பெரும்பாலும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் தொழில்நுட்பத்தின் துணை தேவை என்றாகிவிட்ட உலகில், சிறார்களுக்குத் திரைநேரக் கட்டுப்பாடு விதித்து, அதனை மீறாமல் கண்காணிப்பது என்பது பெற்றோர்களுக்கு மிக மிகச் சவாலான பணி.
பெரியவர்களில் பலருக்கும் பல மணி நேரத்தைத் திரையில் செலவிடுவதுதான் வாழ்க்கைத்தொழிலாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகமானோரின் பணி வாழ்க்கையும் அவ்வாறே இருக்கும்.
எல்லாமே கணினிமயமாகிவரும் சூழலில் மணிக்கணக்கில் திரையில் செலவிட வேண்டிய நிலைமை.
ஆயினும், தொடர்ச்சியாக நெடுநேரம் திரையைப் பார்ப்பது உடல், மனநலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது பெரியவர்களுக்குத் தெரிந்ததுதான்.
அதே நேரத்தில், சிறுபிள்ளைகளிடம் அதனை எடுத்துச் சொல்லி விளங்கவைப்பது எளிதான செயலன்று.
சிறுவயதிலேயே திரையில் அதிக நேரம் செலவிடுவது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியையும் கற்றல்திறனையும் பாதிக்கும், உடற்பருமனுக்கு வித்திடும், சமூக, உணர்வுநலத்தை மோசமாக்கும் என ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. அது பின்னர் உணர்வுசார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தி, குடும்பப் பிரச்சினைகளுக்கும் வழிகோலும்.
சிறாரின் திரைநேரத்தைச் சமாளிக்க பெற்றோருக்குக் கைகொடுக்கும் வகையில், இவ்வாண்டுத் தொடக்கத்தில் அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதில், ஒன்றரை முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறாரை முப்பிரிவினராகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் நாளொன்றுக்கு எவ்வளவு நேரத்தைத் திரையில் செலவிடலாம், எந்தெந்த நேரத்தில் காட்சித்திரைகளைத் தவிர்க்கலாம், திரை நேரத்தைக் குறைக்க எத்தகைய வழிமுறைகளைக் கையாளலாம் போன்றவை பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
ஆயினும், அதிகமான குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டதைவிடக் கூடுதல் நேரம் திரையில் செலவிடுவது மின்னிலக்க, தகவல் மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்ட கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வார நாள்களைவிட வார இறுதிகளில் பிள்ளைகளின் திரைநேரம் அதிகமாக இருக்கிறது.
இதில், பள்ளி சார்ந்த நடவடிக்கைகளுக்கான திரைநேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தங்கள் பிள்ளைகள் காட்சித்திரையில் கூடுதல் நேரம் செலவிடுகின்றனர் என்பது குறித்து மட்டும் பெற்றோர்கள் கவலைப்படவில்லை. பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், முன்பின் தெரியாதோருடனான தொடர்பாடல், இணையப் பகடிவதை, திரைக்கு அடிமையாதல், தவறான தகவல், பொய்ச்செய்தி போன்றவை குறித்தும் பெற்றோர்கள் கவலைகொள்கின்றனர்.
சிறாரின் திரைப் பயன்பாடு தொடர்பில் பெற்றோர்களின் கவலைகளை உணர்ந்துள்ள அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என அமைச்சர் ஜோசஃபின் டியோ உறுதிபடக் கூறியுள்ளார்.
ஆயினும், அரசாங்க நடவடிக்கையின்மூலம் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட இயலாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட செயல்பாடும் அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த செயல்பாடும் தேவை.
பெற்றோரும் தங்கள் பழக்கவழக்கங்களைக் கவனிக்க வேண்டும். பெற்றோர் சொல்வதிலிருந்து மட்டுமின்றி, அவர்களின் செயல்பாடுகளைக் கண்டும் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனால், உணவருந்தும்போதோ குடும்பமாக இணைந்திருக்கும் மற்ற வேளைகளிலோ பெற்றோர் கைப்பேசித் திரையை வருடினால் பிள்ளைகளின் கவனமும் அவற்றின்மீதே திரும்பலாம்.
அடம்பிடிக்கும் பிள்ளைகளைத் திரையைக் காட்டி அமைதிப்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடலாம். அது பின்னாள்களில் அவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தி, உளம் சார்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதனால்தான், வயதிற்கேற்றபடி திரைநேரத்தை முறைப்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பெற்றோர், பராமரிப்பாளர் என அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை அறிய சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை நாடலாம்.
அந்நெறிமுறைகளை வலிந்து திணிக்கும் அணுகுமுறை பயனளிக்காமல் போகலாம் என்பதால் அதற்குச் சரியான வழிமுறைகளைக் கண்டறிந்து கையாள்வதும் முக்கியம்.
காட்சித்திரைகளின் வண்ணங்களால் ஈர்க்கப்படும் சிறாரை வண்ணமயமான விளையாட்டுகளால் ஈர்க்க முயல வேண்டும். குழு விளையாட்டு, தம்மையொத்த வயதினர் மட்டுமின்றி, குடும்பத்தினராகச் சேர்ந்து ஈடுபடும் பொழுதுபோக்கு நடவடிக்கை போன்றவை மூலம் குழந்தைகளின் திரைநேரத்தைக் குறைக்கலாம்; குடும்பப் பிணைப்பையும் வளர்க்கலாம்.
அதுபோல், பிள்ளைகளின் கவனத்தை நூல்களின்மீது திருப்புவதும் மிகுந்த நன்மை தரும்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த கவலைகள் இருப்பது இயல்புதான். எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி இல்லை, நாங்களெல்லாம் இப்படி வளரவில்லை எனக் கூறிக்கொண்டிருக்க இயலாது.
மாற்றங்களே நிரந்தரம். கணினியும் ஒரு கண் இனி என்பதுதான் நடைமுறை உண்மை.
ஆயினும், அதனை அரிச்சுவடிபோலக் குழந்தைகளிடம் படிப்படியாகக் கொண்டுசென்று, தக்கனவற்றைத் தழுவச் செய்வது, முன்மாதிரித் தலைமுறையாக நாம் வாழ்ந்து காட்டி, நல்வழிகாட்டி, நம் குழந்தைகள் அனைவரையும் முன்னேறச் செய்து, நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவது பெற்றோரின், சமூகத்தின், அரசாங்கத்தின் கடமை!

