மனநலப் பிரச்சினைகளைக் கையாள சிங்கப்பூர் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, திடமான உள்கட்டமைப்புகளை அமைத்து வருகிறது.
மனநலப் பிரச்சினைகளுக்கான 1771 எனும் புதிய உதவி தொடர்பு எண் இடம்பெற்றிருப்பது, ஆக அண்மைய அம்சம். தொலைபேசி அழைப்பு வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் இணையக் கலந்துரையாடல் வாயிலாகவும் உளவியல் ரீதியான முதலுதவியை மனநல நிபுணர்கள் வழங்க ஏதுவாக அது அமைந்துள்ளது.
மனநலன் தொடர்பாக, சமூகத்தில் ஏறத்தாழ 200 உதவி வழங்கும் திட்டங்கள் உள்ளன.
இருந்தபோதும், மனநலனைக் காப்பதும் அதற்கான தீர்வுகளும் இதுபோன்ற உள்கட்டமைப்புகளுக்கும் செயல்முறைகளுக்கும் அப்பாற்பட்டது. இல்லங்களிலும் பள்ளிகளிலும் அன்றாட உறவாடல்களிலும் மனநலனைக் காக்கும் தீர்வுகள் உள்ளன.
மனநலக் கழகம் 2023ஆம் ஆண்டு நடத்திய தேசிய இளையர் மனநல கருத்துக்கணிப்பு, 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்றில் ஒரு இளையர் மோசமான அல்லது மிக மோசமான மனச்சோர்வையோ மனக்கலக்கத்தையோ, மனஅழுத்தத்தையோ எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது.
மனநலப் பிரச்சினைகளே 10 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்டோரின் உடற்குறைக்கும் மரணத்திற்கும் இட்டுச்செல்லும் காரணிகளில் முதன்மையாக உள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
மனஅழுத்தம் தொடர்பான நோய்களில் ஓராண்டு சுகாதாரப் பராமரிப்புச் செலவு கிட்டத்தட்ட $3.1 பில்லியன் என்பதை 2019ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்கள் அன்றாடம் படிக்கும் செய்திகள் அன்று. சிங்கப்பூர் சமூகத்தில் இளையர்களும் குடும்பங்களும் உளவியல் ரீதியான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதைக் காட்டும் எச்சரிக்கை ஒலி.
இதற்குத் தீர்வாக, அரசாங்கம் அமைக்கும் செயல்முறைகள் அடித்தளமாக அமைகின்றன. எனினும், மனிதத் தொடர்புகளே மனநலனுக்கு சிறந்த மருந்தாக அமைய முடியும்.
அணுக்கமான கலந்துரையாடல்களும் மனதளவில் இணைப்பும் பிரச்சினைகள் இருந்தாலும் அது வளராமல் இருக்க உதவும்.
இருப்பினும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள குடும்பங்கள் இன்னும் தயங்குகின்றன. பெற்றோர் மத்தியில் குழுக்கள் அமைத்து ஒருவருக்கொருவர் இதுகுறித்த வெளிப்படையான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது நம்பிக்கையை வளர்க்கலாம்.
சமூகத்தில் பள்ளிகள், அடித்தளக் குழுக்கள், விளையாட்டு மன்றங்கள், சமய அமைப்புகள் போன்றவை மனநலன் குறித்த கலந்துரையாடல்களை இயல்பானதாக்க முனையலாம். அவை உயிர்களைத் தற்காக்கும் நல்லதோர் பாதுகாப்பு வலையாக அமையும்.
கூர்ந்து கேட்டறியும் தொண்டூழியர் குழுக்களும் ‘கிரஸ்ட்’ போன்ற சமூக மனநலக் குழுக்களும் ‘பிடிஎல்’ எனும் ‘பியோண்ட் தி லேபல்’ குழு போன்றவையும் சமூகத்தின் ஆதரவும் அக்கம்பக்கத்தாரின் உதவியையும் பறைசாற்றுகின்றன.
அண்மைய ஆண்டுகளில் அமைதியான, இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
இளம் சிங்கப்பூரர்கள் பலர் தங்களுக்கு சோர்வு ஏற்படும்போதோ பதற்றம் அல்லது தலைக்கு மேல் பிரச்சினைகள் இருப்பதுபோல தோன்றும்போதோ செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இயந்திர மனிதர்களின் உதவியை நாடி வருகின்றனர்.
சிலர் இந்தக் கருவிகளை எந்நேரமும் உடன் இருக்கும் உற்ற நண்பராகப் பார்க்கின்றனர்.
இயந்திர-வழி கலந்துரையாடல்களில் பிரச்சினைகளைக் கொட்டி தீர்வை எதிர்பார்க்கும் சிங்கப்பூர் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மனநல ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஏற்படும் தேவைக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளை நாடிய சிங்கப்பூரில் உள்ள ‘ஜென் ஸி’ எனும் இளம் தலைமுறையினரின் விகிதம் 40% என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிபுணத்துவப் பராமரிப்புக்கு மாற்றாக இதைக் கருதக்கூடாது என்றாலும் இந்தப் போக்கு இளையர்கள் எவரிடமாவது பேச வேண்டும் என்று தவிப்பதைக் காட்டுகிறது.
தொழில்நுட்பக் கருவிகள் வழங்கும் ஆதரவை எவ்வாறு தாங்கள் வழங்க முடியும் என்பதை குடும்பங்களும் பள்ளிகளும் சமூகமும் சிந்திக்க வேண்டும். கருவிகள் உதவி நாடும் முதல் படியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆதரவுக்கரம் நீட்டி உறவுகள் மூலம் பிரச்சினைகளைக் களைய முனைய வேண்டும்.
மனிதர்களுடன் உறவாடாமல் இயந்திரத்திடம் பேசுவதற்குக் காரணம் மனித உறவுகள் அணுக்கமாக இல்லையெனக் கூறப்பட்டால், அது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டவில்லை; அனைவருக்கும் வருத்தமளிக்கும் போக்கைக் காட்டுகிறது.
மனநலன் என்பது எந்த வயதினரையும் எந்நேரத்திலும் பாதிக்கக்கூடியது.
அதுவும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பாதிக்கப்பட்டதே தெரியாமல், ஓடிக்கொண்டிருப்பவர்கள் உண்டு. வழிகாட்டிகளும் உள்கட்டமைப்புகளும் மனநலனைப் பேண நாம் பெற்றுள்ள காப்புறுதியாக எண்ணி இல்லங்களிலும் வகுப்பறைகளிலும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தியிலும் வேலையிடங்களிலும் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.