தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு

3 mins read
833eaf7e-efae-4bd6-9829-f8184e3cd040
மனநல விழிப்புணர்வு நடையில் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் பொருளியலில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

குப்பைகளை அகற்றுவதில் தொடங்கி, குடியிருப்புகளைச் சுத்தம் செய்வது, நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவது, வீட்டில் பிள்ளைகளையும் முதியோரையும் பராமரிப்பது என்று பல முக்கியப் பணிகளை அவர்கள் செய்கிறார்கள். நாம் செய்யத் தயங்கும், செய்ய சிரமப்படும் பணிகளை அவர்கள் செய்கிறார்கள்.

வாழ்வாதாரம் தேடி, நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து அவர்கள் இந்த நாட்டிற்கு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் இளையர்கள். இளமையின் துடிப்பையும் ஆற்றலையும் அவர்கள் இந்நாட்டுக்குத் தருகின்றனர்.

சிறிய நாட்டில், அடர்ந்த கட்டமைப்புகளுக்கும் மக்கள்தொகைக்கும் இடையில் அத்தகையோரின் நிலை என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் செய்துவரும் வசதிகள் ஏராளம்.

அவர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தங்கள், விதிமுறைகள் போன்றவை நியாயமாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.

உணவு, உறைவிடம், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற தேவைகளுக்கு அப்பால், மருத்துவ சேவை, சட்ட ஆலோசனை, காப்புறுதி போன்றவையும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, உடனடியாகச் சரிசெய்யப்பட்டன.

நார்த்தம்பர்லேண்ட் சாலையில் தனியார் பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. தீவின் பல பகுதிகளில் இருந்தும் லிட்டில் இந்தியா பகுதிக்கு ஊழியர்கள் வருவதற்கு அது வசதியாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

கொவிட்-19 தொற்று தங்குவிடுதிகளில் பரவியதால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பெரும்பாதிப்பின் எதிரொலியாக தங்குவிடுதிகளின் அறைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது; சமையலறைகள், கழிவறைகள், குளியலறைகள் அதிகரிக்கப்பட்டன. பெரிய தங்குவிடுதிகளில் மளிகைக் கடைகள், தொலைபேசியகங்கள், முடிதிருத்தகங்கள், உணவகங்கள் பல வசதிகளும் அமைக்கப்பட்டன.

தங்குவிடுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்பட்டு, பல நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனினும், பெரும்பாலான மாற்றங்களும் மேம்பாடுகளும் ஒரு நிகழ்வு அல்லது சூழலின் விளைவாக, எதிரொலியாகவே இடம்பெறுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக ஏறுமுகமாகவே உள்ளது. இந்நிலையில், தொலைநோக்குச் சிந்தனையுடன் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டும் சிங்கப்பூர், வெளிநாட்டு ஊழியர்களின் நிலை, அவர்களால் சிங்கப்பூர் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து, முன்னேற்பாட்டுடன் திட்டங்களைத் தீட்டுவது மேலும் பயனளிக்கும்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் 2009ஆம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 1.05 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்தனர். அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் 1.54 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கையும் 2009ல் 196,000 இருந்த நிலையில் இவ்வாண்டு 294,800ஆக உள்ளது.

இந்தக் கூடுதல் எண்ணிக்கையில் உள்ள ஊழியர்களின் தேவைக்கு இந்தச் சமூகம் எந்தெந்த வகையில் மேலும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது.

பொது இடங்கள் நெரிசலாகி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அல்ஜுனிட், பாய லேபார், சிட்டி ஹால், லிட்டில் இந்தியா, ஆர்ச்சர்ட் போன்ற இடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் வருவதையும் நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் கூட்டமாகக் கூடி அமர்ந்து பொழுதைக் கழிப்பதையும் காணமுடிகிறது.

அத்தகைய சூழலை சிங்கப்பூரர்கள் எவ்வாறு ஏற்றுள்ளனர் என்பதே முக்கியக் கேள்வி. ஞாயிறுகளில் அத்தகைய இடங்களைத் தவிர்த்துவரும் சிங்கப்பூரர்கள் ஒருபுறம், இந்நிலையைச் சகித்துக்கொண்டு வருவோர் மறுபுறம் இருக்க, அதனைத் தாண்டி இந்த இயல்பை ஏற்று அரவணைத்து வருவோரும் உள்ளனர். மரத்தடியில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஊழியருக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்ச்சியடைந்த சிங்கப்பூரரின் செயல் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.

அதிகரித்துள்ள வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையால் சவால்களும் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. பொதுப் போக்குவரத்தில் சிறுநீர் கழிப்பது, குடிபோதையில் வேண்டத்தகாத காரியங்களைச் செய்வது, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்றவையும் நடக்கின்றன. அப்படிச் செய்வோர் தண்டனையை எதிர்நோக்குகின்றனர். மீண்டும் சிங்கப்பூருக்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய கடுமையான சட்டங்களை அறிந்து, ஊழியர்கள் சட்டப்படி நடந்துகொள்வது முக்கியம்.

எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஒருபுறம் இருக்க, தலைமுறை மாற்றமும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் காணமுடியாத ஒன்றன்று.

அவர்களது தேவைகளும் விருப்பங்களும் மாறிவருகின்றன. அந்த மாற்றங்களுக்கு ஈடாக நம் சட்டதிட்டங்கள், வசதிகள், ஏற்பாடுகள் இருக்கின்றனவா என்பதைத் தொடர்ந்து சிந்தித்து வரவேண்டும்.

வரும் புதன்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் நாளாக கொண்டாடப்படும் வேளையில், சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் சேவைக்கு நன்றி நல்குவதோடு அவர்களை அரவணைக்கவும் அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படவும் கடப்பாடு கொள்வோம்.

குறிப்புச் சொற்கள்