தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களே விதைக்கும் நல்லிணக்கம் படர்ந்தோங்கும்

3 mins read
3859b545-3b09-4618-99c5-f69b40b7c4d9
சமூக, கலாசார கொள்கை வகுப்பாளர்கள், இளம் தலைவர்கள் எனப் 1,000க்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமுதாயத்தில் நல்லிணக்கத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதில் மக்களின் நேரடி முயற்சியும் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. அதுவும் சிங்கப்பூர் போன்ற பல இன, பல மொழி, பல சமயக் கோட்பாடுகளைக் கொண்ட சமூகம் என்றென்றும் இந்த அடிப்படை நோக்கத்தை மறந்துவிடக்கூடாது.

ஒருங்கிணைப்பு, நல்ல மனிதர்களின் முயற்சியின்றி சமூகத்தில் இயல்பாக உருவாகிவிடாது. அமைதியான சூழலில் நிலவும் புரிந்துணர்வு, எண்ணங்களும் சூழலும் மாறும்போது சிதைக்கப்படலாம். இம்மாற்றங்கள் நம் நாட்டின் எல்லைக்கு அப்பால் உருபெற்று நம்மைத் தாக்கியிருக்கலாம்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சமுதாயம் எனும் அனைத்துலக மாநாட்டில் கலாசாரப் பன்முகத்தன்மைக்கு ஒட்டுத்தையல் கம்பளத்தை உவமையாக இதுவரை பயன்படுத்தி வந்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், பலவண்ண பாத்திக்  துணியைப் புதிய உவமையாகப் பயன்படுத்தினார். 

ஒட்டுத்தையல் கம்பளம் கூட பிரிந்து சின்னபின்னமாகலாம், ஆனால் நூல்களின் நிறம் வெவ்வேறாக இருந்தாலும் நாடு என்ற ஒரே துணியாக எல்லாமே ஒன்றிணையப்பட்டிருப்பின் ஒற்றுமை நிலைநிறுத்தப்படும் என்பதே அவர் சொல்ல வரும் கருத்து.  

சமூக அடையாளங்கள் வேறுபட்டிருந்தாலும் அனைத்திற்கும் பொதுத்தளமாகக் குறிப்பிடப்படுவது தேசிய அடையாளமே. அதுவே நாம் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் சக்திவாய்ந்தது. 

சமுதாய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் நிலவி வரும் சிக்கல்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன. சமூக, கலாசார கொள்கை வகுப்பாளர்கள், இளம் தலைவர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் சமூக ஒருங்கிணைப்பை நுட்பமாக நுணுகி, வெளிப்படையாகப் பேசுவதே இத்தகைய மாநாடுகளின் சிறப்பு.

சில நேரங்களில் சிலர் முன்வைக்கும் கருத்து வேறு சிலருக்கு நெருடலாக இருந்தாலும்  நல்லிணக்கம் நாடுவோர் சகிப்புத்தன்மையைக் காத்து புரிந்துணர்வை நாடுபவர்களாக இருப்பார்கள் என்பது இம்மாநாட்டின்வழித் தெரியவந்தது. சகிப்புத்தன்மை புரிந்துணர்வாகவும் இறுதியில் அரவணைப்பாகவும் உருமாறும் வழிகளைத் தேடுவது அனைவரின் கடமை என்பது வலியுறுத்தப்பட்டது.

ஒருவர் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறாரோ அதை ஒட்டிய இணையப் படைப்புகளையே இணையத் தேடுதளங்கள் அவருக்குக் காண்பிக்கின்றன. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களுடன் பேசும் பழக்கமும் குறைகிறது. இதனால், நாட்டிலும் உலகிலும் பிரிவினைக் கருத்துகள் பெருகிவரும் அபாயம் உள்ளது. 

சிங்கப்பூரில் வீடுகளை வாங்கும்போதும் வாடகைக்கு எடுக்கும்போதும், பல இன சமூகத்தினரும் கலந்திருக்க வேண்டும் எனும் கொள்கை, தேசிய சேவை, முதன் மொழியாக ஆங்கில மொழி ஆகிய அரசாங்க கொள்கைகள், ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் சட்டங்கள் என்றும் கணினியின் வன்பொருள் போலாகும் என்றும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் குறிப்பிட்டார். வன்பொருள் திடமாக இருந்தாலும் கணினிக்குச் சரியான மென்பொருளும் தேவை. வெவ்வேறு வகையான மக்களை ஒருங்கிணைக்க மக்களே உருவாக்கியுள்ள பாலங்களை மென்பொருளுடன் அவர் ஒப்பிட்டார்.

இதனால் வெவ்வேறு சமய அடையாளங்களைக் கொண்டோருடன் பேசவும் ஒன்றாக வாழவும் பெரும்பாலான சிங்கப்பூரர்களால் முடிகிறது. ஆனாலும் இந்த நோக்கங்கள் நிரந்தரமானது என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. சமூகப் பணி, தொண்டூழியம், அறப்பணிகள் பலரையும் இணைக்கும். அவற்றை ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தைக் கூடுதலானோர் அறியும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாநாட்டின் கலந்துரையாடல்களும் அதில் உதித்த முடிவுகளும் முக்கியமானவை. இந்திய சமூகத்தில் பல சமயத்தையும் பல மொழிகளையும் சார்ந்தோர் இருக்கின்றனர். அதோடு, பல தலைமுறைகளாய் சிங்கப்பூரில் இருப்பவர்களும் கடந்த சில ஆண்டுகளில் இங்கே குடியேறிவர்களும் ஒன்றுகூடும் பொதுவிடங்களும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், புரிந்துணர்வோடு நடந்துகொள்வது அதிமுக்கியமாகிறது.

சிறுபான்மையினராய் இருப்பதால் நம்மை நாமே வேறுப்பட்டவராய் நினைப்பின், இப்பிரிவினைச் சிந்தனைகள் நம் சமூகத்தை நலிவடையச் செய்யும். பொதுவான கலாசார நம்பிக்கைகள், இலக்கியம், இசைப் பாரம்பரியம், உணவு எனப் பலவற்றில் ஒற்றுமையைக் கண்டு ஒன்றிணையலாம்.

அதோடு, பல இன சிங்கப்பூரில் சீன, மலாய் இனத்தவரோடு ஒன்றுபட்டு சிங்கப்பூரராய் செயல்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும். நாம் செல்லும் பள்ளி, பணிசெய்யும் இடங்கள், கடைவீதிகள், தேசிய நாள் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றில் அனைத்து இனத்தவரின் பங்களிப்பும் பங்கேற்பும் இருக்க வேண்டும். அப்படி இருப்பின் சிங்கப்பூர் நெடுங்காலம் உலகின் முதல்தர வரிசையில் இடம்பெறும். உலகிற்கு எடுத்துக்காட்டாய் திகழும். 

2022ல் தொடங்கப்பட்ட முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் முதற்கொண்டு, இந்த அண்மைய மாநாடு வரையில் கூறப்படும் செய்தி ஒன்றுதான். ஒருவரையொருவர் பராமரிக்கும்போதுதான் உலகச் சூழல் கரடுமுரடாக மாறினாலும் நாம் நிலைகுலையாமல் நிற்போம்.

தனிமனிதர்களின் ஆற்றல் அபாரமானது. அவை நாட்டையும் உலகையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை. பிரிவினைப் பேச்சு எனும் சாட்டை வீச்சுகளுக்கு ஆடாமல் பண்பைக் கடைப்பிடிப்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்.

குறிப்புச் சொற்கள்