வல்லுநர்களை மட்டும் சார்ந்தது அல்ல மொழிபெயர்ப்பு

வல்லுநர்களை மட்டும் சார்ந்தது அல்ல மொழிபெயர்ப்பு

3 mins read
a0cddf9c-06cd-4505-a874-ad940e4abbcc
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூர்! இந்தப் பெயரை உலக அரங்கில் உச்சரிக்கும்போதே கேட்போர் மனத்தில் ஏற்படும் உணர்வு, அது பல்லின மக்கள் ஒன்றாக இணைந்து வாழும் நாடு எனும் எண்ணம்தான். 

அந்தச் சிறப்புக்கு மேலும் வலுசேர்ப்பதில் இங்கு நிலவும் பன்மொழித்திறன் சார்ந்த சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு அதிகாரத்துவ மொழிகள் இங்குள்ளன. இனம், சமயம், கலாசாரம் வேறாக இருப்போரைக் கொண்ட வாழ்வியல் களம் நம் தேசத்தினுடையது. என்றாலும், அத்தகைய தளத்திலும், அனைவரும் ஒன்றாகக் கலந்துரையாட, கலந்துறவாட நேசப் பாலம் அமைத்துக் கொடுத்தவை மொழிகள். 

1965ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து பிரிந்துவந்து தன்னிச்சையாக இயங்கத் தொடங்கிய சிங்கப்பூர், இங்கு வாழ்ந்துவந்த பலதரப்பட்ட மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் காக்க மொழியைத் தனது அரசியல் அமைப்பில் தெளிவாய் குறிப்பிட்டது.

அது மட்டுமல்லாது, ஒரு முக்கியக் கருவியாகவும் மொழியை அதன் கையிலெடுத்தது நாம் அறிந்ததே.  

தகவல் அறியும் உரிமை என்பது ஆங்கிலம் அறியாதோருக்கும் உண்டு, எனவே அறிவுசார் தகவல்களை, கோட்பாடுகளை ஒவ்வொருவரின் தாய்மொழியில் கொண்டுசேர்ப்பது அரசாங்கத்தின் கடமையெனக் கருதிய சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்கள் இருமொழிக் கொள்கையை வலியுறுத்திப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தோடு அவரவர் தாய் மொழியையும் பயில ஆவன செய்தனர்.

இந்த நடவடிக்கை, அரசாங்கத்தின் முக்கிய சித்தாந்தங்களையும், மக்களுக்கான எதிர்காலத் திட்டங்களையும் தத்தம் தாய்மொழி தவிர வேறுமொழி அறியாதோருக்கும் யதார்த்தமாகக் கொண்டு சேர்த்தது. 

இதன் விளைவாக மொழிபெயர்ப்பு இருந்தால் நல்லது என்பதைத் தாண்டி, அத்தியாவசியமாகி, அது சிங்கப்பூரின் அடையாளம் என்றே மாறிப்போனது. 

இச்சூழலில் சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த சமுதாய கட்டமைப்பில் மொழிபெயர்ப்பு என்பது உயிர்த்துடிப்பாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தை மக்களாகிய நாம் நினைவுகூர்ந்திடுவோம். 

பன்மொழித் திறன் நமது வாழ்க்கையின் உயிரோட்டமாகத் திகழும் வேளையில், உலக அரங்கில் மட்டுமல்லாது, உள்ளூர் அளவிலும் தடையின்றி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள, மொழி சார்ந்த திறன் அத்தியாவசியம் என்பதை உணர்ந்தவர்களாய் செயல்படுவோம்.

மொழிபெயர்ப்பின் மீது நாட்டம், அக்கறை கொண்ட சமூகத்தைக் கட்டமைத்திட அரசாங்கம் பற்பல முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது தேசிய மொழிபெயர்ப்புக் குழு.

மொழிபெயர்ப்பின் தாக்கத்தை அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், எனப் பல்வேறு தரப்பினரிடையே வளப்படுத்தவும் விரிவுபடுத்தவும் கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறுத் திட்டங்களை வகுத்தும் அதைச் செயல்படுத்தியும் வருகிறது இக்குழு.

மொழிபெயர்ப்பில் பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்க ‘மொழிபெயர்ப்பில் சமூகம்’ எனும் திட்டம், மொழிபெயர்ப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்க மானியம், அரசாங்கத் தொடர்புத் தகவல்களைச் சரிபார்க்கக்கூடிய தொண்டூழியர்களைத் திரட்டும் இலக்குடன் அறிமுகம் கண்ட ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணி’ என இதன் தொடர்பிலான முயற்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனினும், ஓசை எழுப்ப ஒரு கரம் போதாது, என்பதை உணர்ந்தவர்களாய், மொழிபெயர்ப்பு நிபுணர்களுக்குரியது என்று கூறிவிட்டு விலகிச் செல்லாதவர்களாய், சமூகத்திற்காக, சமுதாயத்தினருடன் இணைந்து, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்திட முன்வருதல் அவசியம்.

பல மாதங்களுக்கு முன்னர் நம் பிரதமர் லாரன்ஸ் வோங், மக்களிடம் பகிர்ந்துகொண்ட பல்வேறு தகவல்களில், பிற மொழிகளைக் கற்க அவர்  எடுத்து வரும் முயற்சி பல்லின மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரதமர்  கொண்டிருக்கும் இந்நோக்கம், மொழியாற்றல் சார்ந்தது மட்டும் இல்லை. அது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் சென்றடைய அவர் ஏற்றுள்ள வழிமுறை. 

தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டிராத தலைவர்கள், பிரபலங்கள் உரையாற்றும்போது உதிர்க்கும் ‘வணக்கம்’, ‘வாழ்த்துகள்’, ‘நன்றி’ என்ற ஒற்றைச்சொற்கள் நம் செவியைத் தாண்டி உள்ளத்தில் உவகைப் பூக்களை மலரச் செய்வதை எண்ணிப் பார்த்தால் மொழி ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள இயலும். 

மொழியைப் பாதுகாக்க அரசு இயந்திரம் இயங்கட்டும், தொழில்நுட்பம் வரட்டும், கூடுதல் திட்டங்கள் வகுக்கப்படட்டும், என்று ஒதுங்கிடாமல், பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரை நல்லிணக்கமிக்க சமூகமாகத் தொடர்ந்து திகழச் செய்ய, குடிமக்கள் அனைவரும் துடிப்புடன் இந்தச் சூழலுக்கு ஆக்ககரமான பங்களிப்பு நல்குவது மிகவும் முக்கியம்.

இது அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக நம்மை மிளிரச் செய்யும்.

மொழிபெயர்ப்பை வார்த்தைகளின் உருமாற்றமாக மட்டும்  பார்க்காமல்,  ஒவ்வொரு சமூகத்திற்கிடையேயும் நிலவும்  விலைமதிப்பற்ற விழுமியங்களைத், தலைமுறைகள் கடந்தும் கடத்திட உதவும் பண்பாட்டுப் பரிமாற்றங்களாகப் பார்த்து மகிழ்வோம்.

மொழிச் சமத்துவம் சிறக்க, வேற்றுமையில் ஒற்றுமைகொண்ட சமூகமாகத் தொடர்ந்து வீறுநடைபோட, பல்லின மக்களின் அன்பைத் தொடர்ந்து வென்றிட, மொழிபெயர்ப்பு ஆற்றலை, மொழிக்குத் தொண்டூழியம் செய்யும் மனப்பாங்கைப் பேணுவோம்! பாதுகாப்போம்!

குறிப்புச் சொற்கள்