செயற்கையோ இயற்கையோ முயற்சியே முக்கியம்

செயற்கையோ இயற்கையோ முயற்சியே முக்கியம்

3 mins read
030c5f16-67d8-465c-865d-0c6d5f8f5e81
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத் துறையை எந்த அளவுக்கு உருமாற்றி வருகிறது என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் மே தினப் பேரணி உரையில் முன்வைத்தார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘எங்குப் பார்த்தாலும் இயற்கைக் காட்சி’ என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம், நேரடியாகக் கண்டிருப்போம். 

இன்று எங்குப் பார்த்தாலும் செயற்கையின் ஆட்சி. எந்தப் பக்கம் திரும்பினாலும் எதைச் செய்தாலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது. 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறியாமலேயே நம் அன்றாட வாழ்க்கைக்குள் வந்துவிட்டது. கைப்பேசியைப் பயன்படுத்தும்போதே பலரும் அதனை உணர்ந்திருக்கலாம். 

முக்கியமாக, வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அதிவேகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வேலை செய்யும் முறையை அது மாற்றி வருகிறது. 

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உலகின் வேகத்திற்கு ஈடுகொடுத்துத் துடிப்புடன் செயல்படுவது சிங்கப்பூரின் இயல்பு. பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மே தினப் பேரணி உரை அதற்குச் சான்றாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத் துறையை எந்த அளவுக்கு உருமாற்றி வருகிறது என்பதை அவர் பல எடுத்துக்காட்டுகளுடன் முன்வைத்தார். 

கூகல் நிறுவனத்தில் ஈராண்டுக்கு முன்னர், கணினி நிரலாக்கத்தில் (coding) செயற்கை நுண்ணறிவின் பங்கு 25 விழுக்காடாக இருந்தது. இன்று அது 75 விழுக்காட்டுக்கு உயர்ந்திருப்பதைப் பிரதமர் சுட்டினார். முன்பு ‘சேட்பாட்’ எனும் தானியக்க உரையாடல் வசதி இருந்தது. இன்று ‘ஏஐ முகவர்கள்’ எனும் தானியக்க மென்பொருள் கட்டமைப்புகள் வந்துவிட்டன. அவை கேள்விகளுக்குப் பதில் சொல்வதோடு சிக்கலான பணிகளுக்குத் தீர்வுகளைத் திட்டமிட்டும் கொடுக்கின்றன. அத்துடன், அவற்றைச் செயல்படுத்தும் முறைகளையும் பட்டியலிடுகின்றன என்பதைச் சுட்டினார் திரு வோங். 

தொழில்நுட்பம், உற்பத்தித்திறனை மட்டும் பாதிக்காது, மாறாக ஒட்டுமொத்தத் தொழில்துறையின் இயக்கத்தில் இடையூறு ஏற்படுத்தி அதனை மாற்றியமைக்கும் என்றார் அவர். இத்தகைய இடையூறுகள் காலப்போக்கில் நல்ல முடிவிற்கு இட்டுச் செல்லுமென்றாலும் அதுவரை போகும் தொலைவு பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஒளிமயமான எதிர்காலத்தை மனத்தில் வைத்து, இக்கட்டுகளைச் சமாளிப்பதே உத்தமம்.

இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் சவால்களை முன்வைக்கும். இவற்றையெல்லாம் சிந்தனையில் கொண்டுதான் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது ‘தேசிய ஏஐ மன்றம்’ அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். புதிய சுற்றுச்சூழலில் முன்னேறிச்செல்ல நாட்டைத் தயார்ப்படுத்துவதற்கு அது கைகொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

முக்கியமாக, நிறுவனங்கள் தங்களது செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ள வேண்டும்; வேலைகளை மறுவடிவமைக்க வேண்டும். ஊழியர்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாடு, தொழில்நுட்பத்துடன் கைகோத்து முன்னேறுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். இந்த மூன்றையும் இணைக்கும் நோக்கத்துடன்தான் புதிய மன்றம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. 

‘வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம்’ எனும் அதனை வழிநடத்துவதில் மனிதவள அமைச்சு, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை கைகோத்துள்ளன. ஊழியர்கள் மேலும் சிறந்த முறையில் திறன்களை வெளிப்படுத்தவும் நிறுவனங்கள் வளர்ச்சிகாணவும் மன்றம் உதவும் என்று நம்பிக்கை அளித்துள்ளார் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்.      

இந்நிலையில் சிங்கப்பூரை, ‘ஏஐ’ புத்தாக்க நடுவமாக உருமாற்றுவதில் உறுதியுடன் இருக்கிறார் பிரதமர் வோங். அதற்கான ஆற்றல்களை வளர்த்து, பொருளியலின் பல்வேறு துறைகளும் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் முனைப்புடன் உள்ளது அரசாங்கம்.

எந்த மாற்றம் வந்தாலும் அதற்கு அஞ்சக்கூடாது, துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது பிரதமரின் மே தினப் பேரணி உரை. 

செயற்கை நுண்ணறிவு தற்போது இடையூறுகளை ஏற்படுத்தினாலும் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைத் தழுவும் நிறுவனங்கள் போட்டித்தன்மையோடு விளங்கும். மற்றவை இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு வேலையையும் அரசாங்கத்தால் காப்பாற்ற முடியாது. ஆனால், ஒவ்வோர் ஊழியரையும் அது காப்பாற்றும் என்ற பிரதமரின் உத்தரவாதம் நிம்மதி தருகிறது. 

செயற்கை நுண்ணறிவுக் கடலைப் பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொள்வது மட்டும் போதாது, அதில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்கிறார் திரு வோங். அதே நேரம், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளும் ஆதரவும் தரப்படும் என்ற உறுதியையும் அவர் வழங்கியிருக்கிறார்.

“நீங்கள் முயற்சி எடுங்கள். உங்கள் பாதையில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் அரசாங்கம் உடன்வரும். நாங்கள் இருக்கிறோம்,” என்ற அவரின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன. 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்க, அரசாங்கம் தயாராக இருக்கிறது. இயற்கை அறிவோ செயற்கை நுண்ணறிவோ, பயிற்சிகளைப் பெற அனைவரும் முயற்சி செய்வது முக்கியம்.

புதியனவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஏக்கமும் தாகமும் அவரவர் கைகளில்தான் உள்ளன.

குறிப்புச் சொற்கள்