சிங்கப்பூர் போன்ற நகர்ப்புறங்களில் மக்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது இயல்பாகிவிட்டது.
அத்தகைய சூழலில் மக்களிடம் மனக்கவலை, பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலச் சிக்கல்கள் தலைகாட்டலாம்.
ஆயினும், அதில் சிக்கிக்கொள்ளாமல், அதிலிருந்து மீண்டு, நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடர முயல்வதுதான் அறிவார்ந்த செயல்.
இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்மூலம், 18 வயதிற்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இலேசானது முதல் தீவிரமானது வரை மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயர்கல்வி, வேலை, குடும்பம் என வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அவற்றைச் சிலர் நெருக்கடியாக உணரும்போது, மனம் சார்ந்த சிக்கல்கள் தோன்றலாம்.
அத்தகைய சூழலில், தற்காலிக நிம்மதி தேடுவதாகக் கூறிக்கொண்டு, ஒருவர் புகை, போதை, மது போன்ற தீய பழக்கங்களை நாடுவது நிலைமையை மோசமாக்குமே தவிர ஒருபோதும் தீர்வாக அமைந்து, சிக்கலிலிருந்து அவரை விடுவிக்காது.
நிலைமை முற்றும்போது உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற எண்ணங்கள் தலைதூக்கலாம்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 314 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாகப் பதிவாகியுள்ளது. அவர்களில் 75 பேர் 30-39 வயதிற்குட்பட்டோர்; 47 பேர் 20-29 வயதிற்கு இடைப்பட்டோர்.
குறிப்பாக, இளையர்களின் இறப்பில் உயிர்மாய்ப்பு முக்கியமாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய, தீர்வுகாணப்பட வேண்டிய ஒன்று.
உயிரை மாய்த்துக்கொண்டோர், அம்முடிவை எடுப்பதற்கு முந்திய ஒருவார காலத்தில் அவர்களிடம் மனநிலை மாற்றம், கோபம், பொறுப்பற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக மனநலக் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
உயிர்மாய்ப்பு தீர்வாகாது என்பதை மாணவப் பருவத்திலேயே பிள்ளைகளின் உள்ளத்தில் விதைக்க வேண்டும். அதுபற்றிய வெளிப்படையான, நேர்மையான கலந்துரையாடல்கள் அவசியம் என்கிறார் மனநலக் கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மைதிலி சுப்பிரமணியம்.
அத்தகைய அறிகுறிகள் தெரிந்தால் உடனிருப்பவர்கள் உடனே அணுகி, ஆதரவாக இருந்து, பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்புநிலைக்குத் திரும்பக் கைகொடுக்கலாம்.
மன அழுத்தம், பதற்றத்தை எதிர்கொள்வோர் உரிய அமைப்புகளைத் தொடர்புகொண்டு உதவி நாடவும் ஆலோசனை பெறவும் தயங்கக்கூடாது. அத்தகைய சூழலில் தனித்திருக்க முயலாமல், பிறரிடம் பகிர்ந்துகொள்வது, சிக்கலின் தீவிரத்தைக் குறைக்க உதவும்; அதிலிருந்து மீள்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கலாம். காலந்தாழ்த்தாமல் மருத்துவ வல்லுநரின் உதவியை நாடவும் தயங்கக்கூடாது.
எடுத்துக்காட்டாக, பணிச்சுமை அழுத்தினால் அதுகுறித்து உயரதிகாரியிடம் பேசலாம். தேவைப்படின் இடையில் சிறிதுகாலம் ஓய்வெடுக்கலாம். மனஅழுத்தம், நெருக்கடி காரணமாக முன்னணி விளையாட்டாளர்கள் பலர் சிறிதுகாலம் ஓய்வெடுத்து, பின் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்பி, சாதித்த கதைகள் உண்டு.
இடையிடையே ஓய்வெடுப்பது அவசியம். மரம் வெட்டுபவர்கூட சிறிது நேரத்திற்கு ஒருமுறை ஓய்வெடுப்பதோடு, அந்நேரத்தில் தமது கோடரியையும் தீட்டிக் கூர்மையாக்கிக்கொள்கிறார்.
அவ்வாறு, கல்வி, வேலைக்கு இடையிடையே ஓய்வெடுத்துக்கொள்வது உடல், மனநலத்தைப் பேண உதவுவதோடு, நமது சிந்தனை ஆற்றலையும் மேம்படுத்தும்.
எவர் ஒருவரும் தனியாகப் போராட வேண்டிய தேவை இல்லாத, இரக்கமுள்ள, பிணைப்புமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
மனநலம் சார்ந்த சிறந்த கல்வியறிவைப் பெறும்போது, மற்றவர்கள் மனநலச் சிக்கல்களால் அவதியுறுவதைக் கண்டறிவதிலும் அத்தகைய சூழலில் தொடக்கத்திலேயே கைகொடுப்பதிலும் குடும்பத்தினர், ஆசிரியர்கள், நிறுவனத்தினர், ஊழியர்கள் போன்றோர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
அவ்வகையில், கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் ‘டச்’ சமூக சேவைகள் அமைப்பும் இணைந்து பணியிட மனநல மையம் ஒன்றை 2026ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்க முயற்சி.
ஒருவரின் நல்வாழ்விற்கு உடல்நலம் எவ்வளவு அடிப்படையோ, அவ்வளவிற்கு மனநலமும் இன்றியமையாதது. சிறுவயது முதலே உடலையும் மனத்தையும் பேணக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு நல்ல உணவுமுறையும், உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் போன்ற தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் கைகொடுக்கும்.
வாழ்க்கை என்பதை வெற்றி தோல்விக்கான போட்டியாகப் பார்க்காமல் இருந்தாலே மனநலச் சிக்கல்கள் தோன்றாது என்பது உறுதி.