தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளமான எதிர்காலத்திற்குத் தேவை வசதியான போக்குவரத்துச் சேவை

3 mins read
64f2a49b-f296-4659-9483-0b478b56184c
தடைகளின்றி மக்களுக்குச் சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு கவனமுடன் தொடர்ந்து செயலாற்றி வருவதாக அத்துறை அமைச்சர் சீ ஹொங் டாட் உறுதியளித்துள்ளார்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடர்புகளால் இயங்கும் இன்றைய உலகில் மக்களை, பொருள்களை, சேவைகளை அனைத்துலக அளவில் இணைப்பதில் வலுவான போக்குவரத்துக் கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

போக்குவரத்து என்றாலே நகர்வதைக் குறிக்கிறது. கல்வி, வேலை பொழுதுபோக்கு என பல்வேறு வாய்ப்புகளுக்காக மக்கள் நாடுவிட்டு நாடு நகர்தல், வணிகத்திற்காக பொருள்கள் பல்வேறு இடங்களுக்கு நகர்தல் எனப் பொருளியல் வளர்ச்சிக்கும் உலகமயமாதல் கொள்கைக்கும் உயிரூட்டுவது போக்குவரத்துத் துறை.

எல்லைகள் கடந்தும் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசெல்ல, நாடுகள் தாண்டியும் வணிகம் மேற்கொள்ள தடையற்ற, நம்பகமான துடிப்புமிக்க போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியம்.

உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு 10 விழுக்காட்டு அளவிலான ஆற்றல்மிகு போக்குவரத்துத் திறன் அதிகரிப்பும், ஏறத்தாழ 6 முதல் 8 விழுக்காட்டு அளவிலான வணிக உயர்வுக்கு வழிவகுக்கிறது.

விளைவாக, பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்கவும், மக்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கவும், வறுமையைக் களையவும் அவை வழிகளைத் திறக்கின்றன.

சிங்கப்பூரிலும் போக்குவரத்துத் துறை நாட்டின் பொருளியல் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

போக்குவரத்து அமைச்சின் குறியீடான எல்லையில்லா வளையங்கள் மக்களையும் இடங்களையும் தடையின்றி உலகின் அனைத்து பகுதிகளையும் இணைப்பதைக் குறிக்கிறது.

அந்த வளையங்களின் நிறங்களான மயில்நீலம் (Cyan) வான்வழியையும், பச்சை நிலவழியையும், கருநீலம் கடல்வழிப் போக்குவரத்தையும் சுட்டுகின்றன.

குடியரசின் உலகத் தரம் வாய்ந்த வான், தரை, கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகள், அனைத்துலகப் பொருளியல் மந்தமடைந்தாலும், சிங்கப்பூர் அயராமல் இயங்கவும் வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்கவும் கடுமையாக உழைக்கின்றன.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், இயக்கம் அதிகமின்றி நிலைக்குத்திய சாங்கி விமான நிலையம் இன்று முந்தைய சுறுசுறுப்புடன் முன்னேற்றப் பாதையில் பயணிகளுக்குச் சேவையாற்றி வருகிறது.

உலக வணிகம் குறைந்தபோதும் சிங்கப்பூர் துறைமுகங்கள் வழியாக 2022-ல் 37.3 மில்லியன் 20 அடி கொள்கலன்கள் சென்று இருந்தன.

சுகாதாரப் பேரிடருக்குப் பிந்தைய காலகட்டத்தில் விமானத் துறையும் கடல்துறையும் அடைந்து வரும் இந்த மீட்சி, போக்குவரத்து சார்ந்த நமது கட்டமைப்புகள் மீள்திறனுடன் திகழ்கின்றன என்பதற்கான சான்று.

தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி எனப் பல்வேறு துறைகளுக்கான போக்குவரத்தை அரசு இலகுவாக ஒருங்கிணைப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்தை நம்பி வாழ்க்கையையும் வாழ்க்கைத் தொழிலையும் நடத்திவரும் மக்களையும் கருத்தில்கொள்வது மிகவும் அவசியம்.

நாள்தோறும் 350க்கும் மேற்பட்ட பேருந்துச் சேவைகளில் 3.5 மில்லியன் பயணங்கள் சிங்கப்பூர் முழுவதும் பொதுப் பேருந்துகள் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டுப்படியான, நம்பகமான, வசதியான, இலகுவான போக்குவரத்துச் சேவை என்பது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகையன்று, அது அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமை.

தனி வாகனங்களில் செல்ல வாய்ப்பில்லாதவர் பயன்படுத்தும் சேவையன்று போக்குவரத்து. மாறாக உணவு, உடை, இருப்பிடம் போன்றே பொதுப் போக்குவரத்தும் மக்களின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்று.

வேலைக்குச் செல்ல, பள்ளிக்குப் போக என ஊரோடு தொடர்பில் இருக்க போக்குவரத்து தேவை.

போக்குவரத்து சார்ந்த செலவினங்களை மலிவாக வைத்திருப்பதன் மூலம், குடும்பங்கள் மீதான நிதிச்சுமையைக் குறைக்கவும், அத்தியாவசிய சேவைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசாங்கம் உதவ முடியும்.

இந்த இலக்கோடுதான் நம் போக்குவரத்து அமைச்சும் தளராமல் இயங்கி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் பேருந்து, ரயில் சேவை, சிங்கப்பூரை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் விமானச் சேவை, இவை தொடர்பான பெருந்திட்டங்கள், பயணிகளுக்கான சலுகைகள், போக்குவரத்துக் கட்டணங்களில் மூத்தோர், உடற்குறையுள்ளோர், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான தள்ளுபடிகள், வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பற்றுச்சீட்டுகள் என்று இம்மட்டும் அளித்துவரும் சேவைகளை இன்னும் விரிவாக்க சீரிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு அமைச்சுக்கு சவால்மிகுந்ததாக இருந்தாலும், பயணத் தடங்கல்கள் நேரிட்டபோது மக்களும் பயணிகளும் பொறுமையுடன் வலுவான ஆதரவளித்ததை நினைவுகூர்ந்த போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், சேவைத் தடைகள் ஏற்படலாம் என்றாலும் தடைகளின்றி மக்களுக்குச் சேவைகளை வழங்க அமைச்சு கவனமுடன் தொடர்ந்து செயலாற்றி வருவதாக உறுதியளித்துள்ளார்.

பின்னடைவுகள், தடைகள், என எதிர்மறையான சூழலைப் பார்த்து தேக்கமடைந்திடாமல், பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே முடங்கிப் போன நிலையிலும் ஒருநாள்கூட நிறுத்தாமல் மக்களுக்காக தங்குதடையின்றி போக்குவரத்துச் சேவையை வழங்கிய நாடு சிங்கப்பூர் என்பதை சிந்தையில் ஏந்தியவர்களாய், வளமிக்க எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்!