டெல் அவிவ்: உலக நாடுகள் பலவற்றில் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதில் மிக அதிக விகிதமாக, சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டு உலகளவில் முதலிடத்தில் உள்ளது இஸ்ரேல்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உலகளாவிய கண்காணிப்பு வலைத்தளத்தின் கணக்குபடி, இஸ்ரேலில் ஒவ்வொரு 100 பேருக்கும் 12 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி வழங்கப்பட்ட விகிதம் 11.55ஆக உள் ளது.
இந்த விகிதம் பஹ்ரைனில் 3.49 ஆகவும் இங்கிலாந்தில் 1.47 ஆகவும் உள்ளது.
பிரான்சில் மொத்தம் 138 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி இஸ்ரேலில் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 150,000 பேருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.
சுமார் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பலனளிக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில், முதல் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை இந்த கணக்கெடுப்பு அடிப்படையாக கொண்டுள்ளது.

