அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீதெமாசெக் கட்டடத்துக்கு வெளியே நின்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதல் தேசிய தினச் செய்தியை வழங்கினார். அதிபர் மாளிகையில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்போது பிரதமரின் அலுவலகம் இங்கேதான் செயல்படுகிறது.
ஐம்பத்தி ஒன்பதாவது தேசிய தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றியும், மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் உதவும் என்பதைப் பிரதமர் வோங் விளக்கினார்.
சரியாக 59 ஆண்டுகளுக்கு முன்னர், 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்த இல்லத்தில் தங்கியிருந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவும் தூங்க முடியாது புரண்டு புரண்டு படுத்தவாறே இப்படியேதான் யோசித்திருப்பார். மலேசியாவிலிருந்து பிரித்துவிடப்பட்ட இச்சிறு தீவின் எதிர்காலம் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும் என்று சிந்தித்திருப்பார்.
ஆனால், அமரர் லீ எதிர்நோக்கிய சவால்கள் வேறு, தற்போது பிரதமர் வோங் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு.
எந்த வளமும் இல்லாத இடத்தில், ஒரு தனித்த நாடாக சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப வேண்டிய பெரும் பொறுப்பு திரு லீக்கும் சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்களுக்கும் இருந்தது. அவர்கள் அதைத் தங்கள் கடமையாகத் தலைமேற்கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டனர். மக்களும் அவர்களுடன் இணைந்து பாடுபட்டனர். கைகழுவி விடப்பட்ட சிறு எள்ளு, கிடுகிடுவென பெருஞ்செடியாக தழைத்து வளர்ந்துவிட்டது.
மிகக் குறுகிய காலத்தில் எல்லாவகையிலும் முதல்தர உலக நாடாக சிங்கப்பூர் பெருவளர்ச்சி அடைந்துவிட்டது.
வறிய ஊழியர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரையிலும் இன்று சிங்கப்பூரை நாடுவது வாய்ப்புகளுக்கும் வளம் பெருக்கவும் மட்டுமல்ல. நட்டநடு இரவிலும் பயமின்றி வீதியில் நடந்துசெல்ல முடியும். பாதுகாப்பு; சட்ட ஒழுங்கு; லஞ்ச ஊழல் அற்ற செயல்திறன் மிக்க சீரான நிர்வாகம்; வெவ்வேறு இனங்கள், சமயங்கள், மொழிகள் அனைத்துக்கும் அளிக்கப்படும் இடம்; தகுதி அடிப்படையிலான வாய்ப்புகள்; தரமான கல்வி என்று பல அம்சங்களால் வாழ்வதற்குச் சிறந்த இடமாக சிங்கப்பூர் பெயர் பொறித்துள்ளது.
எனினும், சமாளிக்க வேண்டிய பொருளியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளன என்பதை பிரதமர் தமது செய்தியில் சுட்டினார்.
பொருளியல் மாற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைச் சந்தையைப் புரட்டிப் போட்டுள்ளதை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது.
வேலைவாய்ப்பில் பின்னடைவை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதுடன், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் புதிய திறன்களை வளர்க்கவும் அரசாங்கம் முனைந்துள்ளது.
மத்திய கிழக்கு, ரஷ்யப் போர், நிலைத்தன்மையற்ற பொருளியல் போன்ற பல காரணங்களால் விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவினத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட உள்ளன.
தொற்றுநோய் பரவல்கள், மூப்படைதல் போன்ற பிரச்சினைகளைக் கையாள சமூக ஆதரவுக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
அறுபதாண்டை நோக்கிய நாட்டின் பயணத்தில் வருங்காலப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு நம்பிக்கையான எதிர்காலத்துக்கான திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் வெற்றிபெறுவதிலும், வருங்காலம் மேலும் சிறப்பானதாக அமைவதிலும் நாட்டு மக்களுக்கும் பொறுப்பும் பங்கும் உள்ளது.
தேசிய தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், இந்நாட்டின் மீதான நமது பற்றையும் நமக்குள்ள கடப்பாட்டையும் மறுஉறுதிப்படுத்திக்கொள்வோம்.
நாட்டின் மீது மக்கள் கொள்ளும் பற்று, நாட்டின் உயர்வுக்கு உந்துசக்தியாக இருப்பதுடன், எந்தச் சூழலிலும் நாட்டைக் காத்து நிற்கும்.
நாட்டைக் காக்கும் நம் கடப்பாடானது, ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் தொடர்ந்து கட்டிக்காக்கும்.
வெவ்வேறு கருத்துகளுக்கு மதிப்பளித்து பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனப்போக்கே சிங்கப்பூரின் பலம்.
பல நாட்டு மக்களும் திறனாளர்களும் பல்வேறு நம்பிக்கைகளும் அதிகரித்து வரும் காலகட்டத்தில், இந்தப் பலம் மேலும் வலுப்பெறுவது முக்கியமானதாக உள்ளது. தலைமுறையாக வாழும் மக்களும் புதிதாகக் குடியேறுபவர்களும் இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.
இந்தச் சவாலான சூழலில் குடிமக்கள், புதிய குடியேறிகள், நிரந்தவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் போன்ற வேறுபாடுகளின்றி சிங்கப்பூரின் வெற்றிக்கு ஒன்றிணைந்து செயல்படுவது அனைவருக்கும் பயனளிக்கும்.
உலகளாவிய போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்க, நம் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்வதிலும் நாட்டம் செலுத்தி, ஒன்றுபட்ட மக்களாக தொடர்ந்து வெற்றிப் பாதையில் வீறுநடை போடுவோம்.

