ஆண்டு இறுதியில் வரும் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் நோய்த் தொற்றை மறந்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் தாய்லாந்து அரசாங்கம் ஒரு நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தியது.
சிறுவர்கள் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று கிறிஸ்மஸ் விழாவிற்காகக் காத்திருப்பது வழக்கம்.
வழக்கமாக கிறிஸ்மஸ் தாத்தா வந்து அன்பளிப்புகளை வழங்குவார். ஆனால் இம்முறை கிறிஸ்மஸ் தாத்தா போன்று சிவப்பு வண்ணத்தில் காலுறை, முகக் கவசம் அணிந்து நான்கு யானைகள் பள்ளி ஒன்றில் நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டன. அவை சிறுவர்களுக்கு அன்பளிப்பாக முகக் கவசங்களை வழங்கின.
யானைகளின் வருகையும் அன்பளிப்பும் சிறுவர்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்ததுடன் கிருமி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. யானைகளுடன் சிறுவர்கள் படமெடுத்துக்கொண்டதோடு யானைகள் வழங்கிய முகக் கவசத்தையும் பெற்றுக் கொண்டனர்.
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே நோய்த் தொற்றைத் தவிர்க்க முடியும் என்ற எண்ணம் இந்த யானைகளும் அவற்றின் முகக் கவசங்களும் கட்டாயம் சிறுவர்களுக்கு நினைவில் வரும் வண்ணம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பலரும் வரவேற்றனர்.

