சமூகத்தின் அடையாளம், காலத்தின் குரல்

சமூகத்தின் அடையாளம், காலத்தின் குரல்

3 mins read
f3b5d57f-1120-48f2-b949-e9f086abebd6
6.7.2025ல் நடந்த தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் (வலமிருந்து) எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட். பின்னணித் திரையில், அன்றைய காலத்துத் தமிழ் முரசு அலுவலகப் புகைப்படம். ஊழியர்களுடன் நடுவில் கோ.சாரங்கபாணி. - படம்: தமிழ் முரசு

தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து 91வது அகவையில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கும் தமிழ் முரசு, செய்தி ஊடகம், மின்னிலக்கத் தளம் மட்டுமன்று, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பேழை. நம் முன்னோர்களின் வியர்வையில் முளைத்து, இன்று உலகளாவிய சிங்கப்பூர் இந்தியர்களின் ஒருமித்த குரலாகவும் அடையாளமாகவும் நிமிர்ந்து நிற்கும் ஒரு வாழும் சின்னம்.

கடந்த ஆண்டு தமிழ் முரசு 90வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய தருணத்தில், வாசகர்களும் ஒட்டுமொத்த சமூக அமைப்புகளும் காட்டிய பேராதரவு நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு கலந்துரையாடல்கள், பண்பாட்டு நிகழ்வுகளுடன் ஏற்பட்ட நெருக்கமான பிணைப்பு, நாளிதழ்மீதான சிங்கப்பூர் தமிழ் மக்களின் மாறாத நம்பிக்கையை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

அந்த ஊக்கத்துடன், 91வது ஆண்டின் எல்லையில் நின்று, நூற்றாண்டை நோக்கிய உத்திபூர்வ பாதையை வாசகர்களுடன் பகிர விரும்புகிறது. உலகளாவிய சவால்களும் முரசின் புதிய பாய்ச்சலும் இன்று உலகளாவிய ஊடகத்துறை முன்னெப்போதும் இல்லாத ஒரு பெருந்தொழில்நுட்பப் புரட்சியையும், அதே வேளையில் கடுமையான நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு முதல் சமூக ஊடகங்களின் பெருக்கம்வரை, தகவல்களின் வேகம் அதிகரித்துள்ள அதே வேளையில், பொய்ச் செய்திகளின் ஆபத்தும், ஆழமற்ற செய்திகளின் ஆதிக்கமும் பெருகிவிட்டன. இத்தகைய சூழலில், பாரம்பரிய அச்சு ஊடகங்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகின்றன என்பது கசப்பான உண்மை.

ஆனால், தமிழ் முரசு இந்தச் சவால்களையெல்லாம் தன்னைச் செப்பனிட்டுக் கொள்வதற்கான நல்வாய்ப்புகளாகவே கருதுகிறது. அச்சு ஊடகத்திலிருந்து மின்னிலக்க, பல்லூடகத் தளங்களை நோக்கி முரசு எடுத்து வைத்துள்ள அடிகள், காலத்தின் தேவைக்கேற்ப மக்களைச் சென்றடைவதற்கான முதற்கட்டப் பாய்ச்சல் மட்டுமே. தொழில்நுட்பங்கள் மாறினாலும், நம்பகத்தன்மை வாய்ந்த, ஆழமான, தரமான இதழியலை வழங்குவதே முரசின் இலக்கு.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் தேவையானது இன்று பன்முகத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூத்த தலைமுறையினர் ஒருபுறம்; உலகளாவிய சிந்தனைகளோடு, அதே சமயம் தங்களின் தனித்துவமான வேர்களைத் தேடும் தாகத்தோடு இருக்கும் இளைய தலைமுறையினர் மறுபுறம்; இவர்களுடன் இணைந்து நாட்டின் பொருளியலுக்கு வலுசேர்க்கும் புதிய குடியேறிகள் இன்னொருபுறம் என இந்திய சமூகம் பரந்து விரிந்துள்ளது.

இந்த வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட பிரிவினரை ஒரே புள்ளியில் இணைக்கும் ஒரு மாபெரும் சமூகப் பாலமாக தமிழ் முரசு செயல்பட வேண்டியுள்ளது. இளையர்களுக்கு உகந்த உள்ளடக்கங்கள், சமூகத்தின்மீது அரசாங்கக் கொள்கைகளின் தாக்கம் குறித்த ஆழமான அலசல்கள், உள்ளூர் வணிகங்கள், கலை-இலக்கிய மேம்பாட்டிற்கான களம் எனப் பன்முகத் தேவைகளையும் நிறைவேற்றுவதே முரசின் வியூகம்.

இங்குதான் ஒரு முக்கியமான உண்மையை மிகவும் நேரடியாகவும் உறுதியாகவும் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. தமிழ் முரசை ஆதரிப்பது என்பது சமூக அடையாளம் சார்ந்தது.

சிங்கப்பூர் போன்றதொரு பல இனச் சமூகத்தில், ஒரு மொழி வாழ்வதற்கும், அந்த மொழியைப் பேசும் சமூகத்தின் குரல் அதிகாரபூர்வமாக ஒலிப்பதற்கும் ஒரு வலுவான ஊடகம் அவசியம். சிங்கப்பூர்த் தமிழர்களின் உரிமையையும் பண்பாட்டையும் நிலைநிறுத்தும் ஒரு தற்காப்புக் கேடயம் தமிழ் முரசு.

ஒரு மொழியும் அதன் ஊடகமும் வலுக்குன்றினால், அந்தச் சமூகத்தின் ஒருமித்த அடையாளம் உலக அரங்கில் மெல்ல மெல்ல மழுங்கிப்போகும் ஆபத்து உண்டு. எனவே, தமிழ் முரசை வாசிப்பதும், அதன் மின்னிலக்கத் தளங்களைப் பின்தொடர்வதும், அதற்கு சந்தா செலுத்தி ஆதரவளிப்பதும் ஒவ்வொரு சிங்கப்பூர் இந்தியரின் சமூகக் கடமையாகும். இதனை ஒரு வணிகப் பயனீட்டாகப் பார்க்காமல், நம் பாரம்பரியத்தைக் காக்கும் ஒரு முதலீடாகப் பார்க்கவேண்டும்.

செய்திகள் பகிரப்படும் தளங்கள் மாறலாம், அச்சுத் தாள்கள் மின்னிலக்கத் திரைகளாக உருமாறலாம். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சிங்கப்பூர் இந்தியர்களின் இதயத்துடிப்பாக, சிங்கப்பூர்த் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தமிழ் முரசின் உத்வேகம் ஒருபோதும் மாறாது.

தலைமுறை தாண்டித் தொடரும் இந்த அறவழிப் பயணத்தில், சமூகத்தின் அடையாளமாய், என்றென்றும் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தமிழ் முரசு தொடர்ந்து முழங்கும். நம் அடையாளத்தைக் காக்க அனைவரும் கைகோப்போம்!