உலகளாவிய வர்த்தகப் போர்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள், வல்லரசுகளின் போட்டி ஆகிய அனைத்துக்கும் இடையில் ஆசியா எவ்வாறு தனது எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறது என்ற கேள்வி முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ல் துணைப் பிரதமர் கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்வைத்த கருத்துகள், இந்தச் சவாலான காலகட்டத்தில் சிங்கப்பூரின் தெளிவான, தொலைநோக்குப் பார்வையுடனான வெளியுறவு உத்தியை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டின. நம் நாட்டின் பொருளியல் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அது இன்றியமையாதது என்பதை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
தற்போதைய உலக ஒழுங்குமுறை இன்னும் ஒரு நிலையான வடிவத்தைப் பெறவில்லை என்பது அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் கருத்து. வெளியுறவுக் கொள்கையில் நாடுகளுக்கு நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர நலன்களே உண்டு என்ற அடிப்படை உண்மையை அவர் நினைவூட்டினார்.
அமெரிக்காவும் சீனாவும் சிங்கப்பூரின் மிக முக்கியமான வர்த்தக, முதலீட்டுப் பங்காளிகள். சிங்கப்பூர் எந்தவொரு தரப்பையும் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகக்கூடாது. அதற்கும் மேலாக, ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாட்டால் பயன்படுத்தப்படும் கருவியாக மாறிவிடக்கூடாது என்பதில் சிங்கப்பூர் கவனமாக உள்ளது.
பொருளியல் தேசியவாதமும் உள்நோக்குப் பார்வையும் அதிகரித்துவரும் வேளையில், ஆசியான் நாடுகள் தங்களுக்குள் தடைகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது எனத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் வலியுறுத்தினார். மாறாக, ஆழமான வட்டார ஒருங்கிணைப்பும் பரந்த உலகளாவிய பங்காளித்துவமுமே நம் வலிமை.
ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பு, ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தங்களின்மூலம் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில், இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேலும் விரைவடையும். ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரின் பொருளியல் மேம்பாடும் சிங்கப்பூர்வாசிகளின் வாழ்க்கை மேம்பாடும் அந்த ஒத்துழைப்புகளின்மூலம் உறுதிசெய்யப்படுகிறது.
உக்ரேன் போர், மத்தியக் கிழக்குப் போர்கள், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் மாற்றங்கள், வர்த்தகத் தடைகள் எனப் பல புயல்கள் வீசினாலும், சிங்கப்பூர் பதற்றமடையாமல் நிதானத்துடன் செயல்படுவதே அதன் தனிச்சிறப்பாகும்.
நாடுகளுடன் நட்பு பாராட்டுவதோடு, நடுநிலைமையில் நின்று செயல்படவேண்டும். 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைப் புதுப்பித்து வலுப்படுத்த வேண்டும். அமெரிக்காவும் சீனாவும் வல்லரசுகளாகப் போட்டித்தன்மையோடு செயல்படும் வேளையில், ஆகப்பெரிய நடுநிலைச் சக்திகளாகத் திகழும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தோடு நம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விவியன் வலியுறுத்தினார். இந்தியாவின் கல்வி, திறன், பெரிய சந்தை, திடமான பொருளியல், இருதரப்பு நம்பிக்கை ஆகியவை மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறினார்.
இயற்கை வளங்களோ, பரந்த நிலப்பரப்போ இல்லாத சிங்கப்பூரின் உண்மையான வலிமை அதன் வலுவான நிதியிருப்பு, சட்டவிதிகள், ஒப்பந்தங்களின் புனிதத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாக அமைப்புகளே ஆகும். வல்லரசுகளின் மோதல்களுக்கு இடையே சிக்கித் தவிக்காமல், நடுநிலையோடும் கொள்கை உறுதியோடும் உலகளாவிய விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவதன்மூலம், இந்த நிச்சயமற்ற உலகிலும் சிங்கப்பூர் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
