உடல்நலமே வாழ்க்கைத் தரத்தை முடிவுசெய்யும்

4 mins read
88531527-7728-4bb9-b749-2f3a938c9195
படம்: - தமிழ் முரசு

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த பல வழிகளில் அரசாங்கம் கைகொடுக்கவுள்ளது.

பல் மருத்துவத்திற்கும் நீண்டகாலப் பராமரிப்புக்கும் மானியங்கள் அதிகரிக்கப்படும் என்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார். அரசாங்கம் மானியங்களை ஆண்டுதோறும் உயர்த்தி வரும். அது 2030ஆம் ஆண்டுக்குள் $30 பில்லியனுக்கும் அதிகமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களை மறுபரிசீலனை செய்வதிலும் மாற்றியமைப்பதிலும் அரசாங்கம் இரு முக்கிய காரணங்களைக் கருத்தில் கொள்கிறது. ஒன்று, மூப்படைந்துவரும் சமுதாயம். இரண்டாவது, இப்போதுள்ள மூப்படைந்தோர், சிங்கப்பூரின் வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் பிறந்து, வளர்ந்திருப்பதால், பெரும்பாலும் அதிகச் சேமிப்பைக் கொண்டிராத தலைமுறையாக இருப்பர். பலரும் சொந்த வீடுகள் வைத்திருந்தாலும், விலைவாசி ஏற்றத்தால் அத்தியாவசியச் செலவுகளோடு, மருத்துவச் செலவினங்களை ஊதியத்தின்வழியோ சேமிப்பின்வழியோ எதிர்கொள்வதில் சவாலைச் சந்தித்து வருகின்றனர்.

சிகிச்சைகளுக்குப் பணம் செலுத்த மெடிசேவ் கணக்குகளிலிருந்து பயன்படுத்தக்கூடிய தொகை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்கப்படுகிறது. முக்கியச் சிகிச்சைக்கு முந்தைய சோதனைகளுக்கான செலவுகளைக் குறைத்துகொள்ள, அதிக மெடிசேவ் நிதியைப் பயன்படுத்தலாம்.  

சுகாதாரச் செலவினத்திற்கான மானியங்கள், தேசிய காப்பீட்டுத் திட்டமான மெடிஷீல்ட் லைஃப் (MediShield Life), கட்டாய மருத்துவச் சேமிப்புத் திட்டமான மெடிசேவ் (MediSave), வசதி குறைந்தவர்களுக்கான மெடிஃபண்ட் (MediFund) பாதுகாப்புத் திட்டம் ஆகிய மூன்றும் அதிகரித்துவரும் சுகாதாரச் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் எனும் கருத்தை அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.

ஃபிளெக்ஸி-மெடிசேவ் (Flexi-MediSave) திட்டத்தின்கீழ், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் வெளிநோயாளிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய தொகை அக்டோபர் 2025 முதல் ஆண்டுக்கு $300லிருந்து $400 ஆக உயர்த்தப்படும். அதோடு, காந்த அதிர்வு இயல்நிலை வரைவுக்கு (MRI), ஜனவரி 2026 முதல் ஆண்டுக்கு $300லிருந்து $600 ஆக உயரும். இம்மாற்றங்கள், ஸ்கேன்களுக்காக ஆண்டுதோறும் மெடிசேவ் நிதியைப் பயன்படுத்தும் 500,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், ஃபிளெக்ஸி-மெடிசேவைப் பயன்படுத்தும் 700,000 வெளிநோயாளிகளுக்கும் உதவியாக இருக்கும்.

நோய்களைத் தவிர்ப்பதே நீண்டகாலக் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளிடமும் இளம் பருவத்தினரிடமும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ‘குரோ வெல் எஸ்ஜி’ (Grow Well SG), நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ‘ஹெல்தியர் எஸ்ஜி’ (Healthier SG) போன்ற மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளில் அரசாங்கம் முதலீடு செய்தாலும், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய சுகாதாரத் திறனையும் விரிவுபடுத்தப்படுகிறது. இங்குள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகள், 2020ஆம் ஆண்டில் 500 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை 2024ஆம் ஆண்டில் 550 ஆக உயர்த்தின. 

