நிச்சயமற்ற உலக அரசியல் சூழலில் தென்கிழக்காசியாவின் பத்து நாடுகள் ஒன்றுசேர்ந்த ஆசியான் அமைப்பின் முக்கியத்துவம் இன்றியமையாததாக உள்ளது. சிறிய நாடாக இருந்தாலும் பெரிய இலக்கோடு பெரும் திட்டங்களை முன்னெடுத்து வரும் சிங்கப்பூருக்கும் பொருளியல் மீள்திறனுக்கும் பாதுகாப்புக்கும் அத்தியாவசியத் தூணாக ஆசியான் விளங்குகிறது.
வணிகத்துக்கும் முதலீடுகளுக்கும் ஆசியான் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. பத்து உறுப்பு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 650 மில்லியனுக்கும் அதிகம். இந்நாடுகளுக்கிடையிலான ஆழமான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் பொருளியல் வளர்ச்சிக்கு ஏராள வாய்ப்புகளை வழங்குகின்றன.
வட்டாரப் பாதுகாப்பிலும் ஆசியான் அமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அதிகரித்துவரும் பதற்றங்களையும் பாதுகாப்புச் சவால்களையும் எதிர்கொள்ள அமைதியான முறையில் தீர்வு காணும் தளமாக ஆசியான் திகழ்கிறது. அண்டை நாடுகளுக்கிடையே அமைதியும் நிலைத்தன்மையும் சிங்கப்பூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அடிப்படை.
நான்காம் தலைமுறையின் தலைவராக, ஆசியான் உச்சநிலை மாநாட்டில் முதன்முறையாகக் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங், வட்டார ஒத்துழைப்பு, பங்களிப்பு, செயல்பாடுகளில் புதிய தலைமைத்துவம் சிங்கப்பூருக்கே உரிய தனித்துவமான நிலைத்தன்மையுடன் தொடர்ந்து பங்காற்றும் என்பதை வலுவாக வெளிப்படுத்தியுள்ளார்.
பலதரப்புச் சந்திப்புக்களில் திரு வோங்கின் வலுவான கருத்துகளும் சிங்கப்பூரின் கொள்கைகளை எடுத்துரைத்த விதமும், சிங்கப்பூரின், அவரது உறுதிப்பாட்டையும் திடமான சித்தத்தையும் எடுத்துக்காட்டியது.
பெரும் நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் வட்டாரம் எதிர்நோக்கும் சவால்களை எடுத்துக்கூறியதுடன் அதற்குத் தீரவு காண அழைப்பும் விடுத்தார் பிரதமர் வோங். சிங்கப்பூர் எந்தச் சூழலிலும் கொள்கைப் பிடிப்புடனும் நடுநிலையுடனும் செயல்படும் என்பதையும் அவர் ஆணித்தரமாக நிலைநிறுத்தியுள்ளார்.
பலதரப்பு உறவுகளுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கும் சிங்கப்பூர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதோடு இருநாட்டு உறவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஆசியான் உச்சநிலைக் கூட்டங்களுக்கிடையியே மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், சீனா, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றோடு இருதரப்பு சந்திப்புகளையும் பிரதமர் நடத்தினார்.
இயல்பான கலந்துரையாடல்களும் உணவருந்தும்போது நடந்த கருத்துப் பரிமாற்றங்களும் தலைவர்கள் மத்தியில் நட்புறவைப் பேண வாய்ப்பை ஆசியான் அமைத்துக்கொடுத்த தளத்தையும் திரு வோங் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
ஆசியான் தலைமைத்துவத்தை சிங்கப்பூரின் ஆக நெருங்கிய அண்டை நாடான மலேசியாவிடம் லாவோஸ் ஒப்படைத்துள்ளது. நீண்ட, பின்னிப்பிணைந்த வரலாறும் அணுக்கமான தொடர்பும், ஒருமித்த கலாசார, பண்பாட்டுக் கூறுகளும், ஒரே வகையான இன, சமய, மொழி பின்புலங்களும் கொண்ட சிங்கப்பூரும் மலேசியாவும் ஒரு தாய் பிள்ளைகள்.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தின்கீழ் அடுத்த ஆண்டு ஆசியான் கூட்டங்கள் நடைபெறும்.
‘அனைவரையும் உள்ளடக்குதலும் நீடித்த நிலைத்தன்மையும்’ என்ற கருப்பொருளுடன் மலேசியா ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது.
வட்டார வளர்ச்சிக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் ஆசியானின் வெற்றியை உறுதிசெய்வதில் சிங்கப்பூர் கொண்டுள்ள முனைப்பு, மலேசியாவின் தலைமைத்துவத்தில் இன்னும் அதிகமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆசியான் பங்காளித்துவம், பொருளியல், அரசியல், பாதுகாப்பு என பெரும் பரப்புகளோடு, தனிமனித நிலையிலும் பெரும் பயனளிப்பது.
தனிமனிதர்களுக்கும் இளையர்களுக்கும் துறைசார்ந்த நிபுணர்களுக்கும் வணிகங்களுக்கும் ஆசியான் வழங்கும் வாய்ப்புகளை அரவணைத்துக்கொள்வது அவரவர் கைகளில் உள்ளது.
நாட்டின் தலைமகனாக சிங்கப்பூரின் நிலையையும் கடப்பாட்டையும் திரு வோங் முன்வைத்துள்ளார்.
நம்பிக்கைதரும் ஆசியான் எதிர்காலத்தில் பங்குபெற முனைப்புடன் வட்டாரச் சூழலை தன்வசப்படுத்துவது, இந்நாட்டினதும் மக்களினதும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முக்கியமானது.

