தந்தை - குடும்பத்தின் திசைகாட்டி, உணர்வுப் பாலம்

தந்தை - குடும்பத்தின் திசைகாட்டி, உணர்வுப் பாலம்

3 mins read
cb739be7-e104-4542-b06c-f2da24b889ba
இன்றைய நவீன தந்தையர் தங்கள் பிள்ளைகளை அறிவில் மட்டுமன்றி, உணர்விலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து நிற்கச் செய்வது முக்கியம். - படம்: செயற்கை நுண்ணறிவு

‘தந்தை’ என்பவரை ஒரு குடும்பத் தலைவராக மட்டும் பார்க்காமல், ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறையைச் செதுக்கும் சிற்பியாகவும் அணுகவேண்டும்.

‘தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, தந்தை தன் மகனுக்குச் செய்யவேண்டிய தலையாய கடமை, அவனைக் கற்றறிந்தோர் நிறைந்த அவையில் தலைசிறந்து விளங்கும் அளவிற்கு அறிவாளியாக ஆக்குவதே ஆகும்.

இன்றைய நவீன தந்தையர் தங்கள் பிள்ளைகளை அறிவில் மட்டுமன்றி, உணர்விலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து நிற்கச் செய்வது முக்கியம்.

ஒரு சமூகத்தின் அடித்தளமும் எதிர்காலமும் அதன் குடும்பக் கட்டமைப்பின் வலுவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அதிவேகமாக மாறிவரும் சூழலில், ‘தந்தை’ என்ற சொல்லுக்கான இலக்கணமும் வெகுவாய் மாறிவருகிறது.

முன்பு குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரத்தை ஈட்டித் தரும் ‘பொருளியல் அரணாக’ மட்டுமே தந்தையர் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ, பிள்ளைகளின் ஆளுமைத்திறன், மனநலம், சமூக நெறிகள் ஆகியவற்றை வடிவமைக்கும் முதன்மைத் திசைகாட்டியாக அவர்கள் மாறி வருகின்றனர்.

இக்கால உலகில் கல்வி என்பது வெறும் பட்டப்படிப்போடு நிறைவடைவதில்லை. பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாழ்நாள் கற்றல் திறனும் வெளியுலக நடைமுறை விழிப்புணர்வும் தேவை.

மாறிவரும் உலகிற்கு ஏற்ப பிள்ளைகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கும், தோல்விகளை எதிர்கொள்வதற்கும் தேவையான திறன்களை தந்தையர் தங்களின் சொந்த வாழ்க்கைப் பாடங்களின் மூலமும் தொழில்முறை அனுபவங்களின் மூலமும் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும். இது அறிவுரைகளைத் தாண்டிய, செயல்பாடு சார்ந்த வழிகாட்டுதல்.

சமூக ஊடகங்களின் தாக்கம் இன்றைய இளையர்களிடையே மன அழுத்தத்தையும், உளவியல் சார்ந்த சவால்களையும் அதிகப்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழலில், குடும்பத்தில் தந்தையர் வழங்க வேண்டிய ஆதரவு உணர்வுசார்ந்து அமைதல் வேண்டும். பாரம்பரியமாகத் தந்தையர் தங்களின் பாசத்தை வெளிக்காட்டாத, கண்டிப்பு மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் தங்களின் அச்சங்கள், ஏமாற்றங்கள், எதிர்காலக் கவலைகள் ஆகியவற்றைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ளும் ஒரு பாதுகாப்பான உளவியல் தளமாகத் தந்தையர் விளங்க வேண்டும். தாயின் மென்மையான அன்பிற்கு இணையாக, தந்தையின் உறுதியான அரவணைப்பும் தோழமையும் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்போது அவர்களின் தன்மதிப்பும் மன உறுதியும் இரட்டிப்பாகின்றன.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வலிமையே அதன் சமூக ஒற்றுமையும் பன்முகத்தன்மையும்தான். பிள்ளைகள் வளர்ந்துவரும் சூழலில், அவர்களிடம் சக இன, மொழி, சமயக் குழுக்களை மதித்து நடக்கும் மேன்மையான பண்பை வளர்ப்பதில், தந்தையர் தங்களின் அன்றாடச் செயல்பாடுகள்மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்ட வேண்டும்.

அதே வேளையில், நமது பாரம்பரியக் கலைகள், பண்பாடு மற்றும் மொழியின் வேர்களை இளைய தலைமுறையினர் மறந்துவிடாமல் பற்றிக்கொள்ளச் செய்யும் பாலமாகவும் தந்தையர் விளங்கவேண்டும். அவர்களைச் சிறந்த மனிதர்களாகச் சமூகத்தில் வலம்வரச் செய்ய வேண்டியது தந்தையரின் பொறுப்பு.

‘நான் எவ்வாறு ஒரு சிறந்த தந்தையாகத் திகழ முடியும்? அதற்கு என்னை நான் எவ்வாறு தகுதிப்படுத்திக் கொள்வது?’ என்பன போன்ற வினாக்கள் இக்காலத் தந்தையரிடம் எழுவது இயல்பானதே.

தந்தையர்க்கான பயிலரங்குகள், ஆலோசனைக் கருத்தரங்குகள், வழிகாட்டிக் கையேடுகள்மூலம் அதற்கான வழிகாட்டுதல்களைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து வழங்கி வருகிறது.

2026ஆம் ஆண்டுமுதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ள, பெற்றோர்க்கான 10 வாரப் பகிர்வு விடுப்பு போன்ற அரசாங்கக் கொள்கை மாற்றங்களை வெறும் விடுமுறையாகப் பார்க்காமல், குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலிருந்தே அவர்களுடன் உணர்வு சார்ந்து இணைவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகத் தந்தையர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இத்தகைய அரசாங்க வளங்களைத் துடிப்புடன் பயன்படுத்தும் தந்தையரே எதிர்கால இளைய தலைமுறையினரைத் தன்னம்பிக்கைமிக்கச் சாதனையாளர்களாக வழிநடத்தும் உன்னதத் திசைகாட்டிகளாகத் திகழ்வர் என்பதில் ஐயமில்லை.

தந்தையரின் கடின உழைப்பைக் குடும்ப உறுப்பினர்கள் மறக்காமல் போற்றவேண்டும். அவர்களின் தியாகங்களை அங்கீகரிப்பதும் வீட்டில் அவர்களுக்குத் தேவையான மன நிறைவை வழங்குவதும் குடும்பத்தினரின் தலையாயக் கடமை!