத் தவிர பொது இடங்களில் இவ்வசதிகள் இருந்தால் குடும்பத்தோடு வரக்கூடிய இடமாய் நம் லிட்டில் இந்தியா மாறலாம்.

முதியோரையும் குழந்தைகளையும் அழைத்துவர ஏதுவாகத் தற்போதைய லிட்டில் இந்தியா இல்லை. முதியோருக்குத் துணையாக யாராவது வரவேண்டும், கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும். ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும்வழியில், நடைபாதைக் கடைகளைத் தவிர்க்கச் சாலையில் இறங்கி, நடைபாதையில் மீண்டும் ஏறி, பல சிறு சாலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. 

குழந்தைகளை அழைத்துவர வேண்டுமெனில் அதற்கான வசதிகளும் மிகக் குறைவு. குழந்தைகளின் உடை மாற்றும் இடங்கள், பாலகர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், சிறுவர்களின் பாதுகாப்பைக் கருதி ஒதுக்கிவைக்கப்பட்ட இடங்கள் என ஏதும் இல்லாதபட்சத்தில் எப்படி குடும்பத்தோடு வருவது? 

இளையர்களை ஈர்ப்பதென்பது குதிரைக்கொம்பாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் அமர்ந்து, பாடங்கள் படித்து, உரையாடி, உணவருந்திச் செல்வதற்கான இடவசதிகள் ஓரிரண்டு இருந்தாலும் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ‘ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) ஒன்று இருப்பதுபோல் ஏன் வேறு சில இடங்கள் உருவாகவில்லை. கம்போங் கிளாம் (Kampong Glam) வட்டாரம் மாறியிருப்பதைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. நம் இந்திய இளையர்களும் அங்குதான் செல்கிறார்கள். பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் உள்ளூர்வாசிகளும் சுற்றுப்பயணிகளும் அதிகம் வந்துபோகும் இடமாக அவ்விடம் வளர்ந்திருக்கிறது. நம் லிட்டில் இந்தியா அந்நிலையை எட்ட, நாம் இப்போதே முயற்சிகள் எடுக்க வேண்டும். 

குடும்பங்கள், முதியோர், இளையரோடு அனைவரும் வந்து செல்லும் இடமாக மாறுவதற்கு, சுற்றுப்புறத் தூய்மையும் ஓர் இலக்காக இருக்க வேண்டும். கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியாமல் இருக்க வேண்டும். உணவகங்களைச் சுற்றியுள்ள எலித் தொல்லையை அகற்ற வேண்டும்.

விரும்பி வருவோரின் எண்ணிக்கையின் பாரத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது லிட்டில் இந்தியா. மற்ற இடங்களைப் பராமரிப்பதைவிட சில மடங்கு கூடுதலாகவே லிட்டில் இந்தியாவை பேண வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள், சுற்றுப்பயணிகள், கடைகளில் வேலைசெய்வோர் என அனைவரையும் லிட்டில் இந்தியா எனும் சதுரத்திற்குள் திணித்துவிட்டதுபோல் உணர்வு ஏற்படுகிறது.

என்ன செய்யலாமெனச் சிந்திக்கையில், சுற்றுப்புறத் தூய்மை, உணவுத்தூய்மை, சாலைப் போக்குவரத்து, கட்டட மேம்பாடு, மனிதவளம், சுற்றுப்பயணத்துறை போன்ற அரசாங்கத்தின் பல அங்கங்களோடு, இந்திய சமூக அமைப்புகள், கடைகளை நடத்துவோர், ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுகூடிப் பிரச்சினைகளுக்குப் புதிய வழிமுறைகளைக் கண்டுப்பிடிக்க வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பின் பலத்தில்தான் லிட்டில் இந்தியாவைக் கரைசேர்க்க முடியும். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என மெத்தனமாக இருந்துவிட்டால், லிட்டில் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டிய தருணம் இது.

குறிப்புச் சொற்கள்