பதினேழு நாள்களாக இடம்பெற்ற கடுமையான போட்டிக்குப் பிறகு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முடிவிற்கு வந்தன.
பிளவுகளும் மோதல்களும் சூழ்ந்திருக்கும் இப்போதைய உலகில், அமைதித் திருவிழாவாக ஒலிம்பிக் போட்டிகள் கவனம் பெற்றன.
மத்தியக் கிழக்கிலும் உக்ரேனிலும் போர் தொடரும் சூழலில், மலர்களின் நகரமான பாரிசில் ஒலிம்பிக் திருவிழா களைகட்டியது.
போட்டிகளுக்குமுன் பாரிஸ் நகரில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன; இஸ்ரேல் விளையாட்டாளர்களுக்கு மின்னஞ்சல்வழி கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டபோதும், 1972 மியூனிக் ஒலிம்பிக்கிற்கு இடையூறு விளைவித்த பயங்கரவாதத் தாக்குதலைப்போல் இம்முறையும் ஏதேனும் விரும்பத்தகாதது நிகழ்ந்துவிடுமோ என்றும் கவலை எழுந்தது.
உக்ரேன்மீது தாக்குதல் தொடுத்துவரும் ரஷ்யாவும் அதற்கு ஆதரவளிக்கும் பெலருசும் நாடுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், ரஷ்யா, பெலருஸ் நடவடிக்கைகளை ஆதரிக்காத அந்நாட்டு விளையாட்டாளர்கள் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டாளர்களாகப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
உலகமே மின்னிலக்கமயமாகி வரும் சூழலில், சமூக ஊடகங்களின்வழி அவதூறு பரப்புவதும் தீவிரமாகியுள்ளது. விளையாட்டாளர்கள் சிலர் மனத்தளவில் துவண்டுபோகவும் அவை காரணமாக அமைந்தன.
போட்டிகளின் முடிவுகள் எவ்வாறாக இருப்பினும், கடுமையாக உழைத்து ஒலிம்பிக் மேடைக்குச் சென்ற அனைத்து விளையாட்டாளர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் உழைப்பை, நேர்மையை மறுக்கும் இணையப் பதிவுகள் ஏற்றுக்கொள்ளத்தகாதவை.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகையில், சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். 17 வயது மேக்ஸ் மெய்டர்மூலம் சிங்கப்பூர் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் அனைவரும் திறந்த மாடிப்பேருந்தில் நகர்வலம் வந்தபோது, அவர்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பும் ஆதரவும் நெகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. நிலப்படத்தில் சிறு சிவப்புப் புள்ளியாக இருந்தபோதும் உலக அரங்கில் வெற்றிகரமான நாடாகத் திகழ்வதற்குச் சிங்கப்பூர் மக்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துக்கொள்வதும் முக்கியக் காரணம் என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகியது.
வேறு சிலர், விளையாட்டு மூலமாக நட்பையும் ஒருமைப்பாட்டையும் விதைத்து, ஒலிம்பிக் உணர்வை வெளிப்படுத்தினர். விளையாட்டுத் திடலில் விதிமீறிச் சிலர் நடந்துகொண்டது அப்போது கசப்பான அனுபவமாக இருந்தாலும், போட்டி முடிந்தபின் ‘நாங்கள் அனைவரும் விளையாட்டுக் குடும்பத்தினர்’ எனும்படியாகப் பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தையாக அறியப்படுபவரும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் கௌரவ வாழ்நாள் தலைவருமான பேரோன் பியர் டு குபெர்ட்டான், 1935ஆம் ஆண்டு வானொலிவழி உரையாற்றியபோது, அமைதி மலரச் செய்வதில் விளையாட்டின் பங்கை வலியுறுத்தியிருந்தார்.
எதிராளிக்கு மதிப்பளிப்பதற்குமுன் அவரைப்பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்பது திரு குபெர்ட்டானின் கருத்து. ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதுவே அமைதியின் உண்மையான அடித்தளம் என்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து நாடுகள் முதன்முறையாக தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றன.
செயின்ட் லூசியா நாட்டின் ஜூலியன் ஆல்ஃபிரட் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்திலும் போட்ஸ்வானா நாட்டின் லெட்சிலே டெபோகோ ஆடவர் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றதைக் கொண்டாட அந்நாடுகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தனிமனிதர் ஒருவரின் வெற்றியைத் தங்களின் ஒட்டுமொத்த வெற்றியாகக் கருதி, நாட்டு மக்கள் அனைவருமே ஒன்றுசேர்ந்து கொண்டாடும்போது மக்களிடையே பிணைப்பும் ஒற்றுமையும் வலுப்படுகிறது. இதுவே, விளையாட்டின் வலிமை.
எல்லை, மொழி போன்ற தடைகளைத் தாண்டி, பொதுவிதிகள் மூலம் தொடர்புகளை உருவாக்குவதே விளையாட்டின் அழகு. ஒவ்வொருவரும் திறமையானவர்தான் என்பதை ஏற்றுக்கொண்டு, விளையாட்டில் நேர்மையாக நடந்துகொள்வது, ஒலிம்பிக் கருத்தியல்களின் ஒரு தூணாக விளங்குகிறது.
உலகெங்கிலுமிருந்து திரண்ட விளையாட்டாளர்கள் வெளிப்படுத்தும் கடும்போட்டியானது, உலகத்தினர் எல்லாரையும் ஊக்குவித்து, அமைதிக்கான நம்பிக்கையை வளர்க்கிறது. இதுவே ஒலிம்பிக் இயக்கத்தின் குறிக்கோள்.
உலகில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அதனால்தான், ஒலிம்பிக் இயக்கத்தின் பாகுபாடின்மை, நிலைத்தன்மை, மனிதநேயம், உலகம் தழுவிய தன்மை, ஒற்றுமை போன்ற கருத்தியல்களைத் தொடர்ந்து பின்பற்றுவதும் அவற்றை உலகச் சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதும் முக்கியமாகிறது.

