இந்த மாதம் உலகளவில் மிகுந்த கவனத்தைப் பெற்ற தேர்தல்கள் இரண்டு. ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல், மற்றது இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல். இந்த இருநாடுகளிலும் ஏற்பட்டு வரும் அரசியல், சமூகவியல், பொருளியல் மாற்றங்களை உலக நாடுகள், அரசியல் பார்வையாளர்கள், பொருளியலாளர்களுடன் மக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இலங்கையில் செம்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பெரும் பலத்துடன் வெற்றி பெற்ற அநுரகுமார திசாநாயக்க, அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்க் கட்சிகளைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
அவரது இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி, இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் 159 இடங்களுடன் மகத்தான வெற்றியைப் பெற்றது. 1978ஆம் ஆண்டு அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின்கீழ், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்ற முதலாவது கட்சியாகத் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. நீண்டகாலமாக நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த, உறவினர்கள், வேண்டியவர்களுக்கு விதிமீறி சலுகை அளித்த ஆட்சியை வாக்காளர்கள் நிராகரித்ததை இது பிரதிபலிக்கிறது.
இனம், மொழி, வட்டார எல்லைகளைத் தாண்டி வாக்காளர்களை ஒன்றிணைப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்பான ஆட்சியின் புதிய தொடக்கத்திற்கான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இளைஞர்களும் படித்தவர்களும் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரைத் தவிர அனைவரும் புதிய முகங்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, நாடாளுமன்றத்தைச் சுத்தப்படுத்தப் போகிறோம் என்று அநுர சொல்லியிருந்தார். கட்சித் தாவல்கள், ஊழல்கள் இடம்பெறாத ஆட்சியாக இருக்கும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிகளவில் 21 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
2019 அதிபர் தேர்தலில் 3.16 விழுக்காடு வாக்குகளுடன் பெரும் தோல்விகண்ட, ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவரான அநுரகுமார புதிய எழுச்சி கொண்டிருக்கிறார். தனது கட்சியின் அரசியல் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார்.
இரண்டு மாதங்களில் அநுரகுமாரவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என அதிபர் அநுரகுமார அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 12) ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது, பொதுச் சேவையைச் சீர்படுத்தி மேம்படுத்துவது, பொருளாதார நன்மைகள் மக்களிடையே நியாயமான முறையில் பகிர்வது ஆகியவை தமது முன்னுரிமைகள் என அவர் கூறினார். புதிய அரசியலமைப்பு அனைத்து இன மக்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“பொருளியலை மேம்படுத்துவேன், ஊழலை ஒழிப்பேன்” என்ற வாக்குறுதி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள அநுரகுமாரவின் முன்னால் இருக்கும் சவால்கள் கணிசமானவை. விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும் தொழில்களை மேம்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கை கடன் சுழலில் இருந்து மீள்வது சாத்தியமல்ல.
மறுபுறம், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள வட்டார இனம், சமயங்கள் அடிப்படையிலான அரசியல் கட்சிகள் தன் வாக்காளர் ஆதரவை உயர்த்துவதற்காக அப்பகுதியில் வசிப்பவர்களிடையே இனவாதத்தையும் அச்சத்தையும் தூண்டக்கூடும்.
முதல் நம்பிக்கையாக, உலக வங்கி மூன்றாவது தவணைக் கடனுக்குத் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. என்றாலும், பொருளியல் விவகாரத்தில் உடனடித் தீர்வுகளைக் காண நிதிநிலை யதார்த்தங்கள் அரசாங்கத்துக்கு சாதகமாக இல்லை. எனினும், இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அத்தகைய தடைகள் ஏதும் இல்லை. புதிய அரசாங்கம் சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் பெற வேண்டும். அவர்களது தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், தமிழர்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுக்காகத் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அநுரகுமாரவுக்கு வாக்களித்துள்ளனர்.
தற்போது முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் தமிழர் எவரும் இல்லை. கடந்த காலத்தைப் போல தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, பேரினவாதக் கருத்துகளைப் பாதுகாத்து, மீண்டும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் வழியில் இந்த அரசும் செல்லுமா அல்லது ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடுதலையையும் ஆறுதலான வாழ்க்கையையும் ஏற்படுத்துமா என்பதுதான் இன்றைய முதன்மைக் கேள்வி.
1965 சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது, இலங்கையைப்போல் சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் லீ குவான் யூ கூறினார். குறுகிய காலதத்துக்குள் சிங்கப்பூர் முதல் உலகத் தர நாடாக வளர்ச்சி அடைந்ததற்கான முக்கியக் காரணங்கள், அரசியல் நிலைத்தன்மை, தரமான நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதாகும். அமைதிப் பாதையில் செல்லும் இலங்கை, சிங்கப்பூரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் இது.


