சவால்மிக்க உலகச் சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டிய தருணம்

3 mins read
e91b1dae-22b7-4c6b-a1dd-d4988f9865dc
படம்: - தமிழ் முரசு

விலைவாசி, வேலைவாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகளின் பூர்த்தி யாவும் உள்ளூர் அரசியல், பொருளாதாரக் கொள்கைத் தீர்வுகள் என நம்புவோர் பலருண்டு. ஆனால், உண்மை அவ்வளவு சுலபமன்று.

ஒரு நாட்டின் பொருளியல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில், அந்நாட்டையும் தாண்டிய பல்வேறு காரணங்களுக்குப் பங்கிருக்கிறது.  உலக அரசியல், பெரும் நாடுகளின் பொருளியல் கொள்கைகள், உலக ஏற்றுமதி இறக்குமதி நிலவரங்கள், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளைப் பெரிதும் அலைக்கழிக்கும்.

தற்போதைய அமெரிக்க அதிபர் கொண்டுவரும் வர்த்தகத் தடைகளும் வருமான வரி முடிவுகளும் உலகை உலுக்கும். என்றாலும் பல நாடுகளும் அவரது முதல் தவணைக் காலத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் அடிப்பாதையில்  தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. ஆசிய பசிபிக் நாடுகள் பல்வேறு பொருளியல் இணைப்புகளை அமெரிக்கா இல்லாத கூட்டணிகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன. 

வட்டார நாடுகளுக்கிடையிலான வணிக உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர், ஆசியான், டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவம் (Trans-Pacific Partnership), பல நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் என்று பாதுகாப்பு வட்டங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இருப்பினும், ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளான சீனா, இந்தியாவின் பொருளியல் நிலைமை, வெளியுறவுத் திட்டங்கள் போன்றவை சிங்கப்பூரையும் பாதிக்கும். இதில், தற்போது பல முக்கிய நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி, தன்னைப்பேணித்தனம் என ஒருவகையான சுயநலவாதம் தலைதூக்கியிருப்பது உலகம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று.

சிங்கப்பூர் பொருளியல் வலுவாக இருந்தாலும் அதன் எதிர்கால வளர்ச்சியையும் நீடித்த நிலைத்தன்மையையும் பாதிக்கும் பல சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழல்கள் உருவாகியுள்ளன.

இதில் முக்கியமான சவால்களாக மிதமான பொருளியல் வளர்ச்சி, அதிகரிக்கும் மூப்படைந்த மக்கள் தொகை, ஊழியர் பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு, புவிசார் அரசியல் பதற்றங்கள், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம், வருவாய் சமநிலை குறைவு, கணிக்க முடியாத பருவநிலை மாற்றம், அண்டை நாடுகளின் வளர்ச்சியால் பன்னாட்டு நிறுவனங்களையும் தொழில்களையும் ஈர்ப்பதில் அதிகரித்துவரும் போட்டித்தன்மை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இச்சவால்களைச் சமாளிப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை தக்க வைத்துக்கொள்வதோடு, மேலும் மேம்படுத்தவும், அரசாங்கம், வேலைவாய்ப்பு உதவிகள், தொழில்களுக்கான ஆதரவு, குடும்ப நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு உதவித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த வாரம், சிங்கப்பூர் நாணய ஆணையம், அதன் பணவியல் (Monetary), நிதிக் (Fiscal) கொள்கைகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. 2020க்குப் பிறகு முதல் முறையாக அதன் நாணயக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. இது பணவீக்கத்தை மிதப்படுத்துவதுடன், உலகளாவிய நிச்சயமற்ற வணிகங்களினால் எழும் பொருளியல் சவால்களை எதிர்கொள்ளவும் உதவும். இதனால், ஏற்றமடையும் நாணய மதிப்பின் வேகம் குறையும். பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.

அத்துடன், சேவைப் பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி,  தனிமனிதர் வருமான வரித் தள்ளுபடி, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள், மூத்தோருக்கான உதவித்தொகை எனப் பல வழிகளில் அரசாங்கம் பண நெருக்கடியைச் சமாளிக்க உதவி வருகிறது.

துரிதமாய் மாற்றங்களைக் கண்டுவரும் உலகப் பொருளியலின் தாக்கங்களை எதிர்கொண்டு சமாளிக்க தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க முடியும். 

செலவினக் கட்டுப்பாடு, நீடித்த நிலைத்தன்மைக்கு நம்மால் ஆன பங்கு, உற்பத்தித் திறனை வளர்க்க திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வெளிநாட்டுத் திறனாளர்களை வரவேற்று அவர்களை நம் சமூகத்தோடு இணைக்கும் முயற்சிகள், பல இன, மொழி பண்பாட்டுச் சூழலில் ஒற்றுமையாகச் செயல்படுவது என நம்மால் இயன்ற வகையில் உதவலாம்.

நாம் செய்யும் இப்பங்களிப்பு நமக்கு மிக உதவியாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் சேர்ந்ததே இச்சமூகம். ஒவ்வொருவரும் தன்னளவில் மேம்பட்டு, ஒன்றுபட்டுச் செயல்படும்போது ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகம் எந்தச் சவாலையும் எளிதாகக் கடக்கும்.

குறிப்புச் சொற்கள்