'ஸிக்கா' வலையில் சிக்காதிருக்க...

'ஸிக்கா' வலையில் சிக்காதிருக்க...

3 mins read

உலகுக்குத் தேவையான மழையை வாரி வழங்குவதில் மழைக்காடுகளுக்கு பெரும்பங்கு உண்டு. நிலத்துக்குக் குளிரூட்டி, இயற்கைக்கு வளம் சேர்ப்பவை அவை. ஆப்பிரிக்கக் கண்டத்தின் உகாண்டாவில் உள்ள அப்படிப்பட்ட ஒரு மழைக்காட்டின் பெயர் 'ஸிக்கா'.

வளப்பத்தைக் கொண்டு வரும் அந்தக் காடுகளில் இருந்து தோன்றியதுதான் இப்போது உலகையும் கடந்த வாரத்திலிருந்து சிங்கப்பூரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் 'ஸிக்கா' கிருமி. அந்தப் பெயருக்கு உகாண்டா மொழியில் "அளவுக் கதிகமாக வளர்ந்தது" என்று பொருளாம். பெயருக்கேற்ப அந்தக் கிருமி அளவுக்கு அதிகமாக, அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் முதல் 'ஸிக்கா' தொற்று ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அறிவிக்கப்பட்டது. அதற்குள் இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 215 பேருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டிருப்பது பதைக்கவைக்கிறது.

எனினும் 2003ஆம் ஆண்டில் நம்மைக் குலைநடுங்க வைத்த 'சார்ஸ்' நோயைப் போல் 'ஸிக்கா' கொடியது அல்ல. 33 உயிர்களைப் பலி வாங்கிய கொடூரமான நோய் 'சார்ஸ்'. 'ஸிக்கா' மரணத்தை ஏற்படுத்தக் கூடியதல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தக் கிருமி சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்த வல்லது.

கருவுற்றிருக்கும்போது 'ஸிக்கா' கிருமி தொற்றினால் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு 'மைக்ரோசெஃபலி' எனப் படும் நிலை உண்டாகி அந்தக் குழந்தை மிகச் சிறிய தலையுடன் பிறக்கும் அபாயம் உண்டு. ஆனால் அப்படி நிகழ்வதற்கு 1 முதல் 13 விழுக்காடு சாத்தியமே உண்டு என்று அனைத்துலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன. 'ஸிக்கா' தொற்றிய ஐவரில் நால்வருக்கு அதற்கான எந்த அறிகுறியும் தெரியாது என்பதாலும் ஐந்தா மவருக்குக்கூட சிறிதளவு காய்ச்சல் மட்டுமே உண் டாகும் என்பதாலும் அந்த நோய் சிங்கப்பூரில் பல மாதங்களாகவே கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. டெங்கி நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களே 'ஸிக்கா'வையும் பரப்புகின்றன. எனவே நாம் போர் தொடுக்கவேண்டியது கொசுக்கள் மீதுதான்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொசுக் கள் ஒளிந்திருக்கின்றனவா அல்லது உற்பத்தியாகின்ற னவா என்பதை அரசாங்க அமைப்புகளால் மட்டும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சிங்கப்பூரர் கள் அனைவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் 1.4 மில்லியன் சோதனைகளை மேற்கொண்ட தேசிய சுற்றுப்புற வாரியம், கொசு வளரும் 19,000 இடங்களை அடையாளம் கண்டு அழித்தது.

சரியான சூழலில் கொசு முட்டைகள் ஒரே நாளில் முட்டைப் புழுவாகப் பொரிந்து ஒரு வாரத்திற்குள் வளர்ந்த கொசுக்களாகி விடுகின்றன. வளர்ந்த கொசு ஒருவரைக் கடித்த மூன்றே நாட்களில் முட்டையிடுகிறது. அவ்வாறே கொசுப் பயணம் கட்டுப்பாடின்றி தொடர் கிறது. அந்தக் கொசுப் பயணத்தை நசுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும் உள்ளது.

கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை நாம் அனைவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும். எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் கொசுக்கள் உற்பத்தியாகலாம் என்பதை நாம் உணர வேண்டும். இல்லத்தின் வெளியே இருக்கும் குளிர்சாதன இயந்திரங் களின் கீழ்ப் பகுதியில் தேங்கும் தண்ணீரில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம். வீட்டில் பூஜாடிகள், செடிச் சட்டிகளின் கீழ் உள்ள தட்டுகள் போன்றவற்றை நாம் அடிக்கடி தண்ணீர் மாற்றி சுத்தம் செய்யாவிட்டால் நமது இல்லங்களே மரணத் தொழிற்சாலைகளாக மாறக்கூடும். கடந்த ஆண்டுகளில் பரிசோதனைகளின்போது கண்டுபிடிக்கப் பட்ட கொசு வளரும் இடங்களில் 60 விழுக்காடு இல் லங்களே. இல்லத்தைத் தவிர்த்து வெளியில் கவனக் குறைவாக அல்லது அலட்சியமாக சிலர் எறியும் தாள் குவளைகள், பிளாஸ்ட்டிக் போத்தல்கள் போன்ற குப்பைகளும் கொசு உற்பத்திக்குத் துணை போகின்றன.

எனவே, இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைக்கும் டெங்கியாக இருந்தாலும் சரி, கடந்த ஒரு வாரமாக நம்மை ஆட்டிப்படைக்கும் 'ஸிக்கா' கிருமியாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு மூல காரண மான கொசுக்கள் நம்மை முடக்குவதற்கு முன் நாம் அவற்றை முடக்க வேண்டும். அதுவே 'ஸிக்கா' வலை யில் சிக்காதிருக்க ஒரே வழி.