அமெரிக்கா அண்மையில் விதித்துள்ள இறக்குமதி வரிகள், சிங்கப்பூர்ப் பொருளியலையும் தொழில்நிறுவனங்களையும் ஊழியர்களையும் பாதிக்கக்கூடும்.
சிங்கப்பூரின் இறக்குமதி மீதான 10 விழுக்காடு அடிப்படை வரிவிதிப்பைத் தொடர்ந்து நம் நாடு பொருளியல் மந்தநிலையை எதிர்நோக்கக்கூடும் என்று பிரதமர் வோங், செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம், நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் குறுகிய கால ஆதரவுகளை வழங்குகிறது.
அத்துடன், நடப்பவற்றைக் கண்காணித்து விரைந்து செயல்படுவதற்கும் புதிய அமைச்சர்நிலை பணிக்குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் இதனால் இவ்வாண்டுக்குள் ஒரு விழுக்காடு குறையும் என்றும் முன்னுரைக்கப்படுகிறது. சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சும் வளர்ச்சி விகித முன்னுரைப்பை இவ்வாண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு குறைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் சீனாவிலிருந்து மூலப்பொருள்களைக் கொண்டு அந்நாட்டின் உற்பத்தி ஆலைகளில் தற்போது தயாரிக்கப்படும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் உற்பத்திச் செலவு கணிசமாக உயரும். அதன் தாக்கம் சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும். இங்கும் பொருள்களின் விலை உயரலாம். குறையப்போகும் தயாரிப்புகளால் சிங்கப்பூரர்களுக்கான சந்தைத் தெரிவுகளும் குறையும்.
சீனா, இந்தியா, ஆசிய வட்டாரங்களிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைப் பொறுத்தவரை நமக்கு உடனடி பாதிப்பு இல்லை. என்றாலும், வர்த்தகச் செலவுகளின் ஏற்றத்தால் நம் நாட்டிலும் இறக்குமதிப் பொருள்களின் விலை உயரக்கூடும்.
வரிவிதிப்பால் அமெரிக்காவுக்குப் பொருளியல் பின்னடைவு ஏற்படும் என்பது பொருளியல் நிபுணர்களின் கணிப்பு. உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு குறைந்து, அதனால் எல்லாருக்குமான வேலை வாய்ப்புகள் குறையக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இது சிங்கப்பூர் ஊழியர் சந்தைக்கு நல்லதன்று. ஏனெனில், சிங்கப்பூர் ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்கினர், பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அத்துடன், 12,500 வெள்ளிக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் சிங்கப்பூர்வாசிகளில் 60 விழுக்காட்டினர் அத்தகைய நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
சம்பளமும் சம்பள உயர்வும் பாதிப்படையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயமற்ற தற்போதைய காலகட்டத்தில் சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் வோங், மூத்த அமைச்சர் லீ போன்ற தலைவர்களின் கோரிக்கை. ஒற்றுமைக்கான வேண்டுகோள் எதற்காக என்பது குறித்த யோசனை மிகவும் தேவை.
வரிகளின் தாக்கம், துறைகளைப் பொறுத்து வெவ்வேறாக இருக்கும். மருந்து, வேதிப்பொருள் உற்பத்தித்துறை, மின்னணுவியல், விண்வெளித் துறை ஆகிய துறைகளில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு சிங்கப்பூரில் அதிகம் உள்ளதால் முதலில் இந்தத் துறைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மாறாக, நிதிச்சேவைகள், மின்னிலக்கச் சேவைகள், உள்நாட்டுச் சுகாதாரத் துறை, கல்வி, சொத்துச் சந்தை உள்ளிட்டவை அவ்வளவாகப் பாதிக்கப்படா.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில்கொண்டு 2022ல் உருவாக்கப்பட்ட முன்னேறும் சிங்கப்பூர் திட்டம், இத்தருணத்தில் நினைவில் கொள்ளத்தக்கது.
பொருளியல் நிச்சயமின்மையால் சமூகப் பிளவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நம் மனத்திற்குள் அச்சம், பாகுபாடு, வெறுப்புணர்வு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வர்த்தகச் செலவுகள் கூடினாலும் பதற்றம் இல்லாத பண்பட்ட சமூகம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறும். அதனை உறுதிசெய்வது மக்களின் கையில்தான் உள்ளது.
பண விரயத்தைத் தவிர்ப்பது எக்காலத்துக்கும் உகந்த பழக்கம். சக மனிதர்களுடனான உறவுகளைப் பேணுவது நிரந்தரத் தேவை. நம் மகிழ்ச்சி, பொருள்களை அதிகம் சாராமல் இருந்தால் பொருள்களின் விலையேற்றம் நம்மை அதிகம் பாதிக்காது.
அமெரிக்காவின் ஈடுபாடு அல்லாது, ஆசிய நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால் பிற ஆசிய நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கவும் பிற ஆசிய நிறுவனங்களில் பணியாற்றவும் இளையர்கள் தயாராக வேண்டும்.
ஆசியான் நாடுகளுடன் சிங்கப்பூர் தனது கூட்டுறவையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் என்று பிரதமர் வோங் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதற்கு, ஆங்கிலத்தைத் தவிர மற்ற ஆசிய மாெழிகளின் புழக்கம் தேவைப்படலாம். நீண்ட காலத்தில் இத்தகைய பன்மொழித்திறன் நம் இளையர்களுக்குத் தேவைப்படக்கூடும். சிங்கப்பூருடன் இனிக் கூடுதல் நெருக்கம் பாராட்டப்போகும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, தொழில்துறையினரும் தகவமைத்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறைகளில் இனி வளர்ச்சி இருக்கும் என உற்றுநோக்கிக் கண்டறியும் பொறுப்பு இளம் ஊழியரணியினர்க்கு உள்ளது.