வரிவிதிப்பு, போட்டா போட்டி, அனைத்துலகச் சட்டங்களைப் பொருட்படுத்தாத நிலை போன்றவற்றால் கொந்தளிப்பும் நிலைத்தன்மையும் சூழ்ந்த உலகளாவிய சூழலில் சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டு உறவின் கொண்டாட்டத்தை உளப்பூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் கொண்டாடின.
வருமுன் ஊகித்து முன்னோக்கிய பார்வையில் சிந்தித்து எதிர்காலத் துறைகளில் இன்றே முதலீடு செய்யும் போக்குடன் உறவுக்கு வலிமையூட்டிய கொண்டாட்டமாகவே அது அமைந்தது.
பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தியாவுக்கான மூன்று நாள் சூறாவளிப் பயணத்தில், அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் தனித்தனி சந்திப்புகள் நடத்தியதோடு வர்த்தக, தொழிற்துறை ஜாம்பவான்களையும் சந்தித்தார். இந்தியாவில் வாழும் சிங்கப்பூரர்களுடன் எஸ்ஜி60 கொண்டாட்டம், இந்திய ஊடகத்துக்கு விரிவான நேர்காணல், சிங்கப்பூரிலிருந்து அவருடன் சென்றிருந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி என முத்தாய்ப்பான பயணத்தை வெற்றிகரமாக நடத்தினார் பிரதமர் வோங்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு 60 ஆண்டு உறவின் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிணைப்புகள் வலுப்பெற்ற வண்ணம் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின்போது விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக உறவுகளை மேம்படுத்த இரு பிரதமர்களும் இணங்கினர். வெகு சில நாடுகளுடன் மட்டுமே இத்தகைய உயரிய நிலை பங்காளித்துவம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசதந்திர நட்புறவும் வர்த்தக உறவுகளும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இணைப்பை கடந்த 60 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்து வருகின்றன.
இனி வரும் காலங்களில் இந்த உறவு நிலைத்திருப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, துடிப்புமிக்க மக்கள் தொடர்பு அடித்தளமிடவேண்டும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.
இருநாட்டு உறவு என்பது இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு என்பது மட்டுமல்ல; இரு தரப்பு வர்த்தகங்களுக்கிடையிலான இணக்கங்கள் மட்டுமல்ல; மக்களுக்கு மத்தியிலும் உறவுப்பாலங்கள் அமையவேண்டும் என்ற கருத்தைப் பிரதமர் முன்வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவைப் பற்றிய ஆழமான புரிதலும் அதுகுறித்த அங்கீகரிப்பும் சிங்கப்பூரர்களுக்குத் தேவை என்றும் அது முடிவுபெறாத தொடர்ச்சியான பணி என்றும் பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு கட்டத்தில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் வரலாற்றாலும் மரபுடைமையாலும் நெருங்கிய தொடர்பைக்கொண்ட இந்தியச் சிங்கப்பூரர்களுக்கு வரமாய் அமைந்திருக்கும் வாய்ப்பு இது.
மக்களுக்கு மத்தியில் இன்னும் அதிக பரிமாற்றங்கள் தேவை என்று பிரதமர் வோங் கூறியது உடனடியாக செயல்பாட்டில் இருக்கவேண்டிய ஒன்று.
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் மாணவர் பரிமாற்றங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் ஈடுபடுவதை நாம் ஊக்குவிக்கவேண்டும்.
சிங்கப்பூரர்கள் குறிப்பிட்ட காலம் இந்தியாவில் செலவிடவேண்டும்.
புத்தாக்கத்திலும் தொழில்முனைப்பிலும் தலைசிறந்த நிலையில் துடிப்புமிக்க இளம் சக்தியைக் கொண்ட மாணவர்கள் அங்கு பயில்கின்றனர். உலகளவில் சிறப்புவாய்ந்த தொழில் முனைப்புகளை அமைக்கிறார்கள். சிறிது காலம் இந்தியா சென்று அந்த மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டால் அனுபவம் கிடைப்பது ஒருபுறம் இருக்க இந்தியாவின் துரித வளர்ச்சியைப் பற்றிய நேரடி புரிதலும் கிடைக்கும்.
அத்துடன் இந்தியப் பண்பாட்டைப் பற்றிய நிகழ்ச்சிகளையும் முனைப்புகளையும் இந்திய சமூகத்திற்கும் அப்பால், சிங்கப்பூரிலுள்ள மற்றவர்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும். பண்டிகைகள், இசை, சமையல்கலை உட்பட பல வழிகளில் பண்பாட்டுத் தூதர்களாக நாம் விளங்கவேண்டும். மேலும் ஆழமான புரிதலுக்கு ஒவ்வொரு பகிரப்பட்ட அனுபவமும் ஒரு படி முன்னுக்குக் கொண்டுசெல்லும்.
இருநாட்டுப் பங்காளித்துவத்தின் அடிநாதமாகவும் எதிர்காலமாகவும் மக்களுக்கு இடையிலான பிணைப்பே இருக்கும். அரசாங்கத்தையும் தலைவர்களையும் தாண்டி உறவுகளின் எதிர்காலத்தை நம் கைகளில் ஏந்தி வெற்றிக்கு வழிவகுப்போம்.

