சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறை மருத்துவமனை சாராத முறைக்கும் மின்னிலக்க முறைக்கும் மாறி வருகிறது. இந்நிலையில், தேசிய பல்கலைக்கழக சுகாதார முறையைச் சேர்ந்த 16,000 ஊழியர்களும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கல்விக் கழகத்தில் இனி பயிற்சி பெறலாம்.
இந்த தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பின்கீழ் வரும் கல்விக்கழகம் ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தலைமைத்துவப் பயிற்சி, கலாசாரக் கட்டடம், தகவல் தொழில்நுட்பம் போன்ற கிட்டத்தட்ட 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 8,000 ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக கல்விக் கழகத்தின் மனிதவள அதிகாரி திருவாட்டி பிரிசில்லா டியோ கூறுகிறார்.
மேலும், இந்தக் கல்விக் கழகத்தில் தொடக்கமாக,மொத்தம் சுமார் 40 பயிற்சி வகுப்புகள் தொழிலாளர் இயக்கம், மற்ற பங்காளித்துவ அமைப்புகளுடன் ஏற்படுத்தப்படும் என்றும் திருவாட்டி பிரிசில்லா டியோ விளக்கினார். ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் யாவும் இலவசமானவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றிக் கருத்துரைத்த தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு, முத்தரப்பு ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதார குழுமம் ஒன்றின்கீழ் சுகாதாரக் கல்விக் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து மேலும் கூறிய தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் கல்விக் கழகம், அரசாங்கம், நிர்வாகம், தொழிற் சங்கம் ஆகிய மூன்று முத்தரப்பும் மருத்துவம், தாதிமைத் தொழில், அவை சார்ந்த சுகாதார, நிர்வாக, மற்ற துணை தொழில் துறைகளுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளை வழங்கும் என்று கூறியது. இதில் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சித் திட்டங்களுடன் ஊழியர் அங்கீகார பயிற்சிகளும் அடக்கம் என்றும் அது தெளிவுபடுத்தியது.
இந்தப் பயிற்சித் திட்டங்களை தேசிய தின அனுசரிப்பு நிகழ்ச்சியின்போது வியாழனன்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிமுகம் செய்தார்.
அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஓங், இந்தக் கல்விக் கழகத்தை நிறுவும் பணி மூன்றாண்டுகளாக நீடித்தது என்றார். தொடர்ந்து பேசிய திரு ஓங், இந்தக் கல்விக் கழகம் சுகாதாரக் குழுமத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விளக்கினார்.
சுகாதாரப் பராமரிப்பு முறை பெரிய அளவிலான சீர்திருத்தம் கண்டுவரும் நிலையில், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணி காலப்போக்கில் மாறிவரும் என்று அமைச்சர் கூறினார்.
“சுகாதாரப் பராமரிப்பு முறை நெருக்கமான மருத்துவமனைகளிலிருந்து சமூகத்துக்கு மாறிவரும் சூழலில் பெரிய, புதிய வாய்ப்பு காத்திருக்கிறது. பணிகளும் வாய்ப்புகளும் சீர்திருத்தம் காணும். அப்பொழுது புதிய வேலை சார்ந்த பொறுப்புகளுக்கு நமது எதிர்கால ஊழியர்களைத் தயார் செய்ய பயிற்சி வகுப்புகள் தேவைப்படும்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் விளக்கினார்.


