தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்

தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்

3 mins read
b36da2f8-d176-44a3-be9e-64d92d35b2f8
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிகழ்வில் பிரதமர் லாரன்ஸ் வோங், சங்கத்தின் தலைவர் தனபால் குமார். - படம்: த.கவி

பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிகழ்வில் ஆற்றிய உரையில் ஆணித்தரமாகக் கூறிய வார்த்தைகள் ‘தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்’ என்பதே.

இம்முழக்கம் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் வெகுவாய் எதிரொலிக்க வேண்டும். அனைவரும் தமிழ்மொழி வலுப்பெறுவது பற்றிச் சிந்திக்க வேண்டும். இவ்வாக்கு எதிர்காலத்திலும் உண்மையாய்த் திகழ நம் அனைவரின் பங்கும் இன்றியமையாதது.

தாய்மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமன்று. அது நம் பண்பாட்டு வேர், விழுமியம், வரலாற்று மரபு, நம் வாழ்வியல் பிணைப்பு. நம் தனித்துவமான ஆளுமையைச் செதுக்குவதில் தாய்மொழிக்குப் பெரும்பங்குண்டு. பல்லின, பல சமய நாடாகத் திகழும் சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை நம் தாய்மொழிகளே உலக அரங்கில் பறைசாற்றுகின்றன. நாம் அனைவரும் முதன்மையாகச் சிங்கப்பூரர்களாக அணிவகுக்கும் அதே வேளையில், நமது பண்பாடுகளின் செழுமையான மரபோடும் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளோம். அதனால், பன்முகத்தன்மை கொண்ட நமது கல்விமுறையின் முதன்மை தூணாகத் தாய்மொழிக் கல்வி எப்போதுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினர் இடையே தாய்மொழித் தேர்ச்சியை உறுதிசெய்வது அத்தனை எளிதானதன்று என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய சிங்கப்பூர் இளையர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே முதன்மை மொழியாகப் பேசும் குடும்பச் சூழலில்தான் வளர்ந்து வருகின்றனர். பள்ளி, பணியிடம், அன்றாடப் புழக்கம் என அனைத்திலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதால், தாய்மொழி புழக்கத்திற்குப் பெருஞ்சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தமிழைப் பொறுத்தமட்டில் இந்தச் சவாலின் வீரியம் சற்று அதிகம். ஏனெனில், வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் தமிழைப் பேசவோ, படிக்கவோ அல்லது இயல்பாகப் பயன்படுத்தவோ கூடிய இயற்கையான மொழிப் புழக்கச் சூழல் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. அச்சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

தமிழர்கள் தங்களுக்குள் உரையாடும்போது தமிழ் இயற்கையாய் ஊடுருவ வேண்டும். அதில் மனத்தடங்கல்கள் ஏற்படக்கூடாது. ஏதோ ஒரு காரணத்தால் தேவையில்லாமல் சிலர் வெட்கப்படுவதுண்டு. இது வேதனைக்குரிய செயல். அனைவரும் ஈடுபாட்டோடு தமிழ் பேசுகையில், அதுவும் பழக்கமாகிவிடும். அதற்கு வரவேற்பு கூட கூட, தமிழ் வழக்கமாகிவிடும். இதனை வழிமுறைப்படுத்துவது தமிழர்கள் அனைவரது கடமை.

குடும்பம், பள்ளி, சமூகம், அரசாங்கம் எனும் நான்கு தூண்கள் ஒருசேர உறுதியாய் நிலைக்குமாயின் தமிழ் எனும் தளம் வலுவாய் இருக்கும். சிங்கப்பூரில் மொழிக் கல்விக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பல உத்திகளை வகுத்துள்ளனர். தமிழ் அதிகாரத்துவ மொழியாய் அமைந்திருப்பது இதற்கு அடித்தளம். அதன்வழி, பள்ளியில் இரண்டாம் மொழியாய் தமிழ் ஒரு பாடமாய் இருக்கிறது. சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் இவ்வாய்ப்பினைச் சாதாரணமாய் எண்ணலாம். ஆனால், உலகத் தமிழர்கள் பலர் சிங்கப்பூர்வாழ் தமிழர்களைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். அவர்களின் பொறாமைக்கு முக்கியக் காரணம் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விலகாது என்பதுதான்.

நம் நாட்டு இளையர்கள் யாவரும் அவரவர் தாய்மொழியினைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்கின்றனர். அவர்களின் மொழித்திறன் வேறுபட்டிருந்தாலும், பொதுவாய் மொழி புரியும் அளவிற்கும் உரையாடல் அளவிற்காவது திறன் பெற்றுள்ளனர். அண்மைக்காலமாக, தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் விவாதப் போட்டிகளிலும் தமிழ் பேசும் இளையர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதை உணர முடிகிறது. நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதற்கு இது சான்று. ஊக்கமளிக்கும் இப்போக்கு தொடரட்டும்.

ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பு, தமிழை ஒரு வாழும் மொழியாக எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனை வெறும் ஆசிரியர்களின் கடமையாக மட்டும் சுருக்கிவிடக்கூடாது. ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கையில் மொழியின் மீதான ஆர்வத்தை விதைக்கிறார்கள். அவர்கள் விதைத்த விதையைப் பயிராக்குவதற்கு, அவர்களோடு சேர்ந்து உழைக்க ஒரு குழு நிச்சயமாகத் தேவை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பெற்றோர்கள் தங்களின் இல்லங்களில் தாய்மொழிப் புழக்கத்தை வளர்க்க வேண்டும். கலைஞர்களும் ஊடகங்களும் அதற்குச் சமகாலத் தன்மையையும் வண்ணத்தையும் சேர்த்து இம்முயற்சிக்கு மெருகூட்ட வேண்டும். ஒவ்வொரு தரப்பும் தன் பங்கினைச் சரியாக ஆற்றும்போது, எந்தச் சூழலிலும் சிங்கப்பூரில் தமிழ் ஒரு வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

நம் மொழியை நாம் காப்பின், நம் அடையாளத்தை மொழி காக்கும்!

குறிப்புச் சொற்கள்
தமிழாசிரியர்சிங்கப்பூர்தமிழ்பிரதமர்