தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அத்தியாயம்: ஒற்றுமையில் பலம் காண்போம்

3 mins read
6cc52bf3-e8c2-4504-ad2a-d7c35854da11
இஸ்தானாவில் புதிய அமைச்சரவைப் பதவியேற்புச் சடங்கில் பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் (முன்வரிசையில், இடமிருந்து 3வது). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாட்டின் நான்காவது பிரதமராக, நான்காம் தலைமுறைத் தலைவராக லாரன்ஸ் வோங்கும் அவரது அமைச்சரவையும் கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுள்ளனர்.

சிங்கப்பூருக்கே உரிய கொள்கைத் தொடர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் புதிய, இளைய தலைமுறையின் மாற்றத்திற்கான விருப்பத்தை அரவணைத்த வண்ணமும் அமைந்துள்ளது புதிய அமைச்சரவை. 1980களுக்குப் பிறகு இரு துணைப் பிரதமர்கள் அங்கம் வகித்து வந்த நிலையில், இப்போது ஒரு துணைப் பிரதமர் மட்டுமே இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று.

உலகளவில் பெரும் பூசல்களும் பொருளியல் நிலைத்தன்மையின்மையும் வர்த்தகத் தடைகளும் சூழ்ந்து வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் எந்தவித கவனமும் இல்லாது தற்போதைய நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை நாடுகள் தேடி வருகின்றன. அத்தகைய சூழலில் பிரதமராக ஓராண்டு அனுபவம்கூட இல்லாத நிலையில் சிங்கப்பூரர்களின் ஆதரவைத் தேடி தேர்தலில் மக்கள் செயல் கட்சியை முதன்முறையாக வழிநடத்தினார் திரு வோங்.

எதிர்பார்ப்பைவிட அதிகமான வாக்குகளை, பலமான ஆதரவைத் தன்வசப்படுத்தி நிலையான வலுவான அரசாங்கத்தை அமைத்துள்ளார் திரு வோங்.

துடிப்பான புதியவர்களும் அனுபவமிக்கவர்களும் இடம்பெற்றுள்ள அமைச்சரவை, இருவேறு தலைமுறையினரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இணைந்து கொள்கைகளிலும் முடிவுகளிலும் சமநிலை காண உதவும் என நம்பலாம்.

புதிய அமைச்சரவையில் ஓரிரு ஆண்டுகளில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பதையும் பிரதமர் சுட்டியுள்ளார். ஆக, பிரதமரின் உத்திபூர்வ முடிவுகளும் தெரிவுசெய்த அமைச்சர்களும் தங்கள் செயல்பாடுகளைக் கொண்டு மக்களின் நம்பிக்கையைப் பெற அந்தக் குறுகிய காலமே உள்ளது. எனவே, உடனடியாகச் செயலில் இறங்கி, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது.

தற்போதைய அமைச்சரவை பெரும்பாலும் புவிசார் சூழலைக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வர்த்தக, தொழில் அமைச்சர், வர்த்தக உறவுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர், வெளியுறவு அமைச்சர் போன்ற துறைகளில் மாற்றம் இல்லாதது சரியானதே. நிதி அமைச்சர் பொறுப்பையும் பிரதமரே வைத்துக்கொண்டுள்ளார்.

இன்றைய தேவைக்கான அமைச்சரவையாக இருக்கும் நிலையில் வெளிநாட்டுச் சூழலைத் தாண்டி உள்நாட்டு சவால்களையும் சமாளிப்பது அவசியம்.

விலைவாசி உயர்வு, வீட்டு விலை உயர்வு, சிறு வணிகர்களின் சவால்கள் என உடனடி கவனத்தைக் கோரும் பிரச்சினைகளும் உள்ளன.

தேசிய வளர்ச்சி அமைச்சை வழிநடத்தும் சீ ஹொங் டாட், தலையாய சவாலாக இருக்கும் வீடமைப்பைச் சமாளிக்க வேண்டும்.

புதியவர்களுக்கும் உடனடி அமைச்சர்-நிலை பொறுப்பு வழங்கப்பட்டது மற்றொரு தனித்துவம். பெரும்பாலும் அனுபவசாலிகள் வழிநடத்திய போக்குவரத்து அமைச்சையும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சையும் முதல் முறையாகத் தேர்தலில் பங்கெடுத்து வென்றவர்கள் வழிநடத்துகின்றனர்.

சீன, மலாய் இனக்குழுக்கள் தொடர்பான துறைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீன சமூகப் பங்காளித்துவக் குழுவின் தலைவர் பொறுப்பை எட்வின் டோங்கிடமிருந்து சீ ஹொங் டாட் ஏற்றுள்ளார். மெண்டாக்கியின் தலைவர் பொறுப்பை மசகோஸ் ஸுல்கிஃப்லியிடமிருந்து ஸாக்கி முகம்மது ஏற்றுள்ளார். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக முகமது ஃபைஷால் இப்ராகிம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் இந்திய சமூக அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் குறித்து விரைவில் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று நம்புவோம்.

பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி அணியில் இடம்பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட திரு தினேஷ் வாசு தாஸ், அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். கலாசார, சமூக இளையர்துறை; மனிதவள துணை அமைச்சராக அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தென்கிழக்கு வட்டார மேயராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம் என்ன செய்யவேண்டும் என்பதில் திரு தினேஷ் தெளிவாக உள்ளார். கலந்துரையாடல்கள், மதியுரை, கல்வி போன்ற வழிகளில் இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். இடைவெளியைக் குறைத்து, ஒருங்கிணைப்பைப் பேணி வலுவான, ஒன்றுபட்ட இந்தியச் சமூகத்தை உருவாக்க அவர் விரும்புகிறார்.

தலைமைத்துவப் புதுப்பிப்பு முக்கியமானது என்பதால், அரசாங்கம் அதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது. மாறிவிட்ட உலகில், குறிப்பாக பாதுகாப்பு, பொருளியல் போன்றவற்றில் சிங்கப்பூர் அதன் நிலையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

அனுபவமிக்க மூத்தவர்களும் புதிய சிந்தனையுடைய புதியவர்களும், தொடர்ச்சியும் மாற்றமும், இணைந்தே செயல்படும் சிங்கப்பூர் தனிப்பாங்கு, சிக்கலான உலகில் தொடர்ந்து பிரகாசிக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியதுபோல தொடர்ந்து கேட்டறிந்து, பரவலாக அனைவருடனும் இணைந்து பழகி, சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள சிங்கப்பூரர்களுடன் பங்காளித்துவ உறவில் ஈடுபடும் அமைச்சரவையாக இருக்க வேண்டும்.

மேலும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிங்கப்பூரர்களாகிய நாமும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்.

குறிப்புச் சொற்கள்