மேலும், நீண்டகால பராமரிப்புச் செலவுகளுக்கான நிதியுதவியையும் அமைச்சு உயர்த்தி வருகிறது. 

ஒட்டுமொத்தத்தில், செலவு காரணமாக எவரும் உடல்நலக் கோளாறுகளைக் கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதில் அமைச்சு குறியாக உள்ளது.

சிறந்த பல் ஆரோக்கியத்தையும் ஊக்குவித்தது சரியான செயல். நீலம், ஆரஞ்சு சாஸ் (Chas) அட்டைகளை வைத்திருப்பவர்களின் பல் சிகிச்சைகளுக்கு மானியங்கள் உயர்த்தப்பட உள்ளன. பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிகிச்சைக்குக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அமைச்சு பல வகைகளில் செயல்பட்டு வருகிறது.

இதில் முக்கியமான ஒன்றை நாம் மனதில் கொள்வது அவசியம். சிங்கப்பூர் மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தைக் கட்டிக்காக்க அரசாங்கம் வழங்கும் மானியங்களுடன் தனி மனித சேமிப்பும் கட்டாயம் தேவை.

மானியங்கள், மெடிஷீல்ட் லைஃப் போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பல சமயங்களில் முழுச் செலவையும் ஈடுகட்ட முடியாது. முழுமையான பாதுகாப்பிற்குத் தனியார் மருத்துவக் காப்புறுதித் திட்டம் தேவைப்படுகிறது. இளமையிலேயே பலரிடமும் கேட்டுத் தெரிந்து சரியான மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை எடுத்துக்கொள்வது அவசியம். இந்தியர்கள் தேவைக்கும் குறைந்த காப்புறுதித் திட்டத்தையே வைத்திருக்கின்றனர் எனக் கணக்கீடுகள் காட்டுகின்றன.

வயதாக ஆக, காப்புறுதிச் சந்தாக் கட்டணம் அதிகரிக்கும்போது தங்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும் துணைத்திட்டங்களையும் கைவிடுகிறார்கள். பல காப்பீட்டு நிறுவனங்கள் பல தரங்களில் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. குறைந்த செலவிலாவது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்துக்கொள்வது அவசியம். 

ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டங்கள், (Integrated Shield Policies) வயதையும் மருத்துவமனையில் தங்க விரும்பும் வார்டையும் பொறுத்தவை. $1,500 முதல் $5,250 வரை 90 விழுக்காட்டுச் செலவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவை. ஆனால், மீதமுள்ள செலவைச் சரிக்கட்ட, துணைத் திட்டங்கள் (Riders) தேவைப்படுகின்றன. வயது ஆக ஆக, இந்தத் துணைத்திட்டங்களின் விலை அதிகமாகின்றன. இந்தத் துணைத் திட்டங்களை மக்கள் தக்க வைத்துக்கொள்ள காப்புறுதி நிறுவனங்கள் பல தெரிவுகளை வழங்குகின்றன. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவு மலிவானதாக இல்லாவிட்டால் ஒருவர் அதனைத் தரமிறக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தத் துணைக் காப்பீட்டின் மூலம் சிகிச்சை பெறுபவர்கள் தங்கள் கைகளிலிருந்து செலுத்தும் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.

படிப்பு, பதவி, உயர்ந்த ஊதியம் எல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவிற்குத்தான் நிர்ணயம் செய்கின்றன. இளமைக் காலத்தில் நோய் நம்மை அணுகாது என்ற இறுமாப்போடு இருந்திருக்கலாம். ஆனால், முதுமை நம்மை அடக்கிச் சிந்திக்கச் செய்துவிடும். வாழ்க்கையில் கூடுமானவரை நல்ல உடல் நலத்தோடு இருக்க, இளமையிலிருந்தே உடல் ரீதியான நற்பழக்கங்களைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். சிங்கப்பூரரின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய 84 ஆண்டுகள் என்றாலும், இறுதி 10 ஆண்டுகள் ஏற்படும் நோய்களைச் சமாளிக்கும் ஆண்டுகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இதனைத் தவிர்ப்பது பெரும்பாலும் கடினம். சரியான காப்புறுதித் திட்டங்களை வைத்திருந்தோமானால், இடுக்கண் வரும்போது சிரமப்படாது களைய முடியும்.

குறிப்புச் சொற்கள்