சிங்கப்பூரில் 12 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்களின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைக் குறைக்க கடுமையான வழிகாட்டுதல்களைச் சுகாதார அமைச்சு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் சிறுவர்களின் நலன் பேணி, அவர்களைச் சரியான பாதைக்கு இட்டுச்செல்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இது காட்டுகிறது. எனினும், அதைச் செயல்படுத்துவதில்தான் சவால் உள்ளது
கணினி, தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்ட மின்னிலக்கச் சாதனங்களில் அதீத பயன்பாட்டால் பிள்ளைகளின் மனநலன், உடல்நலன், குணநலன் எல்லாமே பாதிக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
சிறுவர்களிடையே அதீத மின்னிலக்கப் பயன்பாடு உலகம் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை.
அளவுக்கு அதிக திரைப் பயன்பாட்டுக்கும் கவனச் சிதறல், அறிவாற்றல் வளர்ச்சி தாமதமடைதல், உடற்பருமன், கிட்டப்பார்வை போன்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தொடர்புள்ளதாக இங்கு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.
குழந்தைகளுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே அவர்கள் அதிக நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவதால், ஒன்பது வயதாவதற்குள் அவர்களின் நிர்வாகச் செயல்பாடு பாதிப்படையலாம் என்றும் ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.
மின்னிலக்கச் சாதனங்களின் திரைநேரத்தைக் குறைக்க உதவும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைச் சிறுவர்கள் பின்பற்றுவதைப் பெற்றோர் உறுதிசெய்வதிலேயே அதன் பயனும் வெற்றியும் உள்ளது.
பிள்ளைகளுக்கு வெளிப்புற விளையாட்டுகள் தேவை எனப் பெரும்பாலான பெற்றோர் கருதினாலும், தங்கள் பாலர்கள் வாரயிறுதிகளில் சில மணி நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கவே செய்கின்றனர்.
மேலும், பெற்றோர் இருவரும் முழுநேரம் வேலை செய்வதால், பணிப்பெண்கள் அல்லது தாத்தா, பாட்டிகளால் பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றனர். எனவே, திரை நேர விதிகளை நடைமுறைப்படுத்துவது கடினமாக உள்ளது. சிறுவர்கள் பதின்ம வயதினராகும்போது, மற்றவர்களுடன் உறவாடவும் தங்கள் அடையாளத்தை வடிவமைக்கவும் மின்னிலக்கச் சாதனங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான தேவையும் அதிகரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வழிகாட்டுதல்களை பிள்ளைகளிடம் செயல்படுத்த கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக வேலைக்குச் செல்லும் பெற்றோர் கூறுகின்றனர்.
அதீத திரைப் பயன்பாட்டின் தீங்குகளைப் பற்றி பணிப்பெண்கள், தாத்தா, பாட்டிகள் உள்ளிட்ட மற்ற பராமரிப்பாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளைத் திரையில் மூழ்கடித்துவிடாமல் வளர்ப்பது பெற்றோரின் கைகளின் மட்டுமில்லை; பலதரப்பினரின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. பெற்றோர், பள்ளிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என எல்லாத் தரப்பினரும் இணைந்து செயலாற்றி மின்னிலக்கச் சாதனங்களுக்கு மாற்று வழிகளை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இந்த மின்னிலக்க யுகத்தில் திரையையே சார்ந்திருக்காமல் சிறுவர்களால் சிறந்தோங்க முடியும்.
நேரக் கட்டுப்பாட்டுடன் திரையைப் பயன்படுத்துவதில் பெற்றோரும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடமிருந்து மின்னிலக்கச் சாதனங்களைப் பறித்துவிட்டு, உணவருந்தும்போதும் படுக்கையிலும் கைப்பேசிகளைப் பெற்றோர் பயன்படுத்தினால் அது ஊருக்கு உபதேசமாகும். வீட்டில் இருக்கும் நேரத்தில் பிள்ளைகளுடன் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு மாறாக கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுகிறோமா என்பதைப் பற்றி பெற்றோர் சிந்திக்க வேண்டும்.
சிங்கப்பூர் ஒரு மின்னிலக்கத் தேசம் என்பதால் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த தனியொரு தீர்வு கிடையாது. அரசாங்கத்தின் வழிகாட்டுதல், பொதுவாகவே அனைத்து வயதினரும் மின்னிலக்கச் சாதனங்களில் அதிக நேரம் செலவிடுகிறோமா என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்க வைக்கிறது.
ஒரு சமுதாயமாக நாம் பிள்ளைகளைப் பிள்ளைகளாவே இருக்கவிட வேண்டும். அதற்கு பொறுமையும் புரிந்துணர்வும் தேவைப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிற்குக் கீழே, உணவகங்களில், பொதுப் போக்குவரத்தில், விமானப் பயணங்களில் குழந்தை அழும்போதோ, சிறுவர்கள் சத்தம் போடும்போதோ அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
பிள்ளைகள் சுட்டித்தனமாகவோ, குறும்புத்தனமாகவோ செயல்படும்போது அவர்களின் பெற்றோரைக் குறைத்து மதிப்பிடுவதை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு பெற்றோர்களின் அழுத்தம் குறையும். பிள்ளைகளிடம் ஐபேட் சாதனத்தைக் கொடுத்து அவர்களை அமைதிப்படுத்த வேண்டும் என்ற நெருக்குதலுக்கு உள்ளாக மாட்டார்கள்.
சத்தமாக, துருதுருவென இருப்பதாகக் கூறி பிள்ளைகளிடம் கடுகடுவென்று இருப்பதற்குப் பதிலாக, அவர்களை அரவணைத்துச் சுறுசுறுப்பை ஊக்குவிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் அதிகமானோருக்குச் சிறு வயதிலேயே கிட்டப்பார்வைப் பிரச்சினை துலைதூக்கியுள்ளதால் ‘கிட்டப்பார்வைத் தலைநகர்’ என பெயர் பெற்றுள்ள சிங்கப்பூருக்கு திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதில் தொலைநோக்குப் பார்வை தேவை.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியதைப்போல, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயச் சட்டமல்ல என்றாலும், சிறுவர்களின் மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதில் நீண்ட தூரம் செல்லும் என நம்புவோம்.