இளையர்களின் அளவற்ற ஆற்றலையும் பாரம்பரிய இசையின் ஆழத்தையும் ஒருசேரக் காட்டும் விதமாக சிங்கப்பூர் இந்திய இளையர் இசை, பாடகர் குழுவின் (SIYOC) ‘யுவராகம்’ இசை நிகழ்ச்சி மார்ச் 24ல் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மையத்தில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இந்த இசைச் சங்கமம், கர்நாடக இசை முதல் மேற்கத்திய இசைவரை பல்வேறு பாணிகளை நயமாக உள்ளடக்கி ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழுவின் (SIOC) 40 ஆண்டு கலைப் பயணத்தின் மைல்கற்களில் ஒன்றாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் இந்திய இளையர் இசை, பாடகர் குழு உருவாக்கப்பட்டது.
குழுவின் நிறுவனரும் நடத்துநருமான திருவாட்டி லலிதா வைத்தியநாதன் வழிகாட்டலில் அது, இளைய தலைமுறையினரிடம் இந்தியச் செவ்விசையைக் கொண்டுசேர்க்கிறது.
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, சிங்கப்பூரின் பன்மொழிப் பாடல் தொகுப்பு என ‘யுவராகம்’ நிகழ்ச்சி, பலதரப்பட்ட ரசனைகளுக்கு ஈடுகொடுத்திருந்தது.
நிகழ்ச்சிக்குத் தயாராவதற்காக மாணவர்கள் கடந்த ஓராண்டாகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தேசிய சேவை, பல்கலைக்கழகப் படிப்பு, பள்ளி வேலைகளுக்கு இடையிலும் வார இறுதி நாள்களை முழுமையாய் இசைக்கு அர்ப்பணித்ததாக மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
“வீணையில் மேற்கத்திய இசையை மீட்டும்போது சில நுணுக்கங்களை மாற்ற வேண்டியிருந்தது. ஆசிரியர்களின் வழிகாட்டல், புதிய பாணிக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள உதவியது,” என்று வீணைக் கலைஞர் திருத்தி ஜெகநாதன், 18, தெரிவித்தார்.
அதேபோல, வயலின் கலைஞர் யுவணித் ஜெரால்ட், பாடகர் வருண் ரவி ஆகியோர் புதிய இசைக்கோப்புகளைக் கற்றுக்கொள்வது தங்களுக்குச் சிறந்த அனுபவமாய் இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
மாணவர்களை மேடைக் கலைஞர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களை வருங்கால ஆசிரியர்களாகவும் இந்தக் குழு உருவாக்குகிறது. இந்த நிகழ்ச்சியில் சில பாடல்களுக்கு மாணவர்களே இசையமைத்திருந்தனர்.
“எங்கள் மாணவர்களில் ஒருவரான ஆதித்யா இந்த நிகழ்ச்சிக்காகப் புதிய பாடலை இசையமைத்துள்ளார். மாணவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி அவர்களை வழிநடத்துவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது,” என்று குழுவின் கலை இயக்குநரும் மூத்த பயிற்றுநருமான திருவாட்டி விக்னேஸ்வரி வடிவழகன் தெரிவித்தார்.
இந்த இசை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ரசிகர்கள், இளையர்களின் திறமையைக் கண்டு நெகிழ்ந்தனர். கர்நாடக இசை பற்றி அறிமுகம் இல்லாதவர்கள்கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ரசித்து இன்புற்றதாகக் கூறினர்.
மேற்கத்திய இசையோடு பழகிய இன்றைய தலைமுறைக்கு, இந்தியப் பண்பாட்டையும் இசையையும் கொண்டுசெல்ல இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
“பலவிதமான கவனச் சிதறல்கள் உள்ள இந்தக் காலத்தில், இளையர்கள் தங்களின் வேர்களை மறக்காமல் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்வது பாராட்டுக்குரியது,” என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த விலாஷினி ஹரிராம் கூறினார்.

