கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக மத்தியக் கிழக்கில் பற்றி எரிந்துகொண்டிருந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 70,000 உயிரை குடித்த போர். அதில் 68,000 பேர் பாலஸ்தீனர்கள். பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர். சமநிலையற்ற போர். மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல் வலிமையற்ற பாலஸ்தீன காஸா பகுதியை முற்றுகையிட்டுத் தாக்கியதில் விளைந்த பரிதாபம். தொடக்கத்தில் ஹமாசைக் குறிவைத்திருந்தாலும், நாளடைவில் அறமற்ற போராக மாறியதைப் பலரும் கண்டனர்.
இந்த முதற்கட்ட ஒப்பந்தம் பிணைக்கைதிகள் விடுவிப்பு, காஸாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுதல், பாதிக்கப்பட்ட காஸா பகுதிக்குள் மனிதநேய உதவிகளை அதிகரிப்பது போன்ற உயிர்காக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதால் உலகிற்கு சற்று நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
போரைப் பற்றியும் அரசியல் தீர்வுகளைப் பற்றியும் நாம் பலகாலம் படித்திருக்கிறோம், பேசியிருக்கிறோம். ஆனால், தனிமனிதத் தாக்கங்களையும் மனக்காயங்களையும் பேசவேண்டிய தருணம் இது. ஒரு போர்நிறுத்தம் என்பது போரின் முடிவன்று; அது அமைதிக்கான ஒரு தொடக்கம் மட்டுமே. இந்தப் போர் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தாண்டி, மனிதகுலத்தின் மனச்சாட்சியிலும் ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணுக்குத் தெரியாத வடுக்கள் மறைய காலமாகும்.
மோதல் சண்டைக்களத்தோடு நின்றுவிடவில்லை. இது உலக நாடுகளை, சமூகங்களை, இன நல்லிணக்கத்தைப் பல்லாண்டுகாலம் பாதுகாத்துவந்த சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் விரிசலை உண்டாக்கியது. அடுத்த தலைமுறை இளையர்கள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இருதுருவங்களாக நின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான உரிமை, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான உரிமை என இருதரப்பும் தங்கள் நியாயங்களை முன்வைத்தன. ஆதரவு முழக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் போராட்டங்கள் வெடித்தன.
உலகப் பொருளியலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இது ஒரு நாட்டின் பிரச்சினை மட்டுமன்று. தனிமனித வருமானத்தையும் வாழ்க்கையையும் வெகுவாகப் பாதித்திருப்பது பரவலாக அறியப்படாத உண்மை.
போரினால் ஏற்பட்ட உணர்வுபூர்வமான சேதம் மிக ஆழமானது. காஸாவில் உள்ள மக்கள், அடுக்கடுக்கான அதிர்ச்சிகளாலும் அன்புக்குரியவர்களை இழந்த வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இஸ்ரேலில் உள்ள பிணைக்கைதிகளின் குடும்பத்தினரும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பொதுமக்களும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்நிறுத்தம் ஆயுதங்களை அமைதிப்படுத்தலாம். ஆனால், மனத்திலும் சமூகத்தின் ஆழமான வேர்களிலும் பதிந்துவிட்ட பயம், பதற்றம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும். மனக்காயங்கள் குணமடைய நீண்ட காலம் ஆகலாம்.
இப்போரின் முடிவை உலக நாடுகள் நீண்டகாலமாக ஒரே ஒரு தீர்விலேயே காண்கின்றன. அதுதான் ‘இரு நாடுத் தீர்வு’. அனைத்துலகச் சமூகம் இந்தத் தீர்வுக்கு ஆதரவளித்தாலும், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனத் தரப்பில் உள்ள முக்கிய அரசியல் சக்திகளால் இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இஸ்ரேலின் தற்போதைய தலைமை பாலஸ்தீன அரசு அமைவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஹமாஸ் போன்ற அமைப்புகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கத் தயங்குகின்றன.
தீர்வுக்கான வழிமுறைகள் உலக நாடுகளின் அட்டவணையில் இருக்கலாம். ஆனால், தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய இருதரப்பிற்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள வரலாற்றுப் பகையும் நம்பிக்கையின்மையும் இன்றும் மலைபோல் நிற்கின்றன. இருதரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் இந்த நம்பிக்கையின்மை, சமரசத்தை ஏற்றுக்கொள்வதற்கான மனவுறுதியைப் பாதிக்கின்றது.
குணப்படுத்துவதற்கான வழி, வெறும் பாலஸ்தீனத்திலோ இஸ்ரேலிலோ மட்டும் இல்லை. அது உலக சமூகத்தையும் உள்ளடக்கியது. இந்தப் போர் வெளிப்படுத்திய வெறுப்பையும் பிளவுகளையும் உலகம் சரிசெய்ய வேண்டும். இந்தப் போர்நிறுத்தம், அமைதியை நோக்கிய முதல் சிறுபடியாகும். போர்நிறுத்தம் நிரந்தரமாக நீடிக்க வேண்டும். உலகம் தனது வேற்றுமைகளை மறந்து, எதிர்காலத் தலைமுறையாவது அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ வழிசெய்ய வேண்டும்.
உலக நாடுகள் அதற்கான முதல் முயற்சிகளை எடுத்துவிட்டன. பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க அண்மையில் முன்வந்த நாடுகளுக்கு நன்றி. இஸ்ரேலின் மனத்தையும் செயல்களையும் மாற்றக்கூடிய ஒரே நாடான அமெரிக்கா, போரை நிறுத்தும் முயற்சிகளை எடுத்திருப்பது மெச்சத்தக்கது. ஆனால், இருதரப்பும் இணங்கும் முடிவுகள் கண்ணில் தென்படவில்லை. சமய மொழிகளால் வேறுபட்ட இரு இனங்கள் ஒரே புனித மண்ணில் தங்கள் எதிர்காலத்தை நிலைநிறுத்தப் போட்டியிடுவதைத் தீர்ப்பது கடினம். எனினும், மனிதநேயம் நிலைக்க வேண்டும் என்பதே உலக விருப்பம்.
நீண்ட போரிலிருந்தும் உயிர்ச்சேதத்திலிருந்தும் மீள்வது கடினம். உயிரோடிருப்போர் உணவு இல்லாமல் மெலிந்திருக்கிறார்கள், மிகவும் சோர்ந்திருக்கிறார்கள், மனவலியுடன் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வரும் கொண்டாட்ட நாள்களில் நாம் விருந்துண்ணும்போது அவர்களையும் மனத்தில் கொள்வோம். அவர்களின் துயர்துடைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடும் அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் நம்மால் முடிந்தவரை நன்கொடை அளித்து, பங்களிப்பதே மனிதநேயம்.
அறம் செய்ய விரும்பி, ஐயமிட்டு உண்போம்.