இங் கோக் சோங்: அரசு அங்கீகாரம் பெற்றவருக்கும் மற்றவருக்கும் வேறுபாடு உண்டு

3 mins read
db89c983-78d4-4724-bae5-933d8b9fa6d0
அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இங் கோக் சோங், 75, ஞாயிற்றுக்கிழமை ஹார்பர்ஃபிரண்டில் உள்ள சியா இம் உணவு நிலையத்திற்கு வருகை அளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இங் கோக் சோங், 75, ஞாயிற்றுக்கிழமை சியா இம் உணவு நிலையத்திற்கு வருகை அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். சமூக ஈடுபாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக தான் சில அமைப்புகளுக்குச் செல்ல விரும்பி அவற்றிடம் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அவை அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாகவும் திரு இங் குறிப்பிட்டார்.

“அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஒருவருக்கும் என்னையும் திரு ஜார்ஜ் கோ, திரு டான் கின் லியன் ஆகியோரைப் போன்றோருக்கும் வேறுபாடு இருக்கிறது,” என்று திரு இங் கூறினார்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் இந்த மூவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

தனக்குச் சில அமைப்புகள் அனுமதி மறுத்துவிட்டது பற்றி கருத்து கூறிய திரு இங், “நீங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக இருக்கும்போது உங்களுக்கு முக்கிய பிரமுகர் வரவேற்பு இருக்கும். அப்படி இல்லை என்றால் முக்கியமற்ற பிரமுகராக நீங்கள் கருதப்படுவீர்கள்,” என்று தெரிவித்தார்.

“இருந்தாலும் உணவங்காடி நிலையங்கள், ஈரச் சந்தைகளில் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கு சாதாரண மக்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

திரு இங், பொதுச் சேவையில் 45 ஆண்டு காலம் பதவி வகித்து இருக்கிறார். ஜிஐசி நிதியம், சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றிலும் அவர் சேவையாற்றி இருக்கிறார்.

அரசியல் தலைமைத்துவத்திற்கும் நிறுவனங்களில் வேலை பார்த்திருப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

திரு டான் கின் லியன் சனிக்கிழமை தெரிவித்து இருந்த ஒரு கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய திரு இங், பொதுச் சேவையில் இருக்கும் ஒவ்வொருவருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்கள் என்று கூறுவது சரியில்லாத ஒன்று என்று தெரிவித்தார்.

திரு கோவும் திரு டானும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் பட்சத்தில் யாராவது ஒருவர் விலகிக்கொண்டு மற்றவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று திரு டான் சனிக்கிழமை குறிப்பிட்டு இருந்தார்.

ஆளும் கட்சியைச் சாராத சுதந்திரமான ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை சிங்கப்பூரர்களுக்கு வழங்குவதற்காகவே அதிபர் தேர்தலில் போட்டியிடத் தான் முடிவு செய்ததாகவும் திரு டான் குறிப்பிட்டார்.

நேரடியாக வேட்பாளர்கள் கலந்துகொள்ளக்கூடிய தேர்தல் பொதுக் கூட்டங்களைத் தேர்தல் துறை ஊக்குவிக்கவில்லை. இது பற்றி கேட்டபோது, இது சரிதான் என்று திரு இங் கூறினார்.

இணையம் மூலம் பேரணி நடத்தி பொதுமக்களுக்குத் தன்னுடைய கருத்துகளையும் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணங்களையும் விளக்கும் சாத்தியம் பற்றி ஆராயப் போவதாகவும் திரு இங் குறிப்பிட்டார்.

இளையர்களை எட்டி அவர்களிடம் நிதித்துறை பற்றிய அறிவைப் பெருக்கலாம் என்றும் தொழில் முனைப்பு உணர்வை அவர்களிடத்தில் உருவாக்கலாம் என்றும் நம்புவதாக திரு இங் தெரிவித்தார்.

திரு இங் தன்னுடைய வருங்கால மனைவியான சிபில் லாவுடன் அந்த உணவு நிலையத்தில் கடைக்காரர்களோடும் பொதுமக்களோடும் கலந்துரையாடினார்.

குறிப்புச் சொற்கள்