தீபாவளி கொண்டாட நம்மில் பலர் தயாராய் இருக்கிறோம். வரும் மாதங்களில் மேலும் பல சமயத் திருவிழாக்கள் உண்டு.
ஒவ்வொருவரின் கொண்டாட்டங்களில் அனைத்துச் சமயத்தினரும் பங்கேற்கும் தளங்கள் இந்நாட்டில் உண்டு. அதில் மாணவர்கள், அடித்தள அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றாலும் பெரும்பாலானோருக்கு இத்திருவிழா நாள்கள் ஒரு பொது விடுமுறையாகவே கழிகின்றன.
ஒவ்வோர் இனத்தவரும் அவரவர் பண்டிகைகளில் வேறு இனத்தவரை ஈடுபடுத்தும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இப்பண்டிகைகளின்மூலம் பல்லினப் புரிந்துணர்வை வலுப்படுத்தலாம்.
பல இன, சமய நண்பர்களைக் கொண்ட சமூகமாக நாம் உருவாக வேண்டும். ஒரு சில உணவு, உடை அடையாளங்களைத் தாண்டி, ஒவ்வோர் இனத்தின் பாரம்பரியம், வரலாறு, இலக்கியம், கதைகள், சடங்குகளை அறிந்துகொள்வதன்மூலம் ஆழமான புரிந்துணர்வை கொண்ட பல்லினச் சமுதாயமாக வளர்வோம்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில், இன, சமய நல்லிணக்கம் என்பது உயிர்நாடி. நாம் இன்று அனுபவிக்கும் அமைதி, பல்லாண்டுக்கால உழைப்பு. அரசாங்கத் திட்டத்தாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் உருப்பெற்ற, விலைமதிப்பற்ற சொத்து. இந்த அமைதியை நாம் ஒருபோதும் இயல்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சோதனைகள் நம்மைச் சாடும்போது இன, சமய அடித்தளங்கள் ஆட்டம் காணும்.
இக்கருத்தை உள்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அடையாள அரசியலைப் பற்றி உரையாற்றுகையில், சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும் உரிமை அவரவர்க்கு இருந்தாலும் அரசியலில் அவை கலக்க இடந்தரக்கூடாது என்பதைத் தெளிவாய் விளக்கினார்.
சிங்கப்பூர் அரசாங்கம், இன, சமயம் சார்ந்த பிரிவுகள் ஆழமாவதைத் தடுக்க, திட்டமிட்ட சட்டங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடித்து வருகிறது.
இதில் மிக முக்கியமானது, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இன ஒருங்கிணைப்புக் கொள்கை. இந்தக் கொள்கை, குடியிருப்புப் பேட்டைகளில் எந்தவொரு குறிப்பிட்ட இனக் குழுவினரும் அதிகமான எண்ணிக்கையில் சேர்ந்துவிடாததை உறுதிசெய்கிறது.
மேலும், இன, சமய எல்லைகளைக் கடந்த ராணுவப் பயிற்சி, அனைவர்க்கும் பொதுவான கல்விக் கட்டமைப்பு ஆகியவை வெவ்வேறு பின்புலங்களைக் கொண்டவர்கள் பழகிப் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
அரசின் முயற்சிகள் பயனளித்தபோதிலும், நல்லிணக்கத்தை நோக்கிய பயணம் என்பது தொடர்முயற்சியாகவே இருக்கும்.
இன்றும் வேறு இனத்தவருடன் நெருங்கிப் பழகாதவர்கள் இருக்கவே செய்கின்றனர். அத்தகையவர்கள் அறியாமையினால் வேற்றுமை உணர்வுகளைத் தாங்கிச் செயல்படும்போது சிறுபான்மையினர் அன்றாட வாழ்க்கையில் நியாயமில்லாப் பாகுபாடுகளை உணரலாம், வேலைவாய்ப்புகளை இழக்கலாம், பணியினில் பதவி உயர்வுகள் தடைபடலாம். இம்மாதிரியான கசப்பான அனுபவங்களை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும் வெகுவாய்க் குறைப்பது சமுதாயத்தின் முதிர்ச்சியைக் குறிக்கும்.
அனைத்து இன மரபுகளிலும், சமய நூல்களிலும் பொதுவான மற்றும் உன்னதமான மதிப்புகள் நிறைந்துள்ளன. மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம், கருணை, உதவும் நோக்கம், இரக்கம், அமைதி, பாகுபாடின்மை, மனிதநேயம் ஆகியவை சமயங்களின் மையக் கருத்துகளாகும். இந்த ஒருமித்த பண்புகளை நாம் முன்னிலைப்படுத்தி, வேறுபாடுகளைக் கடந்து நம்மை ஒன்றிணைக்கும் பொதுவான நூலிழைகளை அனைவரும் அறிய பாடுபட வேண்டும்.
சிங்கப்பூர் உலகளாவிய பொருளியல் அல்லது புவிசார் அரசியல் நெருக்கடிகளைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், அதற்கு உறுதியான சமூக ஒற்றுமை இன்றியமையாதது. எந்தவொரு சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் மக்கள்தொகை வேண்டும்.
இத்தனை ஆண்டுக்காலம் கட்டிக்காத்த ஒற்றுமைக்கு ஒரு புதிய சவால் வெளிநாடுகளிலிருந்து வரும் தூண்டுதல்கள். சிங்கப்பூரின் எதிர்காலம் சிங்கப்பூரர் தீர்மானிக்கப்பட வேண்டியது. அவ்வப்பொழுது எழும் இத்தூண்டுதல்களைப் புறந்தள்ள நம்முள் ஆழமான இன, சமயப் புரிந்துணர்வு தேவை. அதனை வளர்ப்போம். அதற்கான வாய்ப்புகளில் பண்டிகைகளும் ஒன்று. இத்தீபாவளியை அனைவருக்கும் படைப்போம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்து காட்டுவோம்.